வெள்ளி, 12 மே, 2017

அன்னையர் தினம் Mother's Day மே 2 வது வாரம்.



அன்னையர் தினம்  Mother's Day  மே 2 வது வாரம்.

அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்... அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.
'தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.
ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் 'அன்னை' என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
"அன்னையர் தினம் " Mother's Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.
வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.
ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளுக்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் தேதி மூன்று நாள் விழா நடத்தினர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.
கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன..
இவ்வாறான நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவியரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.
"ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர்.. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் தன் இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டு சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் Jarvis மறைந்தார். இவரின் மகள் அனா ஜார்விஸ் Anna Jarvis முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இதைத் தொடர்ந்து அனா ஜார்விஸ் Anna Jarvis 1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.
மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.
இவரின் வேண்டுகோளையும், நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. 46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.
உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.
அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களின் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம்போல் மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினம் வருவதற்கு முன்பு அல்லது அன்னையர்களை கௌரவிக்கவும், மகிழ்விக்கவும் பல நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற்பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
இவ்விடத்தில் இத்தினத்தை வியாபாரப் பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று பணம் சம்பாதிக்க எத்தனித்தது. இதனையறிந்த அனா ஜார்விஸ் வெகுண்டெழுந்தார். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் "செண்டிமெண்ட்" நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதிட்டார். ஈற்றில் வெற்றி பெற்றார். எனவே, அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை அனா ஜார்விஸ் எதிர்பாரத்தாரேயன்றி அது ஆடம்பரமாகவும், பணத்தை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது.
எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக