திங்கள், 27 ஜனவரி, 2020

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

 

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!
காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

காஞ்சிபுரம் சென்னையை அடுத்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பட்டு நெசவு தவிர இயல்பில் இது ஒரு கோயில் நகரம், சோழர் காலத்திலும் அவர்களுக்குப் பின்னான பல்லவர் காலத்திலும் கட்டப்பட்ட கலைநயம் மிக்க பல கோயில்கள் இந்நகர் முழுதும் நிறைந்திருக்கின்றன. காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இரண்டுமே பல்லவர் கட்டிடக் கலைக்கு மகத்தான சான்றுகள். அது தவிர பொற்கூரை வேயப்பட்ட காஞ்சி காமாட்சியம்மன் தரிசனம் பெறாதோர் தமிழ்நாட்டில் எவருளர்? இங்குள்ள கோயில்களை ஒருமுறை கூட வாழ்நாளில் காணும் வாய்ப்பில்லாதோர் கூட அங்குள்ள சிலா ரூபங்கள், கோபுர வடிவங்கள், கடவுள் பிரதிமைகளை இங்கிருந்து உலகம் முழுமைக்கும் விற்பனை செய்யப்படும் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளின் ஜரிகைக் கரைகள் மற்றும் முந்தானை அலங்காரத்தில் கண்டு ரசிக்க முடியும். அத்தனை சிறப்பாக இங்குள்ள நெசவாளர்கள் கோயில் சிற்பங்களின் மகத்துவமிக்க அடையாளங்களை தங்களது நேர்த்தியான நெசவில் பாந்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இங்கே நெசவு செய்யப் படும் 90 சதவிகிதப் புடவைகளும் பட்டுப் புடவைகள் மட்டும் தான். வெறும் 10 சதம் தான் பிற புடவைகளின் நெசவுக்கு ஒதுக்கப்படுகிறது.


தமிழகத்தின் செல்லப் புடவை!

காஞ்சீவரம் பட்டைப் பற்றி புதிதாக நாம் வேறென்ன சொல்லி விட முடியும்! பிறந்து தொட்டிலில் போடப்படும் குழந்தைகள் முதற்கொண்டு ஆண்டு அனுபவித்துப் பழுத்துப் பழமாகி கிழமானாலும் நம்மை விடாது பின் தொடரும் மோகம் அல்லவா இந்த காஞ்சிப்பட்டு. தமிழகத்தின் செல்லப் புடவை இது! ஒவ்வொரு தீபாவளிக்கும் வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தலை தீபாவளிக்கோ, தலைப் பொங்கலுக்கோ மட்டுமாவது பட்டு வாங்கிக் கட்டாதோர் யார்! பட்டில் அப்படி என்ன விசேஷம் என்று யாரும் கேட்டு விட முடியாது. தமிழ் நாட்டைப் பொருத்த வரை பட்டு வாங்கி உடுத்துக் கொள்வது என்பது வெறும் அந்தஸ்து மற்றும் பகட்டுக்கான வெளிப்பாடு மட்டுமில்லை அது கலாச்சார ரீதியாக அவரவர் ரசனை சார்ந்த வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அயல் மாநிலங்களை விட்டு விடலாம் நமது தமிழகத்தில் மட்டுமே ஆரணி, தர்மாவரம், திருபுவனம், சின்னாளம் பட்டி, என்று பல இடங்களில் பட்டு நெசவு நடைபெறுகிறது என்றாலும் காஞ்சிப்பட்டின் தனித்தன்மை தான் பெரிதாகப் பேசப்படுகிறது.


காஞ்சீவரம் நெசவுத் தொழில்நுட்பம்:

காஞ்சீவரம் பட்டுப் புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் இரண்டு பேர் தறியில் அமர வேண்டும். இந்த நெசவுக்கு மூன்று விதமான விண் குழித்தறிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தறிகளில் பட்டுப் புடவைகள் ’அடை’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகின்றன. அதாவது உடல் பகுதி தனியாகவும், பல்லு எனப்படும் முந்தானைப் பகுதி தனியாகவும், பார்டர் ஜரிகைப் பகுதி தனியாகவும் முன்று விதமாக தனித் தனியாக நெசவு செய்யப்படுகிறது. காஞ்சீவரம் பட்டு நெசவில் தூய மல்பெரி பட்டு நூல் மற்றும் தூய தங்க, வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப்படுவதால் இந்திய நெசவுக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான வகை வகையான பட்டுப் புடவைகளில் காஞ்சிப் பட்டு தான் பிரதானமாக முதல் இடம் பிடித்திருக்கிறது.

உடல் முழுதும் சரிகையில் இழைக்கப்பட்டு நெசவு செய்யப் படும் தூய காஞ்சிப் பட்டுப்புடவை ஒன்றின் எடை சுமார் 500 கிராம் வரையிலும் கூட இருக்கலாம். நெசவில் தூய வெள்ளி மற்றும் தங்க நூல் பயன்படுத்தப் படுவதால் புடவையின் கனம் பிற பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் நேர்த்தியிலும், மனம் கவரும் தன்மையிலும், மென்மையிலும் இதை அடித்துக் கொள்ள இன்னொரு புடவை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொன்னால் கூட அது மிகையில்லை.

காஞ்சீவரத்தில் கைத்தறிகளில் பட்டுப்புடவை எப்படி நெசவு செய்யப் படுகிறது என காட்சியாகக் காண விரும்புவோர் கீழே உள்ள யூ டியூப் விடியோ இணைப்பை அழுத்திப் பாருங்கள்.


விடியோவுக்கான விளக்கம்:
தறியில் அமர்ந்து நெசவு செய்வதற்கு முன்பாக முதலில் கோரா எனப்படும் வெள்ளை பட்டு நூல்களை கைகளால் சுழற்றி தனித் தனியாகப் பகுத்து சிறு சிறு நூற்கட்டுகளாக மாற்றிக் கொள்கின்றனர். பிறகு இந்த கோரா நூற் திரட்டுகளை துல்லியமாக 0.008 கிராம் மட்டுமேயான அளவில் சாயப் பொடி கலந்து கொதிக்கும் நீரில் நீளமான கொம்புகளில் தொங்கலிலிட்டு மாற்றி மாற்றி முக்கி எடுக்கின்றனர். கோரா நூலில் சாயம் ஏறியதும் சாயமேற்றப்பட்ட நூல்கள் அறை வெப்பநிலையில் குளிர்ந்த நீரில் மீண்டும் மீண்டும் அமிழ்த்தி எடுக்கப்பட்டு அதிகப்படியான சாயம் வெளியேற்றப்படுகிறது. பிறகு மாற்றி மாற்றி உதறியும் பிழிந்தும் கோரா நூலில் ஈரம் அகற்றும் வேலை தொடங்குகிறது. ஈரம் அகற்றப்பட்ட சாயமேற்றப்பட்ட பட்டு நூல் அடுத்த படியாக அந்தந்த நிறங்களுக்கு ஏற்ப சர்க்காவில் உருளை வடிவ தனித் தனி நூற்கண்டுகளாக காட் போர்டுகளில் ஸ்பிண்டில்களாகச் சுற்றப்படுகிறது. இந்த உருளை வடிவ ஸ்பிண்டில்கள் அடுத்தபடியாக தறியில் பிணைக்கப்பட்டு நெசவாளர்களால் தனித்துவம் மிக்க பட்டுப் புடவைகளாக நெசவு செய்யப்படுகின்றன. இந்த முறையில் ஒரு புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் 15 நாட்கள் தேவைப்படுகின்றனவாம்.

காஞ்சிப் பட்டின் மற்றொரு சிறப்பம்சம் அவை மடிக்கப்பட்டு கடைகளில் அடுக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு முறை புடவையைப் பிரித்து விட்டோம் என்றால் கடைக்காரர்கள் உதவியின்றி நம்மால் அவற்றை பழைய படி நறுவிசாக மடிக்கவே முடியாது. இதோ கீழே இணைக்கப்பட்டுள்ள இந்த யூ டியூப் விடியோவில் கோரா நூலைப் பிரித்தெடுத்து அது தறியில் புடவையாக மாறுவதிலிருந்து பிறகு ஒவ்வொரு புடவையாக நேர்த்தியாக மடித்து விற்பனைக்காக அடுக்கப்படும் அழகைக் காணலாம்.


காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீகம்:

இந்து புராணக் கதைகளின் படி காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீக கர்த்தாவாகக் கருதப்படுபவர் துறவி ”மார்கண்டேயர்” மனிதர்களுக்கு மாஸ்டர் டெய்லர் என்று சிலர் இருப்பது போல இவர் கடவுள்களுக்கு மாஸ்டர் நெசவாளர். தாமரைப் பூ தண்டிலிருந்து நூல் எடுத்து இந்துக் கடவுள்களுக்கு இவர் ஆடைகள் நெசவு செய்து தருவாராம். இதிலும் சில கடவுள்களுக்கென்று சில ஸ்பெஷல்கள் நெசவுகள் உண்டு. சிவனுக்கு பருத்தி நெசவு, விஷ்ணுவுக்கு பட்டு நெசவு என்று ஸ்பெஷலாக மார்கண்டேயர் நெய்து கொடுத்ததாக நெசவாளக் குடும்பங்களில் கதைகள் சொல்லப் படுகின்றன. அது மட்டுமல்ல அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்று வகைப்படுத்தப் படும் ஏழு முக்கியமான இந்தியப் புனிதத் தலங்களுக்கான வரிசையில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடனான கோயில்கள் மற்றும் கைத்தறிப் பட்டு நெசவு, எனும் பெருமைக்குரிய காரணங்களால் காஞ்சிக்கும் வேத காலம் தொட்டு முக்கியப் பங்குண்டு.

என்றென்றும் மணப்பெண்களுக்கான சிறப்புப் புடவை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிப் பட்டு என்பது திருமண விழாக்கள் மட்டுமல்ல வாழ்வின் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் உடுத்துவதற்கு உகந்த ஒரு பெருமை மிகு அடையாளம். பிற விசேஷமான நாட்களில் வேறு புடவைகளுக்கு முக்கியத்துவம் தந்தாலும் மணப்பெண்களுக்கான சிறப்பு உடையாக இன்னமும் கோலோச்சுவது காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் தான். ஆனால் இப்போது பவர்லூம்கள் அதிகரித்து வருவதால் ஹேண்ட்லூம்களுக்கான முக்கியத்துவம் குறைந்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்லதொரு தீர்வாகத் தான் மத்திய அரசு ”இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்” என்ற விசயத்தை தொடங்கியிருக்கிறது. தொடங்கி ஓராண்டுக்கு மேலாகிறது ஒரே தளத்தில் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான கைத்தறி நெசவாடைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதைத் தாண்டி இதில் நெசவாளர்களுக்கு குறிப்பிடத்தகுந்த நன்மைகள் என்ன கிடைக்கக் கூடும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக