சனி, 17 மார்ச், 2018

பாக்கெட் பாலில் தொடங்கிய யுத்தம்... இயற்கை போராளியான பெண்ணின் கதை!


பாக்கெட் பாலில் தொடங்கிய யுத்தம்... இயற்கை போராளியான பெண்ணின் கதை!
 துரை.வேம்பையன்

சென்னை எத்திராஜ் கல்லூரியில் விசிடர் பேராசிரியையாகப் பணிபுரிகிறார் பருவதா. சென்னைச் சூளைமேட்டில் வசிக்கிற மாடர்ன் பெண்ணான இவருக்கும், விவசாயத்திற்கும் சில வருடங்களுக்கு முன்பு வரை எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இப்போது இவர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கையைக் காக்க பாடுபடுவது என்று எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார். சில இளைஞர்களோடு சேர்ந்து பாண்டிச்சேரியில் பல விவசாயிகளை அந்த மாநில முதல்வரின் ஒத்துழைப்போடு இயற்கை விவசாயத்திற்குத் திருப்ப காரணமாக இருந்திருக்கிறார். அவரை இயற்கை நோக்கி திரும்ப வைத்தது அவரது மகளுக்குக் கொடுத்த பாக்கெட் பால்தான் என்கிறார். பிறந்த முதல் நாளிலிருந்து மகளுக்கு பாக்கெட் பாலையே கொடுத்ததாகவும், அதனால் அந்தக் குழந்தை சீரியஸான நிலைக்குப் போனதோடு, ஆறு வயது வரையில் செயற்கையான எந்த உணவைத் தின்றாலும் வாமிட் எடுத்ததாகவும் கூறுகிறார். அதன் பிறகு அவர் எடுத்த முடிவு, அவரை இயற்கை உணவுக்கு, தான் மாறியதோடு நில்லாமல், மற்றவர்களையும் மாற வைக்கும் முயற்சிகள் எடுக்கவைத்துள்ளது.

அவரிடமே பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரி. அப்பா சண்முகசுந்தரம் பாண்டிச்சேரி அரசாங்கத்தில் ஏ.எஸ்.பியா பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். எம்.ஏ பிரெஞ்ச் முடித்த என்னைப் பத்து வருடங்களுக்கு முன்பு சென்னைச் சூளைமேட்டைச் சேர்ந்த பேங்கில் வேலை செய்யும் ராகேஷூக்குத் திருமணம் பண்ணிக் கொடுத்தாங்க. நான் ரொம்ப மாடர்னா வளர்ந்த பொண்ணு. சில வருடங்களுக்கு முன்பு வரை எனக்கு விவசாயத்தைப் பத்தி  எதுவுமே தெரியாது. ஏழு வருடங்களுக்கு முன்பு எனக்கு ஸ்மரா பொறந்தா. ஆனால், எனக்குத் தாய்பால் சுரக்கலை. அதனால், டாக்டர்களும், 'பாக்கெட் பால்ல பவுடர் பாலைக் கலந்து கொடுங்க'ன்னு சொல்லிட்டாங்க. முதல்நாள்ல இருந்து குழந்தைக்கு பாக்கெட் பாலை மட்டும் கொடுக்க ஆரம்பிச்சேன்.

ஆனால், குழந்தை அழுதுகிட்டே இருந்துச்சு. எனக்கு மார்பக காம்புகள்ல புண் வர ஆரம்பிச்சுச்சு. பத்து நாள்ல இருந்து ஸ்மராவுக்கு வாமிட் வர ஆரம்பிச்சது. உடனே, பதறிப்போய் தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிட்டு ஓடினேன். பல டாக்டர்களுக்குக் காரணம் தெரியலை. ஒரே ஒரு அரசாங்க மருத்துவமனை டாக்டர் மட்டும், `குழந்தைக்கு வந்திருக்கிறது ஒவ்வாமை நோய். நீங்கக் குழந்தைக்குப் புகட்டும் பாக்கெட் பால்தான் காரணம். தாய்ப்பால் சுரக்குறத்துக்காக குழந்தை பொறக்குறதுக்கு முன்னாடியே நீங்க சில முயற்சிகளை செஞ்சிருக்கணும். பரவாயில்ல, இன்னையிலிருந்து அதை செய்யுங்க'ன்னு சொன்னாங்க. 'ஃபீடிங் டெக்னிக்'னு அவங்கச் சொன்ன முயற்சிகளைச் செஞ்சாலும், மூணு மாசத்துக்கு எனக்குச் சரியாக தாய்ப்பால் சுரக்கலை. அதற்குள் குழந்தை அடிக்கடி வாமிட் எடுக்கிறது, எடை குறையறதுனு, பயங்கரமா அழுவுறதுன்னு சீரியஸான கண்டிஷனுக்குப் போயிடுச்சு. உடனே மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தோம். அதன்பிறகு, கொஞ்சம் தேறுச்சு. எனக்கும் கொஞ்சமா தாய்ப்பால் சுரக்க ஆரம்பிச்சுச்சு. ஆனாலும், ஆறு வயது வரை குழந்தை எந்தச் செயற்கை உணவைச் சாப்பிட்டாலும் உடனே வாமிட் எடுத்துரும்.


இதற்கிடையில், 'ஸ்மராவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்குக் காரணம் என்ன'ன்னு குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அதன்பிறகுதான், நாம் நஞ்சான உணவுகளைச் சாப்பிடுவதோடு குழந்தைக்கும் கொடுத்த உண்மை உரைத்தது. அதனால், 'இனி இயற்கை உணவுகளையே சாப்பிடுவது'ன்னு உறுதி பூண்டேன். அதன்பிறகு, ஸ்மரா பிறந்து இரண்டு வருஷம் கழித்து ரக்ஷன் பொறந்தான். அவனுக்குத் தாய்ப்பாலை தவிர வேற எதையும் உணவா கொடுக்கலை. அதோடு, நான் அப்போது முழுநேர பேராசிரியையாகப் பணிபுரிந்த ஆசான் கல்லூரியில் படித்த மாணவிகளிடம் தாய்ப்பாலை கொடுப்பதின் அவசியம் பற்றி விளக்கினேன். வீட்டில் நான், என் கணவர், மகள், மகன் என எல்லோரும் இயற்கை உணவுகளையே சாப்பிட ஆரம்பித்தோம். இயற்கை உணவுகளைச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிப்பதை எக்ஸ்பிரிமென்ட் செய்து, அதைப் பார்க்கும் எல்லோரிடம் சொல்லி விழிப்புஉணர்வு ஏற்படுத்தினேன். என் மகளுக்கு ஆறு வயதுக்குப் பிறகுதான் வாமிட் ஆவது முற்றிலும் நின்னுச்சு. இந்தச் சூழலில்தான், கடந்த வருட பொங்கலுக்கு இளைஞர்கள் நாட்டுமாடுகளைக் காக்க ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்தினாங்க. மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஸ்மராவோடு போய் கலந்துகிட்டேன். அங்கே, நாட்டுமாடு, நாட்டுப்பால் கிடைக்காமல் ஸ்மரா பட்ட அவஸ்தையை 20 ஆயிரம் இளைஞர்கள் கூடியிருந்த இடத்தில் பேசினேன். நல்லா ரீச் ஆச்சு!


அங்கே, பெங்களூருவில் ஐ.டி ஃபீல்டில் பணிபுரிந்த ராஜேஷ் என்ற இளைஞரின் நட்பு கிடைத்தது. அவர், நான் இன்னும் சில இளைஞர்கள் சேர்ந்து 'சேஃப் ஃபார்மர்ஸ்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். இந்த அமைப்பு மூலமா வாரா வாரம் சென்னையில் பல்வேறு இயற்கை உணவு, இயற்கையைக் காப்பது பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். திருவாரூர் மாவட்டத்தில் கடன் தொல்லையில் இறந்த விவசாயியின் மனைவிக்கு எங்க செலவில் கோழிப்பண்ணை வைத்துக் கொடுத்தோம். இன்னும் சில விவசாயிகளின் மனைவிகளுக்குத் தையல் மெஷின்கள் வாங்கிக் கொடுத்தோம். இன்னும் சிலருக்கு நாட்டு மாடுகள் வாங்கிக் கொடுத்தோம். அதன்பிறகு, மீத்தேனுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசமூர்த்தியின் நட்பு கிடைத்தது. அவர், நான், இன்னும் பல இளைஞர்கள் சேர்ந்து நடிகை ரோகிணியை வைத்து, 'டாஸ்மாக்' என்ற இயற்கை அங்காடி அமைப்பைத் தொடங்கினோம். அந்த அமைப்பின் மூலம் இயற்கைப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர் இல்லாமல் நேரடியாகப் பொருள்களை கட்டுப்படியாகும் விலையில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

அதோடு, எங்கப்பா மூலம் புதுச்சேரி முதல்வர் நாராயணமூர்த்தியிடம் பேசி, நூறு ஏக்கரில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை 'ஆர்கானிக் ஜோன்' என்ற பெயரில் இயற்கை விவசாயம் செய்ய வைத்தோம். சமீபத்தில்தான், 500 விவசாயிகள் மத்தியில் புதுச்சேரி முதலமைச்சரை வைத்து பிரமாண்டமாக அறுவடைத் திருவிழாவையும் நடத்தினோம். வரும் போகத்தில் 5000 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வைக்கப் புதுச்சேரி முதலமைச்சரின் உதவியோடு ஒத்துக்க வைத்துவிட்டோம். அந்த முயற்சி போய்க்கிட்டு இருக்கு. அடுத்து, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அந்த மாநில முதலமைச்சர்கள் உதவியோடு இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகளைத் திருப்ப இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சரை இது விஷயமாக சந்திக்க பலமுறை முயன்றும் முடியவில்லை. அதனால், நாங்களே நேரடியாக விவசாயிகளைச் சந்தித்துப் பேசி, 5000 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். எனது இந்த முயற்சிகளுக்கு எனது வேலை தடையாக இருக்கிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு எத்திராஜ் கல்லூரியில் விசிட்டர் பேராசிரியையாகச் சேர்ந்திருக்கிறேன். எனது கணவரும் இதற்குத் தடையாக இல்லாமல் உற்சாகமூட்டுகிறார். 'நாம் சாப்பிடுவது விஷ உணவுதான், அதனால் என்னென்ன பிரச்னைகள் வரும்'ன்னு என் மகள் ஸ்மரா மூலம் நான் உணர்ந்துட்டேன். அதை எல்லா விவசாயிகளையும், தமிழ்நாடு, புதுச்சேரி மக்களையும் உணர வைப்பதுதான் எங்க உச்சபட்ச இலக்கு. அந்த இலக்கை அடைந்தே தீருவோம்" என்றவர்,

"தயவுசெய்து குழந்தைகளுக்குப் பெண்கள் அனைவரும் தாய்ப்பாலையே உணவாகக் கொடுங்கள். 'அழகு கெட்டுடும்'ன்னு பலபேர் தாய்ப்பால் சுரந்தும், குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை கொடுக்க மறுக்குறாங்க. குழந்தைகளின் உடல் நலனைவிட அழகு முக்கியமா என்பதை ஒருகணம் பெண்கள் உட்கார்ந்து யோசித்தால், கண்டிப்பாகத் தவறு செய்யமாட்டாங்க!" என்று முடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக