புது முயற்சிகள் துவங்க பொன்னான நாள் ஆடிப்பெருக்கு!!! (August 3, Friday)
ஆடி 18-ம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. நதியை வழிபடுவது பன்னெடுங்காலமாய் இருந்து வரும் வழக்கம். நமது தமிழகத்தில் குறிப்பாக ஆடி பெருக்கு எனும் பதினெட்டாம் நாள் பெருக்கு அன்று நதிகள் கரைபுரண்டு ஓடும்.
ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் வைபவம் தொடங்கும்.
ஆடிபெருக்கு அன்று பெண்கள் படித்துறை தோறும் புத்தாடை அணிந்து பொங்கி வரும் நதியை வணங்கி, அவளை அலங்கரிக்கும் பொருட்களை சமர்பிக்கின்றனர். ஆடிபெருக்கும் பூஜையில் காதோலை, கருகமணி, காப்பரிசி மிக முக்கியமானது. மேலும் நைவேந்தியமாக சித்திர அன்னங்கள் மற்றும் புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்றவையும் பூஜை பொருட்களாக உள்ளன.
பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். நதிக்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் சமூக விழாவாக நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக