சனி, 8 ஏப்ரல், 2017

பெண் நலம் காப்போம் !...பெண் நலம் காப்போம் !


பெண் நலம் காப்போம் !...பெண் நலம் காப்போம் !

30 வயது என்றதுமே பெண்கள் பலருக்கும் , ‘ வயதாகுதே . . . ’ என்ற கவலை வந்துவிடுகிறது. குடும்பம் , குழந்தைகள் , பணிச்சுமை எனப் பம்பரமாய் சுழன்றாலும் , ஏனோ வாழ்க்கையில் ஒருவிதப் பிடிப்பின்மையும் , இனம்புரியாத சலிப்பும் வந்துவிடுகிறது. ஆனால் , ஆரோக்கியமான வாழ்க்கைக்கு , வயது ஒரு தடையே அல்ல . ஆறு வயதானாலும் , 60 வயதானாலும் பெண்களின் பலம் ஒன்றுதான் . அந்தந்தப் பருவங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களே , அவர்களை மனரீதியாக அவ்வாறு நினைக்கவைக்கிறது . பிரச்னைகளை எதிர்கொள்ள, ஒவ்வொரு பருவத்திலும் பெண்ணுக்குள் நிகழும் மாற்றங்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

6 வயது முதல் . . .
* பெண் , ஆண் என்ற பாலின வேறுபாடு குழந்தைகளுக்குத் தெரிய ஆரம்பிக்கும் . தான் ஒரு பெண் குழந்தை என்ற புரிதல் இருக்கும்.
* இந்த வயதில்தான் நல்ல தொடுதல் எது . . . கெட்ட தொடுதல் எது ? ( குட் டச் . . . பேட் டச் ) என்பதைச் சொல்லித்தர வேண்டும். இந்த வயதில் ஆண் குழந்தைகளுக்கும் தொடுதல் பற்றிய கோணங்கள் வேறுவிதமாக இருக்கும். அவர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்க வேண்டியது அவசியம் .
* மனதளவில் பெண் குழந்தைகளிடம் , அவர்களின் வளர்ச்சியைப் பற்றி பெற்றோர் அல்லது பெரியவர்கள் புரியவைக்க வேண்டும். சானிட்டரி நாப்கின் எதற்கு , எப்படிப் பயன்படுத்த வேண்டும். சுகாதாரத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துரைப்பது நல்லது .
* எட்டு வயதுக்கு மேல் பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும் . 12 முதல் 14 வயதுக்குள் பூப்பெய்துவதுதான் சரி. எட்டு வயதுக்குள் பூப்பெய்திவிட்டால் , அதை ` பிரிகாஷியஸ் பியூபர்ட்டி ’ என்பார்கள் .
* மார்பக வளர்ச்சி , பிறப்புறுப்பு மற்றும் அக்குள் பகுதியில் முடி வளர்தல் போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படும் . வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னையும் வரலாம் . 14 வயதுக்கு மேல் பருவம் எய்தாமல் இருந்தால் , மகளிர் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.
* வெளியிடங்களில் , வெறும் காலோடு நடப்பதைத் தவிர்க்கலாம் .
* ஹுக்வார்ம் போன்றவை உடலில் படர்ந்து , பிரச்னையை ஏற்படுத்தலாம் . செருப்பு , ஷூ அணிவது அவசியம் .

16 வயதுக்கு மேல். . .
* இந்தியா போன்ற நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கிறது . இது மேல்தட்டு மக்களுக்கும் பொருந்தும் . ஏனெனில் , அவர்கள் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவுகள் அல்ல ; பெரும்பாலும் துரித உணவுகள் . அதனால் பெரும்பான்மையான பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ரத்தசோகை பிரச்னை ஏற்படுகிறது .
* சைவ உணவுகளைவிட அசைவ உணவுகளில் இரும்புச்சத்து அதிகம். சைவ உணவு சாப்பிடுபவர்கள், மாதுளை , பசலைக் கீரை , முருங்கைக் கீரை , கேழ்வரகு , தினை , சாமை , கடலைஉருண்டை, நிலக்கடலை , பொட்டுக்கடலை, வெல்லம் சேர்த்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் .
* வயிற்றுப் பூச்சிகளால்கூட இரும்புச்சத்துக் குறைபாடு வரலாம் . ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூச்சிகளை அழிக்கும் மருந்தைச் சாப்பிட வேண்டும்.
* மாறிய வாழ்க்கைமுறைகளால் , இளம் பெண்களில் ஏராளமானோர் சீரற்ற மாதவிலக்கு , குறைவான அல்லது அதிக ரத்தப்போக்கு , கடும் வயிற்றுவலி போன்ற பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர் . இதற்கு, உடல்பருமனும் முக்கியக் காரணமாக இருக்கிறது .
* படிக்கும் பெண்கள் பெரும்பாலும் நடந்து பள்ளிக்குச் செல்வது இல்லை. பஸ் , வேன் , போன்ற வாகனங்களில் செல்வதால் , உடல் உழைப்பு இல்லாமல் போய்விடுகிறது . இதனால், பெண் பிள்ளைகளுக்குக் கர்ப்பப்பையில் கட்டிகள் , நீர்க்கட்டிகள் போன்ற பிரச்னைகள் அதிகமாகின்றன.
* வயது , உயரத்துக்கு ஏற்ப எடையைப் பராமரிக்க , இதுதான் சரியான பருவம் . நீர்க்கட்டிகள் இருக்கும் 90 சதவிகிதம் பெண்கள், அவர்களின் எடையைக் குறைத்து , உடற்பயிற்சிகள் செய்தால் தானாகவே சரியாகிவிட வாய்ப்புகள் அதிகம்.


26 வயதுக்கு மேல். . .

* கருத்தரித்தல் நிகழ்வதே இன்று பெரும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. கருவுறாமல் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்டால் , தகுந்த மருத்துவரிடம் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்களிடமும் பிரச்னை இருக்கலாம் என்பதால், இருவருமே பரிசோதிப்பதுதான் நல்லது. அதில் , யாருக்குப் பிரச்னை என்பது தெரியவந்தால் , அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனைகளை , சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் .
* உடல்பருமன் , சர்க்கரை நோய் , இதயம் பலவீனமாக இருத்தல் போன்றவையும் குழந்தையின்மைக்குக் காரணமாகிறது. எனவே, பெண்கள் இந்த வயதில் உடல் நலனில் அதிக அக்கறையோடு , உணவுப் பழக்கங்களைச் சரிபடுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
* பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இருந்தாலும் கருத்தரிக்கத் தடங்கல் ஏற்படும் . காசநோய் , குடும்பங்களில் யாருக்காவது இருந்தாலும் , மரபியல் காரணங்களால் குழந்தைப்பேற்றில் சிக்கல் உண்டாகலாம் . கர்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க , தடுப்பூசி உள்ளது, மருத்துவரை ஆலோசித்து இளம்வயதிலேயே இதைப் போட்டுக்கொள்ளலாம். கர்ப்பப்பைவாய் , சினைப்பை ஆகியவற்றைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது .
* குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் , அவ்வப்போது பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது நல்லது . இதனால், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தவிர்க்க முடியும் .


40 வயதுக்கு மேல். . .
* எப்படி ஆரம்பத்தில் மாதவிலக்குப் பிரச்னை இருந்ததோ , அதேபோல முடியும் தருவாயிலும் தொல்லைகள் கொடுக்கத்தான் செய்யும் . மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்னை ஏற்படும் . மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும் , பிடித்தமான செயல்களைச் செய்வதன் மூலமும் இந்தப் பிரச்னையில் இருந்து ஓரளவுக்கு வெளியில் வரலாம் . சிலருக்கு, மாதவிலக்கு நிற்கும்போது எந்தத் தொந்தரவும் இருக்காது . சிலருக்கு, சீரற்ற ரத்தப்போக்கு , ஃபைப்ராய்டு சிஸ்ட் , ஓவேரியன் சிஸ்ட், சிலவகை புற்றுநோய்களும் வரலாம் . 40 வயதுக்குப் பிறகு பாப்ஸ்மியர் டெஸ்ட் செய்து , இவற்றை முன்பே அறிந்துகொள்ளலாம் . இதனுடன் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க , மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம் .
* இந்த வயதில் ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அதன் சுரப்பில் வித்தியாசம் இருக்கும். எனவே, அடிக்கடி மனக்குழப்பங்கள் ஏற்படும் . ஹார்மோன்கள் எந்தெந்த வேலைகளைச் செய்ய வேண்டுமோ, அவை சீராக இயங்காததால், உடல் மற்றும் மனம் சார்ந்த தொல்லைகள் ஏற்படும் .
* அதீத வியர்வை , படபடப்பு , டென்ஷன் , தலைவலி , தூக்கமின்மை போன்ற தொல்லைகள் அதிகமாக இருக்கும் .
* தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களா ? என்ற எண்ணம் அதிகரிக்கும் . எரிச்சலான உணர்வே எப்போதும் நீடிக்கும் . தனக்கு தானே முக்கியத்துவம் தராமல் போய்விட்டோம் எனும் எண்ணங்கள் தோன்றி மறையும் . தனிமையாகிவிட்டோம் எனும் மனஉளைச்சல் இருக்கும் .
* மேற்சொன்ன பிரச்னைகள் எல்லாம் இந்த வயதுக்கே உரித்தானது என்ற புரிதல் இருந்தால் , ஓரளவுக்குப் பிரச்னையில் இருந்து மீண்டு வரலாம் .
60 வயதுக்கு மேல். . .
* சொட்டுச்சொட்டாக சிறுநீர் கசிதல் , குடலிறக்கம் , பிறப்புறுப்பில் வறட்சித்தன்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல் , அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் உள்ளன.
* சிறுநீர்த் தொற்று வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் , பிறப்புறுப்பைச் சுத்தமாகப் பராமரிக்க , மருத்துவர் பரிந்துரைப்படி கிரீம்களைப் பூசலாம். 60 க்கு மேல்தான் அதிகக் கவனம் வேண்டும் . ஹார்மோன் செயல்பாடு குறைவதால் , சிறுநீர்ப்பையின் செயல்திறன் குறையும் . சிரித்தால் , அழுதால் , தும்மினால்கூட சிறுநீர் வெளியேறும் பிரச்னை இருக்கும்.
* ரத்தப்போக்கு தொடர்ந்தால் , சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேலும் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் என்பதால் , அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
* மனம் சார்ந்த தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இந்த வயதில் தனிமைஉணர்வு இருக்கும். வெறுப்பான மனநிலையில் தனக்கு நேரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவார்கள் . இதனால், ஆரம்பகட்டத்திலேயே குணமாக்கக்கூடிய பிரச்னைகள் அறுவைசிகிச்சை வரை செல்ல நேரிடும் என்பதால் கவனம் தேவை. எந்ததெந்த வயதில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துவைத்துக் கொண்டு , அதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, மனதளவில் தயாரானால் , என்றும் ஆரோக்கிய வாழ்க்கை நிச்சயம் .

வரும்முன் காப்போம் !
* தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம் . நடைப்பயிற்சி சிறந்தது .
* பெற்றோர் நேரம் ஒதுக்கிப் பயிற்சிசெய்தால் , வீட்டில் உள்ள குழந்தைகளும் பயிற்சிசெய்வார்கள் .
* எந்த வேலையில் இருந்தாலும் அதற்கு ஏற்ப, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.
* உடல் சரியில்லாமல்போனால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். நோய்கள் வரும் முன் காப்பதுதான் சரி.
* குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால் , தங்களது உடலை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக