குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60
‘V ery good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை உணரும் நிலையில் தந்தை இல்லை. கோபாலபுரத்தில் குன்று போல் உட்கார்ந்து இருக்கிறார் கருணாநிதி.
முதல் நாள்!
முதல்நாளான அன்று எப்படி இருந்தது கோபாலபுரம்? 17 இலைகள் போடப்பட்டு இருந்தன. அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், விருத்தாசலம் செல்வராஜ், எம்.பி. சுப்பிரமணியம், ம.பா.சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இசப்பன், பி.எஸ்.சந்தானம், சி. நடராஜன்... ஆகிய 15 எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற 15 பேருக்குமான விருந்து அது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டமே அங்குதான் நடந்தது. இவர்களுடன் இருந்தார்கள் நெடுஞ்செழியனும் மதியழகனும். காலை உணவை முடித்துவிட்டு நேராகச் சட்டமன்றத்துக்கு இவர்கள் செல்ல வேண்டும். அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.
``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.
“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.
“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.
“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.
“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”
அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.
“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.
கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.
1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கருணாநிதி. அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளை, ஒரு புதிய அரசியல் அணிக்கான அரசியல் சேர்க்கையாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஆக்கிக் காட்டத் திட்டமிட்டுள்ளார். எப்படிப் பார்த்தாலும் தி.மு.க-வுக்கு கருணாநிதி, ‘ஆயிரம் பொன்!’
கருணாநிதியின் சட்டமன்ற வாழ்க்கைக்கு வைரவிழா கொண்டாடுகிறது தி.மு.க. அதை விட அவர்களுக்குப் பெருமை தரத்தக்கப் பெரியது எதுவும் இல்லை. ஆனால், அந்த ஒரு பெருமை மட்டும் போதுமா? அண்மைக்கால தி.மு.க-வின் சட்டசபைச் செயல்பாடுகள் தி.மு.க-வுக்கும் கருணாநிதிக்கும் பெருமைதரத்தக்கதாக இல்லை. ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த நாளில், தனபாலின் கையைப் பிடித்து முறுக்கி வெளியில் தள்ளுகிறார் ரிஷிவந்தியம் ‘வசந்தம்’ கார்த்தி. மாட்சிமை தங்கிய பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்கிறார்கள் வில்லிவாக்கம் ரங்கநாதனும், ஆயிரம் விளக்கு கு.க. செல்வமும். இவர்களைக் கண்டித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், தி.மு.க. செயல் தலைவர். உரிமைக்குழு அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய ஸ்டாலினோ, சட்டையைத் திறந்து போட்டு வருகிறார். சண்டையில் கிழியாத சட்டை கிடையாது. ஆனால், சண்டையே நடக்காத இடத்தில் சட்டை கிழிந்தது எப்படி?
“தி.மு.க. உறுப்பினர்கள் படித்துவிட்டுப் பேச வேண்டும்” என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். “இது குடித்துவிட்டுச் சொல்வதுபோல இருக்கிறது” என்று கார்ட்டூன் போட்டுவிட்டது ‘முரசொலி’. கருணாநிதி வெளியூரில் இருந்தார். பார்த்துவிட்டுப் பதறிப் போனார். உதவி ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்தார். மாதா கவுடர் என்ற உறுப்பினர் உரிமைப் பிரச்னை கொண்டு வந்தார். ‘`இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. வருத்தம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றார் கருணாநிதி. ‘`தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று உறுப்பினரே சொல்லிவிட்டபிறகு உரிமைப் பிரச்னை தேவையில்லை” என்று முதலமைச்சர் சொன்ன காட்சியைப் பார்த்த சபை இது. யாரோ செய்த தவற்றுக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க, மன்னிப்பை ஏற்று, பிரச்னையை மறந்த பக்தவத்சலங்கள் வாழ்ந்த காலம் எங்கே...?
இன்றே கலவரம் ஏற்படுத்துவது... நாளையே கலைப்பது... நாளை மறுநாளே தேர்தல் நடத்துவது, வெற்றி பெறுவது என, அமைச்சர் ஆகி விடுவோம் என்ற கனவில் சட்டசபையை வாரச்சந்தையாக மாற்றிய மனிதர்கள் இங்கே! இத்தகைய தீராத விளையாட்டுப் பிள்ளைகளை நம்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், தி.மு.க. கரை சேராது. காகித ஓடம் கடலலைமீது போவது போலே போய்விடும். இவர்களும் போய்விடுவார்கள். ஏனென்றால், இவர்கள் வந்தவர்கள்!
கருணாநிதி நிரந்தரம். ஸ்டாலினும் நிரந்தரம் ஆகப் போகிறாரா என்பதே முக்கியம். இத்தனை வட்டக்கழகங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கருணாநிதி தலைவர் அல்ல; கருணாநிதி தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழகங்களும், நகர கழகங்களும் இருந்தன; இருக்கின்றன. கருணாநிதி என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184-ம் கருணாநிதியால் வாங்க முடியும்; 234-க்கு 1-ம் வாங்கியவர்தான் அவர். 1971-லும் தலைவர்; 1991-லும் தலைவர் தான் என்றால், முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல்.
அவரால் இன்று எழுந்து வர முடியவில்லை; எழுத முடியவில்லை; பேச முடியவில்லை. ஆனாலும் அவரது எதிரிகள், இன்னும் பலமாகத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்? அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். பெரியாரை அவர் விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பகுத்தறிவு அல்ல, வயிற்றறிவுதான் இன்று தி.மு.க-வின் வேதம். ஆனாலும், சிலருக்கு அவரைப் பார்த்தாலே வயிறு எரிந்தது. அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். முதலமைச்சர் ஆவதைவிட இப்படி ஒரு பிம்பமாக ஸ்டாலின் ஆனால்தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிமிர்ந்து நிற்க முடியும். காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் கருணாநிதியை உருவாக்கியது. காலதாமதமாக பி.ஜே.பி. எதிர்ப்பு அரசியலை ஸ்டாலின் இப்போது கையில் எடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை எதிர்ப்பது அல்ல, பி.ஜே.பி மோடியை எதிர்ப்பதில்தான் ஸ்டாலின் தனது பிம்பத்தை வளர்க்க முடியும். தேர்தல் காலத்து அணிச் சேர்க்கை அல்ல, தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளுக்கான வெகு மக்கள் திரள்தான் வெற்றியைச் சேர்க்கும். இப்போதுதான் புத்தகங்களைத் திரட்டவும், படிப்பகங்களை உருவாக்கவும் முயல்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தை அடைவதற்கு முன்னால் மக்கள் மன்றத்தையும், மக்கள் மன்றத்தை அடைவதற்கு முன்னால் படிப்பு மன்றத்தையும் உருவாக்கியதாலேயே தி.மு.க. நிலைத்தது என்ற அரிச்சுவடி இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. ‘மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை’ என்றவர் கருணாநிதி. அவர் வாய் திறந்தால் இதைத்தான் சொல்வார். ஏனென்றால் அவர் 20-ல் விளைந்தவர்.
எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த் வரை: கருணாநிதியின் எதிர்நிலை அரசியலில் வென்று நிற்கும் தமிழக தலைவர்கள்
இடமிருந்து வலமாக: கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ,விஜயகாந்த், ரஜினி | கோப்புப் படம்.
கருணாநிதியின் சிறுமை- பெருமைகளையோ, நல்லது- கெட்டதுகளையோ சொல்லுவதென்றால் எம்ஜிஆரை சொல்லாமல், அவரை ஒப்பிடாமல் யாராலும் நகர முடியாது. எம்ஜிஆர் கதாநாயகன் என்றால் கருணாநிதி எதிரி. கருணாநிதி கதாநாயகன் என்றால் எம்ஜிஆர் எதிரி. அதிமுகவினர் கருணாநிதியை எதிரியாகவே காழ்ப்பு கொட்டினார்கள். இன்னமும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரும் இதற்கு சளைத்தவர்களல்ல; எம்ஜிஆரை எதிரியாகவே கற்பிதம் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள்.
எம்ஜிஆர் சினிமாவில் கதாநாயக வலம் வந்தபோது எதிர்மறை கதாபாத்திரத்திற்கும், அதன் அடியாள் பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் அமைப்பார். அந்த வரிசையில் பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார், அசோகன், ஜஸ்டின் என பலரும் சுடர் விட்டார்கள். அவர் அரசியலுக்கு வந்த பின்பு இந்த எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு வேலையில்லாமல் போனது. அதற்காக முன்னணி கதாநாயகர்கள் இவர்களில் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தும் பார்த்தார்கள். அது எடுபடவில்லை.
ஆனால் அரசியல் வாழ்வில் எம்ஜிஆருக்கு மட்டுமல்ல; தமிழகத்தில் உருவாகியிருந்த- உருவாக இருந்த எல்லோருக்குமே வெறுப்பரசியல் சொட்டும் எதிர்நிலையாகவே விளங்கினார் கருணாநிதி. அந்த எதிர்நிலை அரசியலில் நீந்திக் கடந்தவர்தான் இன்றைக்கு தொடர்ந்து 60 ஆண்டுகாலம் சட்டப் பேரவையில் அங்கம் வகித்து அந்திமக் காலத்திலும் சுடர்விட்டு பிரகாசிக்கிறார்.
ஒரு மனிதரை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறோம். அதில் கல்வி, செல்வம், பிள்ளை, வீரம் என வரும் 16 பேறுகளை வரிசையும்படுத்துகிறோம். ஆனால் யாருக்காவது 16 பேறுகளும் உள்ள வாழ்வு கிடைத்திருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் எல்லோரும் ஏதாவது ஒரு குறையுடனே இருக்கிறோம். இன்னமும் சுருக்கமாக சொன்னால் பெரும் செல்வம் பெற்றவன் பெரும் நோயுடன் இருக்கிறான், பெரிய, பெரிய பதவிகளில் இருப்பவன் குழந்தை செல்வம் இல்லாதிருக்கிறான்.
பெரிய செல்வந்தனாக உள்ளவன் கல்வியில் தற்குறியாக இருக்கிறான். இப்படி பெரும் குறை எதுவும் இல்லாத வாழ்வு என்பது யோசித்துப் பார்த்தால் தமிழக தலைவர்களில் கருணாநிதிக்கே வாய்த்திருக்கிறது. அவர் மீது வெறுப்பரசியல் கொண்டு காழ்ப்பை உமிழ்பவர்களும் தங்களுக்குள் இருக்கும் காரண காரியங்களை ஆராய்ந்தால் தவறு என்று ஒன்றில்லை என்ற புள்ளியில் மாயவிநோத வெறுப்புகளை அகற்றிப் பார்த்தால் அது கொஞ்சமேனும் புலப்படும். அந்த எல்லையிலேயே கருணாநிதிக்கு சட்டப்பேரவை வைர விழா பாக்கியம் கிடைத்திருப்பதாக கூடத் தோன்றுகிறது.
கருணாநிதி கோவையில் வாழ்ந்த காலம். சிங்காநல்லூரில் அண்ணாசாமி என்ற பஞ்சாலைத் தொழிலாளியின் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து கொண்டு சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்று கதை வசனம் எழுதி வருகிறார். அந்த நேரத்தில்தான் மூத்த நாடக சபா காரியதரிசி ஒருவரின் சிபாரிசில் எம்ஜிஆர் கருணாநிதியை சந்திக்க வருகிறார். மொசு, மொசுவென்ற நாடக நடிக பாகவதருக்கான நிறைந்த முடியுடன் பரட்டைத் தலையுடன் செக்கச் சிவந்த நிறத்துடன் வந்த எம்.ஜி.ராமச்சந்திரனை பார்க்க அன்று அறையில் கருணாநிதி இல்லை. அவர் இரவு வெகுநேரம் கழித்தே ஸ்டுடியோவில் இருந்து திரும்ப, அவரை சந்திக்கிறார் எம்ஜிஆர். அறையில் கருணாநிதிக்கு மட்டுமேயான உணவை வைத்துவிட்டு போயிருக்கிறார் ஓட்டல் கடைக்காரர். அந்தக் கடையும் பூட்டிவிட்டார்கள். வேறு வழியில்லை. அப்போது இருந்த உணவை இருவரும் பகிர்ந்தே உண்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு 'மருதநாட்டு இளவரசி', 'மலைக்கள்ளன்' என படவாய்ப்புகள் பெற்று சுடர்விடுகிறார் எம்ஜிஆர். சிங்காநல்லூருக்கும், ராமநாதபுரத்துக்கும் 3 மைல் தொலைவு. சிங்காநல்லூரில் கருணாநிதி, ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் இருவரும் குடியிருந்து கொண்டு இந்த இடைவெளியில் இருக்கும் பட்ஷிராஜா, சென்ட்ரல் ஸ்டுடியோக்களில் இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். அவர் நடிக்கிறார்; இவர் கதை வசனம் எழுதுகிறார். இப்படியான நட்பு பின்னாளில் அரசியலில் விரிந்து அண்ணா கண்ட பொக்கிஷங்களாக நகர்கின்றனர். அண்ணாவுக்குப் பின்பு நெடுஞ்செழியனே என்ற நிலையில் செஞ்சோற்றுக்கடன் கழித்த நிலையிலேயே எம்ஜிஆர் கருணாநிதியை கை காட்டுகிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆருக்கு செல்வாக்கா?
ஆம். நிச்சயமாக என்று அந்தக் காலத்தில் இவர்களை ஊன்றிக் கவனித்த அரசியல், சினிமா புள்ளிகள் சொல்லியிருக்கிறார்கள். சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது. ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா. இதுதான் அப்போது இருந்த எம்ஜிஆர் மாயை.
'ஆரிய மாயை' என்ற புத்தகத்தை எழுதி திராவிட நாடு கொள்கைகளை வளர்த்து அரசியலில் வென்றவர்தான் அண்ணா. அது அவரின் அரசியலை பறை சாற்றியது. ஆனால் அவருக்கான வெகுஜன ஓட்டு அரசியலை எம்ஜிஆரின் சினிமா மாயையே பெருமளவு அறுவடை செய்தது. அதை சரியாகப் புரிந்து கொண்டே தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. அப்படியானால் கருணாநிதிக்கு எந்த சக்தியும் இல்லையா? என்றால் இருந்தது.
அது முழுக்க அண்ணாவின் பேச்சு, எழுத்து, அடுக்கு மொழி பேசும் சக்தி. அதையும் மீறிய அரசியல் சாணக்கியம், சாதூர்யம் அவருக்குக் கை கொடுத்தது. அரசாட்சியில் அனைத்து அதிகாரத்தன்மைகளையும் சுவிகரித்த பின்னரே கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்குமான அரசியல் பிணக்கு தொடங்கியது. அந்த பிணக்கை வைத்து கட்சியை உடைக்க மத்திய சக்திகள் துணை புரிந்தன. கருணாநிதி என்பவர் அணு, அணுவாக பேசிப்பேசி கவர்ந்து மக்களை திரட்டிய தலைவர் என்றால் எம்ஜிஆர் என்பவர் லட்சிய இளைஞராக நல்லவராகவே சினிமாவில் நடித்து, நல்லவராகவே வாழ்கையும் வாழ்வதாக மக்களை நம்ப வைத்து, குறிப்பாக தாய்க்குலமே என்று பெண்களை விழித்ததன் மூலம் அந்த சக்திகள் அத்தனையும் தனக்கே குவியுமாறு பார்த்துக் கொண்டவர்.
அந்த மக்கள் சக்தி மாபெரும் பிரளய சக்தியாகவே உருவெடுத்தது. எனவேதான் கருணாநிதியை கலெக்டிங் லீடர் என்றும், எம்ஜிஆரை மாஸ் லீடர் என்றும் நடுநிலையாளர்களை பேச வைத்தது. இந்த சூழ்நிலையில்தான் எமர்ஜென்சி வர, திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுக்கப்பட, பத்திரிகைகள் வசைபாட, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட, எமர்ஜென்சியில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக் கொடுமை அனுபவிக்க, அதை தன் பிரச்சாரத்தில் வாகாக பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்போது பதியப்பட்ட கருணாநிதியின் மீதான பிம்பங்கள் அரசியல் மாச்சர்யங்கள் கடந்தது. மேடைப்பேச்சு முந்தையதை விட தாழ்நிலை அடைந்தது. தனிமனித தாக்குதல்களுக்கென்றே தலைமைக் கழக பேச்சாளர்கள் தோன்றினர். இப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதை மிக அழுத்தமாகவே தமிழகச் சூழலில் பதிவு செய்து விட்டார் எம்ஜிஆர். அதை எப்படிப் பார்க்க வேண்டுமென்றால் சினிமாவில் நம்பியார், அசோகன், ஆர்.எம்.வீரப்பன் போன்றோரை எதிர்மறைக் கதாபாத்திரமாகவே கற்பிதம் செய்து நிலை குழைய வைத்ததை விடவும் கூடுதல் மடங்கு விஸ்வரூபம் எடுத்தது.
எம்ஜிஆர் மட்டுமல்ல; யார் வந்து கருணாநிதியை திட்டினாலும் தமிழகத்தில் ஒரு கட்சிக்கு தலைவனாகி விடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் மரணத்திற்கு முன்பே அதை பிரமாதமாக கையாண்டார் ஜெயலலிதா. மேடையில் என்னதான் திமுகவினர் கேவலமாகப் பேசினாலும் திட்டினாலும் எம்ஜிஆர் கருணாநிதியை கலைஞர் என்றும், மு.கருணாநிதி அவர்கள் என்றும் குறிப்பிட்டு பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முதல்வராக இருந்த அவையில் எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி எதிர்ப்படும் போது அவருக்கு எழுந்து வணக்கம் செலுத்துபவராகவும், புன்னகைப்பவராகவுமே இருந்தார்.
ஆனால் ஜெயலலிதா அடுத்த நிலைக்குச் சென்றார். கருணாநிதி என்று பெயர் சொல்லியே வசைபாடினார். பல சமயங்களில் வயது வித்தியாசம் கூட கருதாமல் ஒருமையிலேயே விளம்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசியலின் தீயசக்தி என்றே தாக்குதல் நடத்தினார். ஆரம்ப கட்டத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவை ஒரு அரசியல் தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை. 1989 சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததற்கு பிறகு கருணாநிதி ஜெயலலிதாவை பற்றி பேட்டிகளில் குறிப்பிடும் போதெல்லாம் அந்த அம்மையார் என்றே குறிப்பிட்டு வந்தார்.
1991ல் முதல்வராக வந்த பிறகுதான் ஜெயலலிதா என்ற பெயரையே உச்சரித்தார் கருணாநிதி. அப்படியிருந்தும் கூட மேடை நாகரிகம் கருதி அவர் மீது அவச்சொல் வீசியதில்லை. சில கட்டங்களில் ஜெயலலிதாவின் ஒருமை, ஏகவசனத்தில் திட்டும் பேச்சை கேட்டு, 'நான் இந்த அம்மையாருடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே!' என்று கூட மனம் புழுங்கி பேசியிருக்கிறார்.
இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியல்தான் தமிழகத்தில் எம்ஜிஆருக்கு மாற்றாக, அவரை விடவும் வீரியமாக தமிழக முதல்வர் பதவியில் ஜெயலலிதாவை அமர்த்தியது. எம்ஜிஆர் வாழ்ந்த காலம் வரை அவரின் எதிர்ப்பு அரசியல் வலுவை மீறி கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1980ல் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்த நிலையில் தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் 39ல் 38 ஐ வென்றார் கருணாநிதி.
அதை அப்படியே விட்டிருந்து அடுத்த தேர்தல் வரை காத்திருந்திருந்தால் கூட 1983ல் நடக்க இருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை உடைத்து எடுக்க முயற்சிக்கும் விதமாக ஆட்சியை கலைக்க இந்திரா காந்தியிடம் தூண்டுகோல் போட்டு அதை செயலாற்றியதன் மூலம் எம்ஜிஆர் வீதி, வீதியாக சென்று தாய்க்குலங்களிடம், 'யான் என்ன தவறு செய்தேன்; எதற்காக என் நல்லாட்சியை கலைத்தார்கள்?' என கண்ணீர் சிந்த, அனுதாப அலை அவர் பக்கமாக வீசி விட்டது.
முன்பிருந்த எதிர்ப்பை விட ஒரு வித எரிச்சல் அலை திமுகவிற்கு 1980ல் பெரும் தோல்வியைக் கொடுத்தது. அதன் பிறகு எம்ஜிஆர் அரசியல் சாணக்கியராகி விட்டார். 1989ல் அதிமுக உடைந்ததால் சுலபமாக திமுக ஆட்சியை பிடித்தது. அதையடுத்து வந்த இலங்கை தமிழர் பிரச்சினை, அதற்கான ஆதரவு, திமுகவில் இருந்த வைகோ கள்ளத்தோணியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கச் சென்ற சூழல், இலங்கையில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, ராஜீவ் காந்தி கொலை எல்லாமே கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் வேலைகளை செய்து விட்டது.
1991ல் வென்ற அதிமுகவின் 1996 வரையிலான தான் தோன்றித்தனமான அரசியல் செயல்பாடு கருணாநிதிக்கு மீண்டும் தெம்பைக் கொடுத்தது. தனது நிர்வாகத்திறமையால் நல்லாட்சியே நடத்தினார் கருணாநிதி. ஆனால் அரசியல் ரீதியாக அவர் தன் மகனுக்காக பெரும்பாடு பட வேண்டியதிருந்தது.
எம்ஜிஆர் இருந்தவரை அவரின் எதிர்ப்பரசியலை எதிர்கொண்ட கருணாநிதி தன் பிள்ளைக்காகவே தன் கட்சியில் பிரபலப்பட்ட வைகோவை கட்சியை விட்டே வெளியேற்ற நேர்ந்தது. அவரும் கருணாநிதியை எதிர்க்கும் போதெல்லாம் பெரும் அரசியல் தலைவர் போலவே வைகோ சுடர் விட்டார். ஆனால் எம்ஜிஆர் ஆக முடியவில்லை.
ஏனென்றால் ஏற்கெனவே எம்ஜிஆரை விட எதிர்ப்பு அரசியலில் பிரம்மாண்ட பிம்பமாக ஜெயலலிதா விளங்கியதால் அதன் முன்பு சுடர் விட முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த போது கொஞ்சமாய் ஜொலித்தவர், திரும்ப திமுகவுடன் கூட்டு வைத்த போது தன் அடையாளத்தை இழந்து நின்றார். தமிழக அரசியலை பொறுத்தவரை கருணாநிதியை எதிர்த்தால் மட்டுமே அரசியல் வாழ்கை நடத்த முடியும் என்ற முடிவுடனே அரசியல் கட்சி ஆரம்பித்து வந்த விஜயகாந்த் கருணாநிதியை திட்டும்போதெல்லாம் கறுப்பு எம்ஜிஆர் போலவே ஜொலித்தார்.
அவரே ஜெயலலிதாவை ஓங்கி திட்ட வேண்டிய நிலை வந்தபோது சிக்கலுக்குள்ளாகிப் போனார். கருணாநிதி எதிர்ப்பையும், ஜெயலலிதா எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் செய்வதென்றால் எம்ஜிஆரை போல் இன்னமும் பல மடங்கு பலம் வேண்டும். அது கிடைக்காத போது துவண்டார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் மீடியாக்கள் அலறிய வேளை அவருக்கான தனி பிம்பம் உடைய ஆரம்பித்தது. அவருக்கான உடல்நலக்குறைவு இன்னமும் அரசியல் தேய்வை கொடுத்தது. இந்த கலாட்டாக்கள் எல்லாம் நடந்த வேளை இன்னொரு எதிர் துருவமாக விளங்கிய ரஜினி அரசியலுக்கு வந்தால்? என்ற கேள்வி பலரையும் குடைந்தது.
அது திமுகவை நிறையவே குழம்ப வைத்திருக்க வேண்டும். எனவேதான் 1996ல் ரஜினி வாய்ஸ் நல்ல வாய்ஸ், படையப்பா நீ உடையப்பா என்றெல்லாம் பாராட்டிய கருணாநிதி, ரஜினி எதிர்நிலை எடுத்த வேளையில் எல்லாம் அவரைப் பற்றிய கேள்விகள் வரும்போது நோ கமெண்ட் சொல்ல ஆரம்பித்தார். அந்த நோ கமெண்ட் ஆலாபனை அவர் பேசக்கூடிய நிலையில் இருந்தவரையே தொடர்ந்திருக்கிறது.
இப்போது ஜெயலலிதாவும் இல்லை. விஜயகாந்துக்கும் பெரியதாக வரவேற்பு இல்லை. அடுத்த தேர்தல் வந்தால் சுலபமாக வென்று மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர வேண்டிய காலச் சூழல். இதை எதிர்பார்த்தது போலவே ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். நான் அரசியல் கட்சி தொடங்கினால் கெட்டவர்களுக்கு இடம் இல்லை என்கிறார். போர் வரட்டும் என்கிறார். அரசியல் கட்சி ஆரம்பிக்கிறீர்களா என்று கேட்டால் தேர்தல் வரட்டும் சொல்கிறேன் என்கிறார்.
அவருக்கு தோதாக கமலஹாசனும் வார்த்தைகளை விடுகிறார். ரஜினியை தமிழருவி மணியன் சந்திக்கிறார். நக்மா ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார். இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் தன் தந்தை தலைவருக்கு சட்டப்பேரவை வைர விழா அறிவிக்கிறார். ராகுல்காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் அந்த விழாவுக்கு வருகிறார்கள்.
இதுவெல்லாம் எதை காட்டுகிறது. ரஜினியின் புதிய பிரவேசம் திமுக அரங்குக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை சரிப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுக தலைவர்களுக்கு உள்ளது. இந்த கட்டாயமே வைர விழா தலைவரை பிரம்மாண்டப் படுத்தி கொண்டாட வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் கொள்ளலாம்
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி
"எ ன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே"
மேடையில் கரகரத்த குரலில் கருணாநிதி முழங்கினால், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். ''கதையாசிரியர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல... சிறந்த பேச்சாளர் என்பதும் 'கருணாநிதி' என்ற ஆளுமையின் அடையாளம்" என்பார்கள் அவர் கட்சி சாராத தலைவர்களும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும். எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவும்கூட, ''கருணாநிதியின் பேச்சு முறை பிடிக்கும்'' என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். பேச்சின் மூலம் ஒரு பெரும் கூட்டத்தைத் தம் பக்கம் திருப்பி வைத்திருந்தவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், சில மாதங்களுக்கு முன் திடீரென தொண்டை, நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியான இந்த சிகிச்சைகளால், கருணாநிதி பேசமுடியாத சூழல் ஏற்பட்டதோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் தடைபட்டது. கருணாநிதியை நேரில் சந்திக்க முடியாத தி.மு.க தொண்டர்கள் முரசொலியில் அவ்வப்போது இடம்பெற்ற அவரின் படத்தைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டனர். ஆனால், 'கால மேகம் மாறிவருகிறது. தலைவரின் மௌனம் உடைந்துவிட்டது' எனச் சமூக வலைதளங்களில் குதூகலமாகப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் தி.மு.க-வினர். ''ஆம்... எங்கள் தலைவர் வாய்திறந்து பேசிவிட்டார்'' என்கின்றனர் உற்சாகமாக. அதற்குச் சான்றாக நமக்கொரு பதிவை வாட்ஸ் அப்-பில் பகிர்ந்தனர்.
இதோ 'தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து கழக முன்னோடி துரைமுருகன்' எனத் தலைப்பிட்ட பதிவு :
தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால், பேச இயலவில்லை...
கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேசச் சொன்னார்கள்.
தலைவரிடம் ''உங்கள் பெயர் என்ன?'' எனக்கேட்க...
"என் பெயர் கருணாநிதி'' என்றார்.
அடுத்ததாக
''உங்களுக்கு யாரைப்பிடிக்கும்?'' எனக்கேட்க...
''அறிஞர் அண்ணா'' என்றார்.
பின்னர், என்னை ''யார்?'' எனக்கேட்க...
"துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன.
மீண்டு வருவார் தலைவர்...
'வைரவிழா நாயகர்'
கலைஞர் '94'
- இப்படிக்கு துரைமுருகன்.
இந்தப் பதிவைப் படித்ததும் ''உண்மையா?'' என்றோம் ஆச்சர்யத்துடன். "என்ன ப்ரோ இப்படி கேட்குறீங்க? தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமானதும் நாங்கள்லாம் துடிச்சுட்டோம். சீக்கிரம் குணமாகணும்னு நினைச்சோம். வீட்டுலயும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்ல டி.வி பார்க்க ஆரம்பிச்சாரு. மத்தவங்க அவருக்கு அன்றாட செய்திகளைத் தெரியப்படுத்த சத்தமா பேப்பர் படிச்சுக் காட்டுவாங்க. தினமும் செயல் தலைவர் ஸ்டாலின் ரெண்டு முறையாவது வந்து பார்த்துட்டு போவாரு. தொண்டையில் டியூப் போடப்பட்டிருப்பதால தலைவரால பேசமுடியாது. அதனால எது வேணும்னாலும் செயல் தலைவரோட கையை மெதுவா அழுத்துவாரு தலைவர். அந்த தொடுதலைப் புரிஞ்சுக்கிட்டு செயல் தலைவரும் உதவுவாரு. கொஞ்சம் கொஞ்சமா தலைவரோட சிகிச்சையில் முன்னேற்றம் வந்தது. இந்த நேரத்திலதான் 'தலைவர் பேசினார்'னு அண்ணன் துரைமுருகன்கிட்டயிருந்து பதிவு வந்தது. ஜூன் 3 - ம் தேதி வைர விழாவுக்கு எப்படியும் தலைவர்
கருணாநிதி வருவார்ங்கிற எங்க நம்பிக்கை கூடியிருக்கு" என்றனர் தூக்கலான உற்சாகத்துடன். நாம் இது குறித்து தி.மு.க-வின் முதன்மை செயலாளர் துரைமுருகனிடம் பேசினோம்.
"தலைவர் உடல்நிலை சூப்பரா இருக்கு. நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்பாரு. அதுல பிரச்னை ஒன்றுமில்லை. தொண்டையில குழாய் வைத்திருந்ததால பேசமுடியாம இருந்தாரு. அப்புறம்தான் ரெண்டு நாள் முன்னாடி குழாயை எடுத்துட்டு மருத்துவர்கள் பேசச் சொன்னாங்க. தலைவரும் பேசினார். அந்த நொடி எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு... ஒருபுதுவிதமான உணர்வு" என்றார் மகிழ்ச்சி பீறிட. அவரிடம் ,''வைரவிழா மேடையில் கருணாநிதியைப் பார்க்கலாமா?'' என்றோம். "அது மருத்துவர்களைப் பொறுத்தது, சிகிச்சையைப் பொறுத்தது. கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது." என்றார். அவரின் பதிலில் தெரிந்த அழுத்தம், எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக உள்ளது.
கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?
இந்திய அரசியலில் மூத்த தலைவராக விளங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, வருகிற 3-ம் தேதி தன்னுடைய 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கடந்து வந்திருப்பவர் அவர் . அவருடைய பிறந்தநாளில் அவர்குறித்த சுவையான பத்து விஷயங்கள் இங்கே !
1 . கருணாநிதி எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசியதுதான் அவருடைய முதல் மேடைப் பேச்சு.
2 . கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறுவயதில் கருணாநிதிக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது கிரிக்கெட் அல்ல, ஹாக்கி. திருவாரூர் ஃபோர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமிற்காக மாவட்ட அளவில் விளையாடியிருக்கிறார்.
3 . திருச்சி வானொலி நிலையத்துக்கு 1944-ல் கருணாநிதி அனுப்பி வைத்த நாடகம், ' இதனை ஒளிபரப்ப இயலாது' என்ற பதிலுடன் திருப்பி அனுப்பப்பட்டது. ஆட்சியாளர்களை அந்த நாடகத்தின் வசனங்களும் கதாபாத்திரங்களும் வெளுத்து வாங்கியதே அதற்குக் காரணம். 'குண்டலகேசி' என்ற அந்த நாடகம்தான் பிற்காலத்தில் மந்திரிகுமாரி என்ற படமானது...
4 . நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி (1953) ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை ராஜாஜி தலைமையிலான தமிழக அரசு மூடியது. "மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு பாதி நேரமும் 'குலத்தொழில்' கற்க மீதி நேரமும் ஒதுக்கும்" படி ராஜாஜி அறிமுகப் படுத்திய 'குலக்கல்வி' திட்டத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. எப்போதும் போல் பெரியார் முதல் குரல் கொடுத்தார். அண்ணா போராட்டம் அறிவித்தார். ஆண்டை நினைவூட்டும் விதமாக 53 பொதுக்கூட்டங்களில் குலக்கல்வி முறையை எதிர்த்து கருணாநிதி, தொடர் உரையாற்றினார்... விளைவு, ராஜாஜி பதவி விலகினார். முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார்.
5 . திருவாரூர் முத்துவேலர் என்பதை சுருக்கி டி.எம்.கருணாநிதி என்றுதான் தொடக்கத்தில் கையெழுத்திட்டு வந்தார் கருணாநிதி. பின்னர், மு.கருணாநிதி என்று அதை மாற்றிக் கொண்டார். 'உடன்பிறப்புக்கு' எழுதும் கடிதத்தில் மட்டும் அவர் மு.க. என்றே கையெழுத்திடுவார்.
6 . நடுத்தெரு நாராயணன், பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, அரும்பு, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், வான்கோழி, சுருளிமலை,வெள்ளிக்கிழமை, புதையல் போன்ற தலைப்புகளில் சமூகம் தொடர்பான காவியங்களை படைத்தவர் கருணாநிதி. தென்பாண்டி சிங்கம், பலிபீடம் நோக்கி, ரோமாபுரி பாண்டியன், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன் போன்ற வரலாற்றுக் காவியங்களும் கருணாநிதியின் எழுத்தாற்றலுக்கு சான்றாகத் திகழ்கின்றன. கருணாநிதியின் வாழ்க்கையையும், எழுபதாண்டு அரசியல் களத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் நூலாக அமைந்திருப்பது, 'நெஞ்சுக்கு நீதி' ! இந்நூலின் ஆறாம் பாகம் 2013-ல் வெளியிடப்பட்டது.
7 . தமிழ்நாடு அரசின் மாநில செய்தி வெளியீடாக வரும் தமிழ்நாடு அரசு செய்திப்பிரிவு (படச்சுருள்) படத்தையும், தமிழ்நாடு அரசு இதழான 'தமிழரசு' (தமிழ்- ஆங்கிலம்) இதழையும் உருவாக்கியவர் கருணாநிதிதான்.
8 . சரளமாக ஆங்கிலத்தில் பேசியதில்லை என்றாலும் கருணாநிதியின் ஆங்கில ஞானம் சற்றே அசத்தலானது... கருணாநிதியின் பேட்டி முடிந்ததும், சில நிமிட காத்திருப்பில் அந்தப் பேட்டியின் முழுமையை அறிக்கையாக அவருடைய உதவியாளர்கள் நிருபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்...
ஒரு நாள் அப்படி அறிக்கை கொடுப்பதில் சற்றே தாமதம். ஜெராக்ஸ் எடுக்கப் போன உதவியாளர் வரவில்லை. "சார், நாங்கள் எடுத்த பேட்டியை அப்படியே சொல்கிறோம், நீங்கள் 'டிக்டேட்' செய்தால் போதும்" என்றனர் நிருபர்கள். "நீங்கள் (நிருபர்கள்) சொல்வது போல் நான் டிக்டேட் செய்தால் நான் 'டிக்டேட்டர் ' (சர்வாதிகாரி) ஆகிவிடுவேனே" என்றார் கருணாநிதி. அந்த 'டைமிங்' ஆற்றலை கருணாநிதியிடம் அடிக்கடி காணலாம்.
9 . கருணாநிதிக்கு பிடித்த வசனம், "மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது.
10 . கருணாநிதியின் முதல்போராட்டமே கல்வி உரிமைக்கான போராட்டம்தான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கருணாநிதியை ஆறாம் வகுப்பில் (1936) சேர்க்க மறுத்து விட்டனர். ' என்னை படிக்க விடவில்லை என்றால் எதிரேயிருக்கும் தெப்பக் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று பள்ளிக்கு எதிராகப் போராடியதோடு தெப்பக் குளத்தில் குதிக்கவும் முற்பட்டார் கருணாநிதி. வேறுவழியின்றி அவரை பள்ளியில் சேர்த்துக் கொண்டது பள்ளி நிர்வாகம்... கருணாநிதியின் முதல் போராட்டமே வெற்றிதான். -ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி .
நன்றி விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக