ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

குழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி?


குழந்தைகளின் அறையை அழகுபடுத்துவது எப்படி?

*குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம்.*

குழந்தைகளின் அறை என்பது அவர்கள் உறங்குவதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் வளர்வதற்கான இடம். எனவே அதை கவனத்தில் கொண்டு அறையை அலங்கரிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கு பல வகையான முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

* பெண் குழந்தையின் அறை என்றால் சுவரில் இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். அதுவே ஆண் குழந்தையின் அறை என்றால் நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். சுவர்களில் அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அறையை அலங்கரிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* அறையை அலங்கரிக்கும்போது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையைப் பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு, குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டின் அடிப்படையில் அறையை அலங்கரிக்கலாம். குழந்தைக்கு கால்பந்தாட்டம் பிடித்தமான விளையாட்டு என்றால் கால்பந்து, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் புகைப்படங்கள், முக்கிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பத்திரிகை செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு அறையை அலங்கரிக்கலாம். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் குழந்தைகளை அது உற்சாகப்படுத்துவதாக அமையும்.


* குழந்தைகளிடம் இசை, ஓவியம் உள்ளிட்ட கலைத்துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் அறையில் அமைத்துக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் இசைக்கருவி, அல்லது ஓவியம் வரைவதற்கான பலகை ஆகியவையும் அறையில் இடம்பெறுவது நல்லது.

* குழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டமும் இயற்கையான வெளிச்சமும் இருக்க வேண்டும். பெரிய அளவில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும். இரவில் பயன்படுத்துவதற்கான மின்விளக்குகளை, நிழல் விழாதபடி அமைக்க வேண்டும்.

* குழந்தைகளின் அறையில் மின் இணைப்புகள் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும். பால்கனியுடன் இணைந்த அறையாக இருந்தால், கண்டிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

* குழந்தைகளின் அறையை அலங்கரிக்கும்போது குழந்தைகளின் விருப்பங்களையும் கேட்டறிய வேண்டும். பெற்றோரின் விருப்பத்தை குழந்தைகளின்மீது திணிக்கக் கூடாது. மேலும், அறையின் ஏதாவது ஒரு பகுதியை குழந்தைகளே அலங்கரித்துக்கொள்ளவும் வாய்ப்பு வழங்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக