புதன், 8 ஏப்ரல், 2020

செய்நன்றி_மறவா


#செய்நன்றி_மறவா

அமெரிக்கா பிலடெல்பியா நகரில் அடை மழையில் இருள் சூழ்ந்த நேரத்தில் குளிரில் நடுங்கியபடி தம்பதியர் தங்குவதற்கு ஓட்டலை தேடி அலைந்தார்கள். இறுதியில் ஒரே ஒரு ஹோட்டல் கிடைத்தது. அங்கு சென்று கேட்டபோது, "அறைகள் எதுவும் காலியாக இல்லை." என வரவேற்பாளர் சொன்னார்.  இருவரையும் மழையில் வெளியே அனுப்ப மனதில்லாமல் வரவேற்பாளர் தனது அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். இருவரும், "நீ எங்கே தூங்குவாய்?" எனக் கேட்டார்கள். நண்பர்களுடன் படுத்துக் கொள்கிறேன் என்றார்.

இரவு  இருவரும் அவரது அறையில் தங்கி காலையில் எழுந்து திரும்பி செல்லும்போது, "உனது அன்பிற்கு நன்றி. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த நீ வரவேற்பாளராக அல்ல மேனேஜராக வேண்டியவன். ஒருநாள் உனக்காக ஒரு ஹோட்டலை கட்டி அதில் மேனேஜர் ஆக்குகிறேன்." என்றார். இதைக் கேட்டதும் வரவேற்பாளர் சிரிக்க தம்பதியினரும் சிரித்தார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து வரவேற்பாளருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மழைநாள் இரவில் இவர் உதவிய தம்பதியினர் இவரை நியுயார்க் வருமாறு அழைத்து டிக்கெட் அனுப்பியிருந்தார்கள். நியூயார்க் சென்றவரை இருவரும் வரவேற்று  புத்தம் புதிதாக கட்டப்பட்ட வானளவு உயர் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இது உனக்காக நாங்கள் கட்டிய ஹோட்டல். இங்கு நீதான் மேலாளர் என்றார்கள்.

  அந்த ஹோட்டலின் பெயர் Waldorf. அதன் உரிமையாளர் Waldorf Aster. 1893ல் திறக்கப்பட்ட உலகின் தலைசிறந்த ஹோட்டல்களில் ஒன்றான Waldorfன் முதல் மேனேஜர் George C Boldt. இன்றளவும் Waldorf Aster என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் நியூயார்க் நகரின் ஒரு முக்கியமான லேண்ட்மார்க் ஆகும்.

இக்கட்டான நேரத்தில் தம்பதியருக்கு உதவிய வரவேற்பாளர் ஜார்ஜும், நேரம் கனிந்து வந்த போது அவரை அழைத்து தங்களுடன் சேர்த்துக்கொண்ட தம்பதிகளும், "பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும் என்பதற்கும், நன்றி மறவாமலும் வாழ வேண்டும்" என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

துன்ப நேரத்தில் உதவியவரை எப்பொழுதும் விட்டுவிடக் கூடாது. அறிவு, ஒழுக்கம் உள்ளவரின் நட்பை எப்பொழுதும் மறந்துவிடக்கூடாது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

பலனை எதிர்பாராமல் ஒருவருக்கு செய்த உதவியில் இருக்கும் அன்பை பின்னர்‌ எண்ணி பார்த்தால், அந்த உதவி கடலைவிடப் பெரியதாக தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக