தனிமையிலும் பெண்கள் இனிமை காணலாம்..
வீ ட்டோடு மாப்பிள்ளை என்ற கலாசாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதுபோல் பெண்ணுக்கு, பக்கத்து ஊரிலே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துகொடுத்து பக்கத்திலே வைத்துக்கொள்ளும் வழக்கமும் குறைந்துகொண்டிருக்கிறது. பெண்களும் திருமணமாகி கணவரோடு எங்கு வேண்டு மானாலும் பறக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் திருமணமாகி நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது, கணவர் அருகிலே இருந்தாலும் பெண்களை தனிமை சில நேரங்களில் வாட்டத்தான் செய்கிறது. புதிய மனிதர்கள், புதிய மொழி, புதிய கலாசாரம் போன்றவைகள் எல்லாம் சேர்த்து அவர்களை தவிக்கவைத்து, தனிமைப்படுத்துகிறது.
இது ெதாடர்பான ஆய்வறிக்கை ஒன்று ‘இந்தியாவில் 68 சதவீத நகர்ப்புற பெண்களும், 93 சதவீத கிராமப்புற பெண்களும் திருமணத்திற்கு பிறகு புதிய இடங் களுக்கு செல்கிறார்கள். அவர்கள் தனிமை உணர்வை அனுபவிக்கவே செய்கிறார்கள்’ என்கிறது.
வினிதாவுக்கு திருமணம் நடந்தது. கூட்டுக்குடும்பத்தைவிட்டு மும்பைக்கு சென்று கணவரோடு தனிக்குடித்தனம் செய்ய இருப்பதை நினைத்தபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கே சென்ற பின்புதான் அவளுக்கு பல விஷயங்கள் புரிந்தன. மொழி பிரச்சினையால் யாரிடமும் பேச முடியவில்லை. வழிதெரியாததால் வெளியே போகவும் முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களோடு கூட பழக முடியவில்லை. கணவர் அலுவலகம் சென்றதும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, எவ்வளவு நேரம் தான் டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது. ஒரு சில வாரங்களிலே அவளுக்கு எல்லாமுமே அலுத்து போனது. வீடு, ஏ.சி. சிறைபோல் ஆனது. சில நேரங்களில் தனிமை பயமாகவும் இருந்தது. தான் தன்னந்தனியாக விடப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டபோது அம்ரிதாவின் நட்பு கிடைத்தது.
இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அதனால் மணிக்கணக்கில் பேசினார்கள். வெளி இடங்களுக்கு சேர்ந்து செல்லவும் ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு அறிமுகப்படுத்தினாள் அம்ரிதா.
வினிதாவுக்கு பாசி மணிகளில் பொம்மைகள் செய்யவும், ஒயர் கூடை பின்னவும் தெரியும். அதை அவள் பொழுதுபோக்காக தொடங்கினாள். அம்ரிதா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அறிமுகம் செய்துவைத்ததால் அந்த பெண்கள் பலர் அவளிடம் பயிற்சி பெறவந்தார்கள். அவர்கள் தயாரித்த கலைப் பொருட்களுக்கு அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவள் தொழிலும் வளர்ந்தது. தனிமையும் விலகியது.
எல்லா இடத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களோடு பழக மொழியைவிட அன்பு உள்ளங்கள்தான் அவசியம். ஒரு சிறிய புன்னகை கூட மற்றவர்களை ஈர்த்துவிடும். தனிமை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, மற்றவர் களோடு இன்ப, துன்பங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுடனான உறவு வலுப்பட்டு, தனிமை விரட்டப்பட்டுவிடும்.
அந்தந்த பகுதி மக்களின் கலாசாரத்தை புரிந்துகொண்டு அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தக்கபடி அவர்களோடு பழக முற்பட வேண்டும். தினமும் காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள இடங் களுக்கு சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வரவேண்டும். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பார்வை நம் மீதுபடும். அதுவே அவர்களிடம் பழக வாய்ப்பாக அமையும்.
பெண்கள் எல்லோருமே படித்திருக்கவேண்டும். படித்திருந்தால் வாழப்போகும் ஊரில், வீட்டின் அருகில் உள்ள பிள்ளை களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கிவிடலாம். அந்த பிள்ளைகள் மூலம் அவர்களது பெற்றோர் அறிமுகமும், டியூசன் டீச்சர், படித்த பெண் என்ற அங்கீகாரமும் கிடைக்கும்.
நேரம் கிடைக்காமல் விட்டுப்போன படிப்பை புதிய ஊருக்கு வந்ததும் தொடரலாம். இதனால் தனிமையை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் புகைப்படம் சேகரிப்பு, சித்திரம் வரைதல், பெயிண்டிங் செய்தல் இப்படி ஏராளமான பொழுது போக்குகளில் எதையேனும் ஒன்றை ஆரம்பித்து தனிமையை விரட்டலாம். சுவையான உணவுகளை தயாரிக்க தெரிந்துவைத்திருந்தால், விழாக்காலங்களில் அவைகளை தயாரித்து, பக்கத்து வீடுகளில் உள்ளவர் களுக்கு கொடுத்து நட்பை வளர்க்கலாம். விருந்துக்கும், பூஜைகளுக்கும் அவர்களை அழைத்து மனதில் இடம்பெறலாம்.
பெங்களூருவை சேர்ந்த மீனா திருமணமாகி கணவரோடு வாழ்வதற்காக கொல்கத்தா சென்றாள். அங்கே அவள் செய்த முதல்வேலை பெங்காலி மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்ததுதான். அந்த மொழி எளிதில் பிடிபடவில்லை. பெங்காலி சேனல்களை பார்க்கத் தொடங்கினாள். திடீரென்று பக்கத்து வீட்டில் சங்கு சத்தம் கேட்டது. பயந்துபோனாள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டதாக நினைத்தாள்.
பக்கத்து வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டுப் பெண்மணி குழந்தையோடு வாசலில் நின்றிருந்தாள். சங்கு ஒலியோடு அவளை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அந்த ஊரில் நல்ல காரியங்களை சங்கு ஊதித்தான் தொடங்குவார்களாம். அந்த குழந்தையை அன்று பள்ளியில் சேர்க்க கொண்டு செல்ல இருக்கிறார்கள். அதற்காகத்தான் சங்கு ஊதியுள்ளார்கள்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சரிதா, திருமணமாகி கணவரோடு மணிப்பூர் சென்றாள். கணவர் அங்கு ஆசிரியராக பணியாற்றிவந்தார். ஒருமுறை அவர்கள் இருவரும் மலைப்பகுதி ஒன்றுக்கு சென்றார்கள். அங்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட கட்டில் ஒன்றை பார்த்தார்கள். அதை வாங்கி, அதில் தூங்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். கட்டில் ஒன்று தயாரித்து தரும்படி கேட்டாள். உடனே கட்டில் தயாரிப்பவர் சரிதாவை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவள் கட்டில் வேண்டும் என்று சைகையில் கூறினாள்.
பதிலுக்கு அவர்கள் படுக்கையில் கிடத்த வேண்டியவரின் உயரம் எவ்வளவு என்று கேட்டார்கள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக விலைபேசி கட்டிலை வாங்கிவிட்டாள். அன்று மாலையே இரண்டு பேர் கட்டிலை கொண்டுவந்து வீட்டு வாசலில் போட்டார்கள். பிறகு ஏதோ கேட்டார்கள். அவளுக்கு புரியவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணை கூப்பிட்டாள்.
அவள், ‘இந்த கட்டிலில் கிடத்தவேண்டிய பிணம் எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார்கள். இது பிணத்தை கிடத்த பயன்படுத்தும் கட்டில். இதில் வைத்துதான் பிணத்தை தூக்கிச்செல்வார்கள்’ என்று விளக்கமளித்தார்கள். அதைக் கேட்டதும் சரிதா அதிர்ந்து போக, அருகில் நின்றிருந்தவர்கள் எல்லாம் சிரித்துவிட்டார்கள். இப்படி மொழி புரியாத, கலாசாரம் புரியாத மாநிலங்களுக்கு வாழச் செல்லும் பெண்களுக்கு பல்வேறு ருசிகர அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீங்களும் திருமணமாகாத பெண்ணாக இருந்தால், திருமணத்திற்கு பின்பு உங்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக