கணுக்கால் ,குதிகால் வலியிலிருந்து விடுதலைப் பெற…!!!
தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இசதன் பாதிப்பு இருக்கும்.
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.
கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.
காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.
பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது. கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.
கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.
இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.
இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.
பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன. உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும். அதுபோல்தான் இனிப்பு நீர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது. இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.
இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக்கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகி விடுகின்றது.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.
பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.
உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.
மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.
முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்றவற்றாலும் உருவாகலாம்.
கணுக்கால் வலி வருமுன் காக்க:
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.
நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும். கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.
கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.
மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.
கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும். காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.
வசம்பு 5 கிராம்
மஞ்சள் 5 கிராம்
சுக்கு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
எடுத்துப் பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.
எருக்கின் பழுத்த இலை 5
வசம்பு 5 கிராம்
இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்.
-------------------
குதி காலில் வலி நீங்க என்ன வழி? உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
ராஜு சரவணன்
குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 M.L.) சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.
திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் "லும்பார்" முள்ளெலும்பில் அழுத்தம் எற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாகுகிறது.
உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
நீங்கள்உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 M.L அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 M.L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 M.L - 30 M.L வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.
தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 M.L தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
சில ஆசனங்களால் நிவாரணம்
வஜ்ராசனம்
உஷட்டிராசனம்
சர்வாங்காசனம்,
ஹலாசனம் மற்றும்
சிரசாசனமும் வலி குறைக்கும்.
கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக 'ஏலாதி சூர்ணம்' கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது பழமொழி.
புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச் சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.
அனுபவத்தில் சில:
தவிடும் உப்பும் வறுத்து ஒத்தடம் தரலாம்.
தினசரி மிதமான வென்னீரில் கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அமிழ்த்தி வைத்திருக்கலாம்.
வில்வக்காய் கிடைத்தால் அதை சுட்டு நசுக்கி எருக்கிலை பழுப்பை அதன் மேலிட்டு குதிகால்களை ஒத்தடம் கொடுக்கலாம். (வலி தீரும் வரை தினசரி செய்க)
மிகு பித்தம் குறைய மைக்கொன்றை இலைகளை காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட (சுமார் 48 நாட்கள்) வெகுவாய் வலியற்றுப் போகிறது மாயமாய்.
மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா,(Silica) லைக்கோபோடியம் (Lycopodium)போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது.
பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது.
உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள வளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.
வெற்றிலை நெல்லி ரசம்
தேவையானவை:
முழு நெல்லிக்காய் - 10, வெற்றிலை - 20,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 4,
பூண்டு - 6 பல்,
வால் மிளகு,
சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்:
குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
நன்றி மணக்கால்அய்யம்பேட் ப்ளாக்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக