ஞாயிறு, 5 நவம்பர், 2017

குழந்தைகளின் தலைமுடி பாதுகாப்பு..



குழந்தைகளின் தலைமுடி பாதுகாப்பு..

 தொட்டிலில் படுப்பதால் பிறந்த குழந்தைகளுக்கு பொடுகுத் தொல்லை ஏற்படும். இதனைப் போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் ஊறவிட்டு பிறகு அலச வேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி அலச வேண்டும். ஒரே இடத்தில் தூங்கச் செய்யாமல், குழந்தையை சிறிது இடம் மாற்றி தூங்க வைக்க வேண்டும்.

*கூந்தலுக்கான வீட்டு* *சிகிச்சை*

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக எண்ணெய் வைக்கக் கூடாது. தினமும் எண்ணெய் தேய்த்தால்தான் கூந்தல் வளரும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. நம் கூந்தலுக்குத் தேவையான எண்ணெய் பசை இயற்கையிலேயே நம் தலையில் இருந்து சுரக்கிறது. கூந்தலை சுத்தமாக பாதுகாக்க முடியாதவர்கள் ஹேர் கட் செய்துவிடலாம்.

குழந்தைகளின் கூந்தலுக்கு எப்போதும் சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகிக்கவும். இந்த வயதில் பேன், பொடுகு பிரச்னை அதிகமாக வரும். அதைப் போக்க, வசம்பை ஊற வைத்து,  அரைத்து, தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலையை அலசவும்.  வேப்பம்பூ, வெந்தயம் அரைத்து தயிரில் ஊறவைத்து தலைக்கு தடவி குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். இதற்கெல்லாம் நேரம் இல்லை என்பவர்கள் தலைக்கு குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி அளவு துளசி, வேப்பிலை போட்டு குளிக்க வைக்கவும்.

சில குழந்தைகள் எப்போதும் அரிப்பினால் தலையைச் சொரிந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் தண்ணீர் கடினத் தன்மையுடன் இருக்கக் கூடாது. நல்ல தண்ணீர் கிடைக்காதவர்கள் படிகாரம் போட்டு பயன்படுத்தவும்.

குழந்தைகளுக்கு என தலையணை உறை, டவல், பெரிய பற்களை உடைய தனி சீப் உபயோகிக்கவும். 6 மாதங்களுக்கு ஒருமுறை சீப்பை மாற்றுவது நல்லது. புதினா இலைகளை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு ஷாம்புவோடு இதை ஒரு டீஸ்பூன் கலந்து உபயோகித்தால் ஷாம்புவின் ரசாயனத் தன்மை குறையும். வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஊற வைத்து குளிப்பாட்ட லாம்.

குழந்தைகளுக்கு சளித் தொல்லை ஏற்படும் என நினைத்தால் வாயகன்ற பாத்தி ரத்தில் நீரைக் கொதிக்க வைத்து சிறிய கிண்ணத்தில் எண்ணெய் விட்டு கொதிக்கும் பாத்திரத்தில் வைத்து சூடு செய்து எடுத்து உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து சத்தான உணவு கொடுத்து வந்தால் கூந்தல் பிரச்னைகள் இருக்காது. முளைகட்டிய கருப்புக் கொண்டைக் கடலை தினமும் ஒரு டீஸ்பூன், அடிக்கடி அரைக்கீரை கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக