சனி, 31 மார்ச், 2018

கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா


கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா

விபூதி மலையில் சூரிய உதயம் காணுங்கள்
ஊட்டி குளிரை அங்கலாவில் அனுபவியுங்கள்
பயண அனுபவம்:
காரைக்குடி - மேட்டுப்பாளையம் பயணம்
காரைக்குடியில் இருந்து மாலை 7 மணி அளவில் கிளம்பி திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம்,தாராபுரம்,பல்லடம்,அன்னுர் வழியாக மேட்டுப்பாளையம் அடைந்தோம்.அங்கு இரவு தங்கி விட்டு காலை அங்கிருந்து கிளம்பி குன்னுர் வரை சென்றோம்.
முதல் நாள் பயணம் :
ரயில் பயணம் - குன்னுர் டூ ஊட்டி
குன்னுரில் காலை 10 மணிக்கு அடைந்தோம்.அங்கு காலை 10.40 மணிக்கு கிளம்பும் ரயில் டிக்கெட் எடுத்து கொண்டு ஊட்டி வரை ட்ரெயினில் சென்றோம்.அருமையான பயணம்.டிக்கெட் வெறும் 10 ரூபாய் மட்டுமே.குன்னுரில் கிளம்பி சரியாக ஒரு மணி நேரம் பயணம்.வழியில் வெலிங்டன்,அரவங்காடு,கேத்தி ,லவ்டேல் வழியாக ஊட்டியை சென்று அடைந்தோம்.அங்கு எங்கள் கார் ரெடியாக இருந்தது.ஊட்டி வரை ரயில் பயணத்தில் சில குகைகளின் வழியாக சென்றோம்.அருமையான பயணம்.
ஊட்டி டூ மசினக்குடி பயணம் ( ஆபத்தான பயணம் )
ஊட்டியில் மதியம் கிளம்பி தலகுந்தா என்கிற இடத்தில் இருந்து 37 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மசினக்குடி செல்ல வேண்டும்.தலகுந்தாவில் காவலர் ஒருவரிடம் வழி கேட்டபோது ,எங்களிடம் காவலர் வாகனத்தை இரண்டாம் கியரில் மட்டுமே செலுத்துங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்.சுமார் ஒன்றரை மணி நேரம் பயணத்துக்கு பின்பு மசினக்குடியை அடைந்தோம்.செல்லும் வழியில் சிறிது தூரத்துக்கு இடைவெளியில் வேகத்தடை அமைத்து உள்ளனர்.காரணம் கேட்டபோது வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் அவ்வாறு அமைக்கப்பட்டுளதாக தெரிவித்தனர்.வழியில் மான்களை பார்த்தோம்.அடர்ந்த காட்டின் வழியாகத்தான் பயணம்.மசினகுடியில் ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டேலில் சாப்பிட்டு விட்டு அங்கு ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் ரூம் போட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்தோம்.
கர்நாடகா மாநிலம் அங்கலா கோபாலசாமி கோவிலுக்கு பயணம்
மசினகுடியில் மதியம் சாப்பிட்டு விட்டு எங்கள் ( காரைக்குடி சொக்கலிங்கம் ) பயணத்தை மீண்டும் துவக்கினோம்.முதுமலை சரணாலயம் வழியாக மைசூர் செல்லும் பாதையில் பந்திப்பூர் சரணாலயம் வழியாக கர்நாடகா மாநிலம் அங்கலாவை அடைந்தோம்.மாலை சுமார் 3.20 மணிக்கு சென்று அடைந்தோம்.அங்கலாவில் கோபாலசாமி கோவில் செல்வதற்கு மலை அடிவாரத்தில் தனியாக கர்நாடக அரசு பேருந்து தயராக உள்ளது.மாலை 4 மணிக்கு மலைக்கு செல்வதற்கு கடைசி பேருந்து.அந்த பேருந்தில் ஏறி நாங்கள் மலை உச்சியில் இருக்கும் கோவிலுக்கு சென்றோம்.செல்லும் வழியில் அடர்ந்து உள்ளது காடு.நாம் செல்லும் வாகனத்தை மலை அடிவாரத்தில் நிறுத்தி விடவேண்டும்.
வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் சொட்டும் பனிநீர் கோபாலசாமி கோவில் - ஊட்டிக்கு நிகரான குளிர் உள்ள கர்நாடகா மலை கோவில்
அங்கலா அடிவாரத்தில் இருந்து சுமார் 15 நிமிட பேருந்து பயணத்துக்கு பின்பு கோபாலசாமி கோவில் மலைக்கு சென்றோம்.அங்கு கிருஷ்ணர் அழகாக இருந்தார்.அவரது சிலை இருக்கும் இடத்தில் மேலே வருடம் முழுவதும் பனிநீர் சொட்டி கொண்டே இருக்குமாம்.கோபாலசாமி கடவுளை வேண்டி கொண்டால் பல்வேறு நன்மைகள் நடக்கும் என்று சொன்னார்கள்.அங்கு அனைத்து நாட்களும் சக்கரை சாதம் ,புளியோதரை,வெள்ளை சாதம் சாம்பாருடன்,காய் கறிகளுடன் தட்டில் வைத்து வழங்கப்படுகிறது.
அந்த மலை ஊட்டியில் எவ்வாறு குளிர் இருக்குமோ அது போன்று குளிர் இருக்கும் என்று சொன்னார்கள்.நாங்கள் நிற்கும்போதே குளிர் இருந்தது.நம்மை மாலை சுமார் 4.20 மணி போல் கோவிலில் இறக்கி விட்டு மீண்டும் சுமார் 5.20 மணி போல் பேருந்தில் ஏற்றி அடிவாரத்தில் கொண்டு வந்து விடுகின்றனர்.காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை பேருந்து மலைக்கு செல்கிறது.நாம் காலையில் சென்று விட்டு மாலையில் வரலாம்.அல்லது விருப்பட்ட நேரத்தில் வரலாம்.அதுவும் மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்பி விட வேண்டும்.நாங்கள் சென்ற பேருந்தில் நாங்கள் மட்டுமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கோபாலசாமி கோவிலை பற்றி கன்னடர்கள் அழகாக பாட்டு பாடியபடியே பேருந்தில் வருகின்றனர்.
மைசூர் தர்ப்பூசணி பழங்கள் :
அங்கலாவில் இருந்து மீண்டும் எங்களது வாகனத்தில் மசினக்குடி நோக்கி வரும்போது கர்நாடக மாநிலத்தின் காடுகளின் அழகை ரசித்தபடி வந்தோம்.அந்த வழியிலும் தொடர்ந்து ஆங்காங்கே வேகதடைகள் உள்ளன .காட்டு விலங்குகள் உள்ளதாக சொன்னார்கள்.
வழியில் மைசூர் தர் பூசணிக்காய்களை அதிக அளவில் பார்த்தோம்.நம்மூரில் இளநீர் கடைகளை காண்பது போல் அடுத்து ,அடுத்து தர்ப்பூசணி பழங்கள் கொட்டி கிடக்கின்றன .அவற்றை பெரிய சாக்குகளில் கொட்டி கட்டி வைத்து உள்ளனர்.ஒரு பழமாக வாங்கினால் 10 ரூபாய் என்று சொல்லி விற்றார்கள் .மூட்டையாக வாங்கினால் விலை குறைவு.
அழகான வரவேற்புடன் எங்களை வரவேற்ற பந்திப்பூர் சரணாலயம்:
நாங்கள் தர்ப்பூசணிகளை வாங்கி ருசித்து கொண்டே வரும்போது மாலை 5.45 மணி போல் பந்திப்பூர் சரணாலயம் வந்தோம்.அங்கு வருவற்கு முன்பு எங்களை அழகாக புலி சிலையுடன் கர்நாடக மாநில வனத்துறையின் வளைவு வரவேற்றது.பந்திப்பூர் சரணாலயத்திலும் வனவிலங்குகளை காண சஃபாரி செல்லலாம்.செல்வதற்கான நேரங்கள் மற்றும் கட்டணம் தொடர்பான தகவல்கள் ;
பயணத்திற்கான நேர விவரம் :
காலை : மணி 6.30 முதல் 8.30 மணி வரை
மாலை : 3.30 மணி முதல் 5.30 மணி வரை
டிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 3 மணி முதலும் வழங்கப்படும்.
கட்டண விவரம் :
சஃபாரி வேனில் செல்வதற்கு 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 350 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .
தனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 3000 ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.
யாரை தொடர்பு கொள்வது ?
நீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் வழியாக புக் செய்யலாம் . முகவரி : www.bandipurtigerreserve.in.தொடர்பு எண் : 08229-236051(வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .
வனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா?
அது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .
நம்மூரில் ஆடுகள் சுற்றி திரிவது போல் சுற்றி திரியும் மான்கள் கூட்டம் :
முதுமலை நோக்கி பயணம் :பந்திப்பூர் சரணாலயம் பார்த்து விட்டு அங்கிருந்து முதுமலை நோக்கி பயணம் செய்தபோது எங்கெங்கு காணினும் மான்களின் கூட்டம் அருமையாக உள்ளது.நம்மூரில் ஆங்காங்கே ஆடுகள் கூட்டம் உள்ளதுபோல் மான்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.பார்ப்பதற்கு கண்களுக்கு அழகாக ,அருமையாக உள்ளது.
மந்திகள் கூட்டம் :
மந்தி குரங்குகளும் அதிகமாக உள்ளன.அவற்றை பார்ப்பதற்கே அழகாக உள்ளன.நம்மூர் குரங்குகள் போல் மனிதர்களிடம் உள்ள பொருள்களை வாங்க முயற்சிக்காமல் மந்திகள் அவை ,அவை அவற்றின் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தன.நம்மை தொந்தரவு செய்யவில்லை.
முதுமலை சரணாலயம் :
மாலை 6 மணி அளவில் முதுமலை சரணாலயத்தை அடைந்து அடுத்த நாள் எவ்வாறு எங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விசாரித்து கொண்டோம் .காலை 6 மணிக்கு வந்துவிட்டால் முதல் ட்ரிப்பில் வனவிலங்குகளை பார்க்க வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்கள்.பிறகு அங்கிருந்து பொறுமையாக கிளம்பி மசினகுடி வந்து சேர்ந்தோம்.
இரண்டாம் நாள் பயணம் :
வனவிலங்குகளை காண வேன் டிக்கெட் வாங்குதல் :
இரண்டாம் நாள் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருத்து குளித்து ரெடியாகி சரியாக 6 மணிக்கெல்லாம் முதுமலை சென்று அடைந்தோம்.அங்கு 6.30 மணியளவில் தான் டிக்கெட் கொடுக்கும் இடம் திறக்கப்பட்டது.வனத்துறை வேன் மூலம் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 340 டிக்கெட் கொடுக்கப்படுகிறது.முதலில் செல்பவர்களுக்கு சீட் எண் 1,2,3,4 கொடுக்கப்படுகிறது.இந்த எண்களில் சீட் வாங்கினால் மிக அருமையாக வனவிலங்குகளை பார்ப்பதற்கும்,படம் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணத்திற்கான நேர விவரம் :
காலை : மணி 6.00 முதல் 10 மணி வரை
மாலை : 2.00 மணி முதல் 6.00 மணி வரை
டிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 2 மணி முதலும் வழங்கப்படும்.
கட்டண விவரம் :
சஃபாரி வேனில் செல்வதற்கு 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 340 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .
தனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 4200ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.ஒரு ஜீப் மற்றும் ஜிப்ஸி மட்டுமே உள்ளதால் காலையில் வெல்லனா சென்றால் மட்டுமே முதலில் அவற்றை புக் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரை தொடர்பு கொள்வது ?
நீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் www .mudumalaitigerreserve.com வழியாக புக் செய்யலாம் . முகவரி : தொடர்பு எண் : தெப்பக்காடு : முதுமலை : 0423-2526235 .ஊட்டி : 0423- 2445971 (வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .
வனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா?
அது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .
யானை சவாரி :
காலை 7 மணி முதல் 8 மணி வரை.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
யானைகளின் புத்துணர்வு முகாம் நடைபெறும் நாள்களில் இந்த யானை சவாரி கிடையாது.
வனவிலங்குகள் பார்ப்பதற்கு சென்ற எங்களின் அனுபவம் :
கரடியையும்,காட்டு யானையும் பார்த்த அனுபவம் :( காரைக்குடி சொக்கலிங்கம் )
முதலில் மான்களின் கூட்டம் அதிகமாக பார்த்தோம்.முதுமலையில் கிளம்பி கூடலூர் செல்லும் மெயின் ரோட்டில் சென்று பிறகு காட்டு பகுதிக்குள் சென்றோம்.காடு என்றால் அடர்த்தியான காடு.பல கிலோமீட்டர் சென்ற பிறகு மான்களையும்,கரடியையும் பார்த்தோம்.மான்களை வெகு அருகில் பார்த்தோம்.அதிகமான கூட்டம் இருந்தது.எங்களை பார்த்து அவை ஓடவில்லை.எங்கள் உடன் வந்த வாகன காப்பாளர்கள் எங்களை கீழே இறங்க விடவில்லை.வண்டியில் இந்தப் வண்ணமே போட்டோ எடுத்தோம்.பிறகு மயில்களையும் அதிக அளவில் பார்த்தோம்.அவையும் நன்றாக அருகில் வந்தன.
காட்டு யானை :
வழியில் காட்டு யானை ஒன்றை மட்டும் பார்த்தோம்.அது ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.அதனை எங்களுக்கு வேண்டிய அளவில் போட்டோ எடுத்து கொண்டோம்.பிறகு அங்கிருந்து எங்கள் வண்டி மெயின் ரோட்டை நோக்கி அதாவது மைசூர் ரோட்டை நோக்கி சென்றது.காலை 6.55 மணி முதல் சுமார் 8.20 மணி வரை காட்டை வண்டியில் சுற்றி பார்த்தோம்.
யானை உணவு உண்ணும் இடம் :
காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் முதுமலை வரவேற்பு பகுதிக்கு எதிர்த்தார் போல் உள்ள பாலத்தை கடந்து சென்றால் யானைகள் உணவு உண்ணும் இடம் உள்ளது.அங்கு யானைகளுக்கு பல்வேறு வகையில் கொள்ளு உட்பட அனைத்தையும் கலந்து உருண்டையாக உருட்டி கொடுக்கின்றார்கள்.யானைகளுக்கு உணவு கொடுக்கும் அழகே தனிதான்.
யானைகள் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ? பொறுப்பாளர் மாறன் கூறுவதை கேளுங்கள் :
மாத்திரையுடன் உணவு : உண்ண மறுக்கும் யானைகள் :
யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுவதால் யானை ட்ரிப் இப்போது இல்லை.யானைகளுக்கு சத்து கொடுக்கும் விதத்தில் மாத்திரை சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஒரு யானைக்கு சுமார் 8 கிலோ உணவு 7 அல்லது 8 உருண்டைகளாக வழங்கப்படுகிறது.
முதல் உருண்டை கொடுக்கும்போது யானைகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறது.பிறகு அடுத்த உருண்டை வாங்க மறுக்கிறது .காரணம் அதனில் மாத்திரை வைத்து கொடுக்கும்போது அந்த ருசியை தெரிந்து கொண்டு அவை சாப்பிட மறுக்கிறது .பிறகு சிறு குழந்தைகளுக்கு ஊட்டுவது போன்று பாகன்கள் யானைகளை மிரட்டி,உருட்டி சாப்பிட வைக்கிறார்கள்.
சுமார் 68 வயது,67 வயது உடைய யானைகளை நாங்கள் பார்த்தோம்.யானைகளுக்கு உணவு கொடுப்பது,பார்ப்பது அனைத்துமே அழகு.அருமை.யானைகள் புத்துணர்வு முகாமில் உள்ளதால் சிறிது தூரம் நடக்க செய்து மீண்டும் அழைத்து வந்தார்கள்.
யானை உணவு வழங்கும் இடத்தில் மந்தி கூட்டம் அதிகம்.அவை பாட்டுக்கும் ஜாலியாக விளையாண்டு கொண்டு நமது அருகில் வந்து செல்கின்றன.
மீண்டும் மசினகுடி செல்லுதல் :
காலை 9.30 மணி அளவில் மீண்டும் முதுமலை டூ மசினகுடி பயணம்.மசினகுடியில் காலை உணவை சாப்பிட்டு விட்டு சிங்காரா மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.
நடு ரோட்டில் மரம் சாய்ந்து விழுதல் :
மலை வாழ்க்கையை நினைத்தால் பயமாகத்தான் உள்ளது.நாங்கள் மசினகுடியில் கிளம்பி சிங்காரா செல்லும் பாதையில் பயணித்து கொண்டு இருக்கும்போது நடு ரோட்டில் மரம் விழுந்து பாதையை மறைத்து கொண்டது.அந்த பக்கம் இருந்தும்,இந்த பக்கம் இருந்தும் வாகனங்கள் செல்ல இயலவில்லை.சிங்காராவில் இருந்து வந்த மின் உற்பத்தி பிரிவின் அலுவலர் ஒருவர் பெங்களுரு செல்ல வேண்டும் என்று பறந்து கொண்டு,தவித்து கொண்டு இருந்தார்.ஆனால் மரமோ உடனடியாக எடுக்கும் நிலையில் இல்லை.
 மோயார் பயணம் :
நடு ரோட்டில் மரம் விழுந்ததால் மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து மோயார் மின் உற்பத்தி நிலையம் நோக்கி சென்றோம்.மோயர் மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் எண்ணிலடங்கா மான்களின் கூட்டம் கண்டோம்.அங்கு உள்ள நீர்ப் பிடிப்பு அணையை பார்த்தோம்.தண்ணீரை பார்த்து எங்களுக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி.பிறகு அங்கிருந்து சிறப்பு அனுமதி பெற்று வின்ச் வழியாக கீழ் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை சென்று பார்த்தோம்.மிக அருமையான ,வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.வின்ச் முழுவதும் செங்குத்தாக செல்லும்.அங்கு தண்ணீர் உற்பத்தி ஆகி பைப் வழியாக மிக வேகமாக வந்து விழும் வேகத்தில் அங்கு உள்ள மெஷின் சுற்றி அதன் வழியாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு தமிழ்நாடு மின்துறையின் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதியில் விட்ட சிங்காரா மின் உற்பத்தி நிலையம் பயணம் :
மோயார் பகுதியில் இருந்து மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து சிங்காரா நோக்கி பயணித்தோம்.நாங்கள் காலையில் பார்த்த மரம் சுமார் மதியம் 2.15 மணியளவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டது.அதன் பிறகு நாங்கள் சிங்காரா நோக்கி சென்றோம்.காலையில் அவசரமாக பெங்களூரு செல்ல வேண்டும் என்ற இ .பி.அலுவலரும் மதியம் 2.15 மணிக்குத்தான் வழி கிடைத்து சென்று கொண்டு இருந்தார்.இதுதான் மலைப்பகுதி வாழ்க்கை.
குகைக்குள் பயணம் :
சிங்காராவில் புஷப் எனப்படும் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு ( காரைக்குடி சொக்கலிங்கம் )முன் அனுமதி பெற்று சென்றோம்.சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மலையை குடைந்து அங்கு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள கிளன்மார்கன் எனும் இடத்தில் இருந்து நேரடியாக தண்ணீர் ட்டனால் வழியாக சிங்காரா வருகிறது.அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிங்காராவில் உள்ள பைக்காரா மின் உற்பத்தி நிலையம் :
புஸப் பகுதியில் இருந்து மீண்டும் நாங்கள் 1932ம் ஆண்டு கட்டப்பட்ட பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.இங்குஇருந்து முதன் முதலாக மின் உற்பத்தி செய்யப்பட்ட மதுரைக்கு அனுப்பப்பட்ட நினைவாகத்தான் மதுரையில் பைக்காரா என்ற இடம் உள்ளதாக சொன்னார்கள்.நாங்கள் அங்கு உள்ள இடங்களை அனைத்தும் பார்த்தோம்.புதியதாக அமைக்கப்பட்ட மின் உற்பத்திக்கு தேவையான மெஷின்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் ஒர்க்ஷாப்பை பார்த்தோம்.இந்த பட்டறை கடந்த 1917ம் ஆண்டு முதல் செயல் பட்டதாக அங்கு இருந்த அலுவலர் எங்களிடம் தெரிவித்தார்.பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் அழகான காபி தோட்டம் உள்ளது.அதனை பார்த்து ரசித்து விட்டு அங்கு இருந்து நாங்கள் மீண்டும் மசினகுடிக்கு மாலை வந்து சேர்ந்தோம்.
பொக்காபுரம் அம்மன் கோவில் :
மசினகுடியில் இருந்து மாலை 4.30 மணி அளவில் கிளம்பி நாங்கள் ஊட்டி செல்லும் வழியில் உள்ள பொக்காபுரம் என்னும் இடத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றோம்.இந்த பகுதியில் மிகவும் பிரசித்த பெற்ற அம்மன் என்று சொன்னார்கள்.அங்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அங்கு அருகில் உள்ள விபூதி மலைக்கு செல்ல தயரானோம்.
விபூதி மலை : சூரியன் உதயம்,அஸ்தமனம் காணலாம் :
பொக்காபுரத்தில் ஊருக்குள் சின்ன வழியாக செல்கிறது.ட்ரெக்கிங் செல்வது போல் செல்ல வேண்டும்.சுமார் 40 நிமிடங்கள் பொறுமையாக மலை ஏறி காடு ,மலைகளை கடந்து விபூதி மலைக்கு செல்ல வேண்டும்.நல்ல உடற்பயிற்சி.ஏறிய உடன் முருகன் கோவில் உள்ளது.முருகன் சின்ன உருவத்தில் அழகாக உள்ளார்.அங்கு இருந்து மாலை சூரியன் கொஞ்சம்,கொஞ்சமாக அஸ்தமனம் ஆவதை காண இயலுகிறது .மீண்டும் அங்குறிந்து சுமார் 20 நிமிடங்கள் கீழே இறங்கி மீண்டும் மசினகுடி அடைந்தோம்.
நீங்கள் மலை ஏறுவதற்கு சிரமப்பட்டால் மசினகுடியில் இருந்து ஜீப் வழியாக விபூதி மலையை அடையலாம் .சுமார் 8 பேருக்கு மொத்தமே 500 ரூபாய் பெற்று கொண்டு நம்மை அழைத்து சென்று மீண்டும் அழைத்து வந்து விடுகின்றனர்.அப்படியும் செல்லலாம்.15 நிமிடங்களில் சென்று விடலாம்.அதி காலையில் சூரியன் உதயத்தை நாம் காண மசினகுடியில் சொல்லி விட்டால் நம்மை அழைத்து செல்ல ஜீப் ஓட்டுனர்கள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்கின்றனர்.அருமையான மலை பகுதி.மாலையில் 5.30 மணிக்கு மேல் மிஸ்ட் உருவாகி விடுகிறது.நல்ல குளிர் நிலை.அனுபவிக்க ஏற்ற இடம் .
மூன்றாம் நாள் பயணம் :
கிளன்மார்கன் அணைக்கு பயணம் :
மசினகுடியில் இருந்து கிளம்பி ஊட்டி நோக்கி ( காரைக்குடி சொக்கலிங்கம் )சென்றோம்.ஊட்டியில் மசினகுடியில் இருந்து செல்லும்போது தலகுந்தா என்கிற இடத்தில் பிரிந்து சில கிலோமீட்டர் பயணம் செய்து கிளன்மார்கன் டீ எஸ்டேட் தாண்டி சென்றோம்.நல்ல அடர்த்தியான காடு.அங்கு சில மையில் தூரத்தில் நம்மை பைக்காரா அணை வரவேற்கிறது.அங்கு இருந்து அந்த அணையை ஒட்டியே சென்றோம் என்றால் கிளன்மார்கன் அணை பகுதி வருகிறது.முக்குருத்தி என்கிற இடத்தில் இருந்து பைக்காரா வரும் தண்ணீர் அடுத்து கிளன்மார்கன் அணைக்கு வருகிறது.இங்கு இருந்துதான் தணல் வழியாக தண்ணீர் சிங்காரா செல்கிறது.பார்க்க வேண்டிய இடம்.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே இங்கு செல்ல இயலும் .
வின்ச் பயணம் :
கிளன்மார்கன் அணையில் எங்களை அங்கு உள்ள அலுவலர் வரவேற்று நல்ல முறையில் வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.வின்ச்சில் நான்காவது வின்ச் பகுதியில் இருந்து மூன்றாவது வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.அருமையான பயணம்.தணல் வழியாக ஏற்படும் ரிப்பேர்களை சரி செய்ய வின்ச் அமைக்கப்பட்டுள்ளது.விஞ்சில் கிளம்பிய சிறிது நேரத்தில் மிக அழுத்தமான ஒரு உடல் அமைப்பு இருந்தது.சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது.சுமார் 800 மீட்டர் பயணம் செய்தோம்.15 நிமிடங்கள் இருக்கும்.மூன்றாவது வின்ச் பகுதிக்கு வந்துவிட்டோம்.அங்கு இருந்து அடுத்த 1600 மீட்டர் பயணம் செய்தால் சிங்காரா அடைந்து விடலாம்.சுமார் 40 நிமிட மலை வழி வின்ச் பயணத்தில் நேராக சிங்காரா செல்லலாம் .வின்ச் இயக்குபவர் அடிக்கடி ஓடும் விஞ்சில் இருந்து சர்வ சாதாரணமாக இறங்கி (அருகில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி ஏறி ) அதனை சரி செய்து கொண்டே எங்களுடன் வந்தார்கள்.மீண்டும் அங்கு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கு இருந்து வின்ச் வழியாக கிளன்மார்கன் அணைக்கட்டுக்கு மலை ஏறினோம்.இப்போது அலுவலர் கொடுத்த தைரியத்தில் நாங்கள் மீண்டும் வின்ச் முன் பகுதியில் வந்து நின்று கொண்டு வந்தோம்.அருமையான பயணம்.நம்மை சுற்றிலும் பச்சை பசேல் என்று வனப்பகுதி.வின்சோ செங்குத்தாக ஏறுகிறது.இயற்கையை ரசித்து கொண்டே நாம் பயணம் செய்யலாம்.மீண்டும் நாங்கள் மலை பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.
கிளன்மார்கன் டேம் செல்லுதல் :
அணைக்கட்டு பகுதி அருமையான இடம்.மிக பெரிய அளவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.பார்க்க வேண்டிய இடம்.இங்கு செல்லும்போதும் நம்மை பைக்காரா நதி வழி நடத்தி செல்லுகிறது.ஒரு பக்கம் முழுவதும் காடுகள் அடங்கிய மலைப்பகுதி,இன்னொரு பக்கம் அடியில் தண்ணீர் உள்ள பகுதி.அழகாக இருந்தாலும் கவனமுடன் நாம் செல்ல வேண்டும்.
ஆங்கிலேயர் காலத்தில் அருமையாக யோசனை செய்து இந்த இடத்தை வடிவமைத்து உள்ளார்கள்.இன்று அளவும் அவை நமக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது.( காரைக்குடி சொக்கலிங்கம் )
ஊட்டியில் உள்ள பைக்காரா டேம் நோக்கி பயணம் :
ஊட்டியில் உள்ள பைக்காரா நீர் மின் நிலையம் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் வரும் பைக்காரா டேமை சென்று பார்த்தோம்.இதற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.பொன் விழா கண்ட இந்த அணைக்கட்டுக்கு அவசியம் சென்று பார்க்க வேண்டும்.அருமையான இடம்.தண்ணீர் அதிகம் உள்ள இடம்.இங்கு இருந்துதான் பைக்காரா மின் உற்பத்தி நிலையத்துக்கும்,சிங்காராவுக்கும் தண்ணீர் செல்கிறது.இதன் மேலே ஆய்வு மாளிகை உள்ளது.அதன் அருகில் வெலிங்டன் நீர் பயிற்சி கல்லூரி உள்ளது.அருமையான இடம்.மத்திய படையினர்க்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படும் பைக்காரா அருவி :
பைக்காரா அருவி செல்ல நீங்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும்.அருவியில் குளிக்க முடியாது.இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அருவிக்கு மிக நீண்ட தூரம் முன்பாகவே நமது காரை நிறுத்தி விடுகின்றனர்.அங்கு இருந்து சுமார் 10 நிமிடங்கள் நடந்து சென்றால் வனத்துறையினர் நம்மிடம் தலைக்கு ரூபாய் 10 வாங்கி கொண்டு உள்ளே விடுகின்றனர்.நாம் அருவி மட்டுமே பார்க்க இயலும்.அந்த இடத்தில் அமர்ந்து கொஞ்ச நேரம் ரசிக்கலாம்.மீண்டும் நாம் வண்டி இருக்கும் இடத்திற்கு நடந்து தான் வரவேண்டும்.
ஒரே ஒரு வசதி இங்கு பேட்டரி கார் உள்ளது .அந்த காரின் மூலம் நடக்க இயலாதவர்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் செல்லலாம் .ஒரு வண்டிக்கு 60 ரூபாய்.ஆள் ஒன்றுக்கு ரூபாய் 10.அப்படியும் செல்லலாம் .
பைக்காரா படகு சவாரி :
அருவியில் இருந்து பைக்காரா படகு சவாரி செல்லலாம்.அங்கு ஒரு அரை மணி நேரம் அருமையான படகு சவாரி செய்யலாம்.ஊட்டியில் படகு சவாரி செய்வதை விட இங்கு படகு சவாரி செய்வதன் நன்மை என்னவெனில் ,இங்கு தண்ணீர் நன்றாக சுத்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.ஸ்பீட் போட்,குழுவாக செல்லும் போட் என அனைத்து வகையான போட்களும் உண்டு.
பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் :
பைக்காரா அருவியில் இருந்து வெளியில் வந்து சிறிது தூரத்தில் கீழே இறங்கினால் பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் வருகிறது.அங்கு பைக்காரா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்குள் வந்து எவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்டுகிறது என்பதை தெளிவாக காண இயலும்.இதற்கு நாம் மின் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.
பைக்காரா ஷுட்டிங் ஸ்பாட் :"
பைக்காரா நீர் மின் நிலையத்தில் இருந்து வெளி வந்து நாம் சில கிலோமீட்டர் தூரம் சென்றால் ஷுட்டிங் ஸ்பாட் என்கிற அருமையான புல் வெளி பகுதி வருகிறது.அங்கு வனத்துறையின் டிக்கெட் வாங்கி கொண்டு நாம் உள்ளே செல்லலாம் .உள்ளே செல்லும்போது நாம் எந்த பேப்பரும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மலையேறும் வழி அழகாக உள்ளது.அதன் இடது புறத்தில் குதிரை சவாரி உள்ளது.வனத்துறை மற்றும் உள்ளூர் சுற்று சூழல் குழுமம் இணைந்து இதனை நடத்துகின்றனர்.கொஞ்சம் கட்டணம் அதிகமாக உள்ளது.ஒரு ரவுண்டு ,அரை ரவுண்ட்,பழங்குடியினர் வசிக்கும் இடம் வரை சென்று வரக்கூடிய சுற்று என அனைத்துமே கட்டணத்துடன் உள்ளது.சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் மற்றும் சவாரி.
குதிரை சவாரியை முடித்து கொண்டு மேலே ஏறினால் நமக்கு புல் வெளிகளாலான மலை முட்டுக்கள் வருகின்றன.பார்க்கவே சூப்பராக உள்ளது.ஏறிய களைப்பில் அப்பாடா என அமர்ந்தால் நமக்கு நல்ல வசதியாக இடம் உள்ளது.மலையின் ஒரு பகுதியில் மிஸ்ட் உருவாகி வருவது அருமையான அழகு.
இங்கு காலை முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி உண்டு.நாங்கள் மாலை சுமார் 6.30 மணிக்கு கிளம்பி அங்கிருந்து நேராக பைக்காரா அருவி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குடியிருப்பில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினோம்.
ஊட்டியில் மட்டுமே குளிரை அனுபவிக்க முடிகிறது.மசினகுடியில் கிடையாது.ஊட்டியில் நாங்கள் தங்கிய இடத்தில் இரவு நேரத்தில் மான்கள் கூட்டம் மிக எளிதாக வந்து செல்கிறது.குளிரும் நல்ல குளிர்.
நான்காம் நாள் பயணம் :
முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் :
பைக்காராவில் கிளம்பி மின்சார வாரியத்தின் நண்பர் ஒருவரின் உதவியுடன் முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் ஆரம்பித்தோம்.இங்கு மின் வாரியத்தின் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.பைக்காராவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் நாம் செல்லும்போதே இடது பக்கத்தில் ஒரு பிரிவு செல்கிறது.காட்டுக்குள் செல்வதற்கு முன்பு சோதனை சாவடி ஒன்று பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.அதனை திறந்து கொண்டு நாம் உள்ளே செல்ல வேண்டும்.அதற்கான சாவி மின்சார வாரியத்தில் உள்ளது.மிக அடர்த்தியான காட்டின் வழி பயணம்.சாலையோ மிக,மிக சுமார்.(சுத்தமாக ஒன்றுமே இல்லை ) ஆபத்தான பயணம்.ஏனெனில் வாகனம் வழியில் எங்கு நின்றாலும் நாம் யாரிடமும் போன் செய்து கூட பேச இயலாது.சுத்தமாக எந்த மொபைல் போன் டவர் கிடையாது.அடர்த்தியான காட்டு பகுதியாக இருப்பதால் சிறுத்தை,கரடி அதிகமாக உள்ளதாக சொன்னார்கள்.அவை வழியில் வந்தால் மிக சிரமம்.
சாலையின் ஒரு பக்கம் அடர்த்தியான காடு.மறுபக்கம் பைக்காரா அணையின் தண்ணீர் பகுதி தொடர்ந்து நம்முடன் பயணித்து வருகிறது.சுமார் ஒன்றரை மணி நேர மிக மெதுவான பயணத்திற்கு பிறகு முக்குருத்தி அணையை அடைந்தோம்.நிற்க .
மிக அருமையான அணை கட்டு.அந்த காலத்தில் ஆங்கிலேயர் இந்த இடத்தை கண்டு பிடித்து அடர்த்தியான காட்டுக்குள் மிக பெரிய கற்களை கொண்டு கட்டுமானம் செய்து உள்ளனர்.அப்போதே அவர்கள் கையால் இயக்கக்கூடிய ஷட்டர்,தண்ணீர் அதிகமானால் தானாகவே திறந்து கொள்ள கூடிய ஒரு இயந்திர அமைப்பு என அசத்தி உள்ளனர்.இந்த அணையை வடிவமைத்த பொறியாளர் ,மற்ற அணைக்கட்டுகளில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டும் வண்ணம் உள் பகுதியில் அணை கட்டு வருமாறு கட்டி உள்ளார்.
இங்கு உள்ள தண்ணீர் மிக அருமை.நல்ல சுத்தமான தண்ணீர்.மிக தூய்மையான தண்ணீரில் வசிக்கும் ஸ்காட் மீன்கள் இங்கு வாழ்ந்து வருவதாக சொன்னர்கள்.அந்த காலத்தில் இந்த அணையை கட்டும்போது தண்ணீரை மடை மாற்றி விடும் வண்ணம் வேறு வழி ஏற்படுத்தி உள்ளனர்.மிக பெரிய அதிசியம் இது.
இங்கு உருவாகும் தண்ணீர் முழுவதுமே ஊற்றுக்குள் இருந்தும்,மலைகளில் இருந்தும் பெருகும் தண்ணீர் தான்.இந்த அணைக்கட்டில் இருந்து அருகில் இருக்கும் மலை பகுதியை பார்த்தால் ஒரு தேவதை படுத்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.மிக அருமையான அணைக்கட்டு.
இது தான் நமக்கு நீர் வழி மின்சாரம் தயாரிக்க உதவும் மிக பெரிய அணைக்கட்டு.இங்கு இருந்துதான் தண்ணீர் உற்பத்தி ஆகி பைக்காரா சென்று அங்கு இருந்து கிளன்மார்கன் சென்று அங்கு இருந்து சிங்காரா சென்று மோயாரை அடைந்து பவானி சாகர் ஆற்றுக்கு செல்கிறது.முக்குருத்தி அணைக்கட்டில் நின்று கொண்டு இருக்கும்போது நமக்கு இயற்கையான காற்று ,தண்ணீர் ,நல்ல சீதோஷண நிலை என அனைத்துமே அருமையான அனுபவம்.நாம் நிற்கும் இடத்தில் நம்மை சுற்றி பச்சை பசேல் என்று அருமையான இயற்கை வளம்.மரங்கள்.அடர்த்தியான காடுகள்.
ஆங்கிலேயர் காலத்து ஆய்வு மாளிகை :
அணைக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது அந்த காலத்து ஆய்வு மாளிகை மிக சுமாரான நிலையில் உள்ளது.அதனில் இருந்துதான் அதிகாரிகள் இந்த அணையை வடிவமைத்து உள்ளனர்.இப்போதும் அங்கு ஒரு பூ செடி மிக அருமையாக பூத்து குலுங்கி கொண்டு உள்ளது.
முக்குருத்தி நீர் மின் நிலையம் :
அணைக்கட்டில் இருந்து கீழே வந்தால் புதியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் உள்ளது.அங்கு இருந்து அணைக்கட்டின் அழகை நாம் ரசிக்கலாம்.இங்கு அதிகமான அளவில் மந்தி கூட்டம் உள்ளது.
மீண்டும் பைக்காரா நோக்கி பயணம் :
முக்குருத்தி பயணம் முடித்து மிக கவனமாக எங்கள் வாகனத்தை இயக்கி கொண்டு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் பைக்காராவை அடைந்தோம்.அருமையான வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.எங்களை அழைத்து சென்றவர் சொன்னார் : இந்த வழியில் எப்போதுமே ஒரு மரம் விழுந்து போக்குவரத்தை பாதிக்கும்.ஆனால் உங்கள் அதிர்ஷ்டம் மரம் எதுவும் விழவில்லை.பொதுவாக இது மிக அடர்ந்த கட்டு பகுதியாக இருப்பதால் யாரும் இந்த வழியாக செல்வது இல்லை.மதியம் இரண்டு மணி போல் நாங்கள் பைக்காரா வந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு கோத்தகிரி அருகே உள்ள தொட்டபெட்டா நோக்கி வண்டியை செலுத்தினோம்.
தொட்டபெட்டாவின் அழகு :
பைக்காராவில் மதியம் 3 மணி அளவில் கிளம்பி ஊட்டி வழியாக தொட்டபெட்டா மாலை 4.10 மணி அளவில் அடைந்தோம்.தொட்டபெட்டா செல்லும் வழி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஒரு வாகனத்துக்கு 40 ரூபாய் முதல் 75 வரை வசூல் செய்கின்றனர்.ஆனால் சாலையோ மிக ,மிக சுமாராக உள்ளது.நிமிடத்திற்கு பல வண்டிகள் சென்று கொண்டும் ,வந்து கொண்டும் உள்ள சாலையை செப்பனிட்டால் நல்லது.
தொட்டபெட்டாவில் இயற்கை அழகை ரசித்தோம்.நாங்கள் செல்லும்போது வான்வெளி வழியாக மிஸ்ட் உருவாகி இருந்ததால் எங்களால் ஊட்டியின் அழகை ரசிக்க இயலவில்லை.ஆனால் நேரடியாக பார்க்கும்போது மிக நன்றாக இருந்தது.
பசுமை பள்ளத்தாக்கு அருமையானதாக இருந்தது.அங்கு செல்ல ,செல்ல பயம் தான் அதிகம் வருகிறது.சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் வாகனம் வழியாக கோத்தகிரி செல்லும் பாதைக்கு வந்தோம்.
அரசு தேயிலை தோட்டம் :
தொட்டபெட்டாவில் இருந்து வெளியில் வந்து கோத்தகிரி செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அரசு தேயிலை உற்பத்தி செய்யும் இடம் உள்ளது.மிக பெரிய தோட்டம்.சுமார் 45 நிமிடங்கள் 800 மீட்டர் தூரத்தை தேயிலை தோட்டத்தை ரசித்தபடி சென்று வரலாம்.மலை ஏறி தேயிலை தோட்டத்தை பார்த்தபடி இயற்கை அழகை ரசித்தபடி நடந்தே சென்று மீண்டும் நடந்தே வரலாம்.அருமையான வாய்ப்பு.
தேயிலை உருவான வரலாறு :
நாம் நடந்து செல்லும் பாதையில் ஆங்காங்கே நாம் இளைப்பாறும் வகையில் உட்காரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றின் அருகில் தேயிலை எவ்வாறு உருவானது,அதன் வளர்ச்சி ,அதனை யார் முதலில் தோட்டமிட்டது,இந்தியாவில் யாரால் கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு தகவல்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஆங்காங்கே தேயிலை குடிக்கும் கப் வடிவத்தில் வரைந்து உள்ளே தகவலை கொடுத்துள்ளனர்.பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.
தேயிலை தோட்டத்தை பார்ப்பதற்கு கட்டணம் :
தேயிலை தோட்டத்தின் உள்ளே செல்வதற்கு வாகனத்திற்கும் ,நபர்களுக்கும் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்க படுகிறது.பார்க்க வேண்டிய தோட்டம்.இங்கு இட்லி பூ,சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு சாதனங்கள்,ஊஞ்சல் என பல்வேறு பொருள்கள் உள்ளன.அவற்றை பார்த்து ரசிக்கும் வகையில் அழகான புல் தரைகள் உள்ளன .
தமிழ்நாடு அரசின் தேயிலை விற்பனை: தேயிலை தூள் (ஒரிஜினல் தூள் ) இங்கு விற்கப்படுகிறது.பல விலைகளில் விற்கப்படுகிறது.இதனில் குறிப்பிடத்தக்க விஷயம் ,நாம் ஒரு 45 நிமிடம் மலை ஏறி ,இறங்கி களைப்புடன் வந்த உடன் நமக்கு சுட,சுட இஞ்சி டீ ,சுக்கு டீ ,லெமன் டீ என இலைகளுடன் குறைந்த விலையில் தரப்படுகிறது.அதனை நாம் சாப்பிட்டால் நாம் பயணம் செய்த களைப்பு காணாமல் போய் விடுகிறது.இவ்வாறு நாங்கள் தேயிலை தோட்டத்தை பார்த்து விட்டு மீண்டும் கோத்தகிரி நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
காரைக்குடி நோக்கி பயணம் :
மாலை 6 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் விடை பெற்று அங்கிருந்து நாங்கள் கோத்தகிரி,மேட்டுப்பாளையம்,பல்லடம்,அன்னுர் ,தாராபுரம்,ஒட்டன்சத்திரம் ,திண்டுக்கல் ,நத்தம்,கொட்டாம்பட்டி,திருப்பத்தூர் வழியாக இரவு ஒரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.
சுற்று பயணத்தில் உணவு - சாப்பாடு தொடர்பாக :
முதல் நாள் காலை மேட்டுபாளையத்தில் அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டோம்.
முதல் நாள் மதியம் முதல் மூன்றாம் நாள் காலை வரை நாங்கள் மசினகுடியில் உள்ள ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டலில் மட்டுமே சாப்பிட்டோம்.இங்குதான் நாம் சாப்பிடும் உணவு நமக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை.மேலும் விலையும் சரியானதாக இருந்தது.இடையில் ஒரு வேளைக்கு மட்டும் சஃபாரி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டோம் .அங்கு அனைத்து உணவுகளும் விலை அதிகம்.அதோடு உணவு பொருள்களும் சுமாரான டேஸ்டுடன் இருந்தன.
பைக்காரா உணவு விடுதிகளில் விலை வித்தியாசம் :
மூன்றாம் நாள் மதியம் பைக்காரா அருவி அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டோம்.பைக்காராவில் உள்ள உணவு விடுதிகளில் உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் ஒரு விலை .தெரிந்தவர்கள் யாரேனும் இல்லை என்றால் கடைக்காரர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உணவு விலை சொல்லுகிறார்கள்.வருபவர்களும் ஒரு வேளைமட்டும்தானே என்று கேட்கும் காசை கொடுத்து செல்கின்றனர்.எனவே பைக்காராவில் சாப்பிடும்போது கவனமாக சாப்பிடுங்கள்.
மூன்றாம் நாள் இரவு,நான்காம் நாள் காலை ஆகிய இரண்டு வேளையும் அருமையான உணவு சாப்பிட்டோம்.மின்சார துறையின் நண்பர் வழியாக ஆய்வு மாளிகையில் உணவு தயாரிக்கப்பட்டு அங்கு சப்பிட்டோம்.இரவு சப்பாத்தியும்,காலையில் இட்டலியும் அருமையாக செய்து கொடுத்தார்கள்.நான்காம் நாள் மதியம் மீண்டும் பைக்காரா அருவி அருகே உள்ள ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டோம்.அருமை.
ஹோட்டலில் தங்கிய இடம் :
மேட்டுப்பாளையயத்தில் முதல் நாள் இரவு காவேரி இன்டர்நேஷனல் என்கிற ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.நன்றாக இருந்தது.முன்னதாக மயூரா என்கிற ஹோட்டலில் ரூம் புக் செய்தோம்.ஆனால் இரவு 12 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று ஹோட்டலில் விசாரிக்கும்போது,அப்போது ரூம் இருந்தது ,இப்போது இல்லை.வேண்டுமானால் டபுள் ஏசி ரூம் ( கட்டணம் அதிகம் ) இருக்கிறது.தங்கி கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்கின்றனர்.பிறகு மீண்டும் நண்பர்களிடம் முன்பே விசாரித்து வைத்ததன் அடிப்படையில் காவேரி ஹோட்டலுக்கு சென்று ரூம் எடுத்து தங்கினோம்.
மசினகுடியில் மூன்று நாட்களும் ஹோட்டல் ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் தங்கினோம்.நல்ல காற்றோட்டமான அறை .வெண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.அங்கு உள்ள உதவியாளரும் நன்றாக உதவியாக இருந்தார்.இந்த ஹோட்டலின் அருகில் சாப்பிடும் இடம்,மெயின் ரோடு,என அனைத்து வசதியும் உள்ளது.
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக