நீங்கள் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா..!
'சர்க்கரை வியாதி உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது, பன்னாட்டு சர்க்கரை நோய்க் கழகம். இதற்குக் காரணம் வெள்ளைச் சர்க்கரையை அளவுக்கு அதிகமாகத் தனது வாழ்நாளில் பயன்படுத்தியதுதான் என்பது பல்வேறு மருத்துவர்களின் குற்றச்சாட்டு. இதற்கு மாற்றாக இன்று பரிந்துரைக்கப்படுவது நாம் முன்னோர்கள் அதிகமாக உபயோகப்படுத்தி, நாளடைவில் மறந்து போன கருப்பட்டியைத்தான்.
இது கருப்புக்கட்டி, கருப்பட்டி, பனங்கருப்பட்டி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது பொதுவாகப் பனையிலிருந்தோ அல்லது தென்னையிலிருந்தோ எடுக்கப்படுகிறது. இது ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக்குவதோடு, மேனியைப் பளபளக்கவும் ஆக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இதனைக் கொடுத்தால், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறும். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, இதைப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும் என்பது பழங்கால வைத்தியம். அதனால்தான் கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் புழக்கத்தில் உள்ளது. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக் காபி குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதவிர மக்களும் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாக சந்தையில் போலிகள் அதிகமாக வலம் வரத் துவங்கியுள்ளன. உண்மைக்கும், போலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது? வாருங்கள் பார்ப்போம்.
பொதுவாகக் கருப்பட்டி என்பது முழுமையான கறுப்பு நிறத்தில் இருக்காது. கறுப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நடுவில் மெல்லிய வெள்ளை நிற படலம் இருக்கும். இதுதான் நிஜ கருப்பட்டியைக் கண்டுபிடிக்க எளிதான வழிமுறை.
போலியானது உடைத்துப் பார்த்தால் மையப்பகுதி கருமையாக பளபளப்பாக இருக்கும். இதுதவிர, கருப்பட்டி நாளாக நாளாக இறுகும் தன்மையைக் கொண்டிருக்கும். மாறாக இளகினால் அது போலி. அதைச் சுவைக்கும்போது அது கரிப்புத் தன்மை கொண்ட இனிப்புச் சுவை இருந்தால் அது ஒரிஜினல். வெறும் இனிப்புச் சுவை மட்டும் இருந்தால் அது போலி. அதேபோல மேற்புறம் பளபளப்புத் தன்மையுடன் இருந்தால் அது போலி. அதேபோல, அதன் மேற்புறம் வெள்ளையாகக் கையில் ஒட்டினாலும் அது போலிதான்.
உண்மையான கருப்பட்டியைச் சுவைக்கும்போது நாவில் இருந்து கரைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். கடிக்கவும் சற்று சிரமமாக இருக்கும்; போலி எளிதாகக் கரைந்து விடும். தென்னையிலோ அல்லது பனையிலோ இருந்து எடுக்கப்படும் நீரில் சுண்ணாம்பு கலந்துதான் இறக்குவர். இதனைக் காய்ச்சி உருண்டை செய்து சில நாட்கள் சென்றால் கருப்பட்டியின் மீது புள்ளிகள் உண்டாகும். போலிகளின் மீது எந்தப் புள்ளிகளும் உண்டாவதில்லை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நேரடியாகத் தயாரிக்கும் இடங்களில் பார்வையிட்டுப் பின்னர் வாங்கலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனங் கருப்பட்டியும், தென்னை அதிகமாக விளையும் ஈரோடு, திருப்பூர், கோவை, கும்பகோணம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தென்னங் கருப்பட்டியும் அதிக பிரபலம். இப்போது தோட்டத்தின் உள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் கருப்பட்டி செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் போலிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
தற்போது தென்னை சாகுபடிப் பரப்பு குறைவாகவும், பனை மரங்களின் அழிவும் போலிகளின் வரவுக்கு ஒரு முக்கியமான காரணம். இதுதவிர, கருப்பட்டிக்கு சந்தையில் இருக்கும் தேவையும் ஒரு முக்கியமான காரணம். இதனால் இதனை வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சு இயந்திரத்தில் 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ மட்டுமே கிடைக்கும். இதனால் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு வகையில் இதுவும் போலிகளுக்கு காரணமாக இருக்கலாம். கருப்பட்டிக்கு பதிலாகச் சர்க்கரை உருண்டையை விலை கொடுத்து வாங்காமல் விழிப்புடன் இருங்கள், போலிகளைத் தவிருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக