வியாழன், 22 டிசம்பர், 2016

சூப்பர் பெற்றோர் ஆக என்ன செய்யலாம்?

சூப்பர் பெற்றோர் ஆக என்ன செய்யலாம்?

''பெ ற்றோர் அனைவரும், தன் குழந்தைகள்
நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல
பழக்கவழக்கங்களோடு வளரவேண்டும் என்று
விரும்புவார்கள். ஆனால், 'நற்பண்புகளில்
நாம்தான் நம் குழந்தைகளுக்கு
முன்னுதாரணமாக இருக்க வேண்டும்'
என்பதை சமயங்களில் அவர்கள் உணரத்
தவறிவிடுகிறார்கள்'' என்கிறார்,
மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள
மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் 'பேஸ்'
மேலாண்மை நிறுவன இயக்குநர்
வெ.இராமன்.பெற்றோர் கவனிக்க
வேண்டியவை குறித்துப் பேசுகிறார்.
Advertisement
''குழந்தைகளின் உலகம் வீட்டில் இருந்தே
தொடங்குகிறது. தங்கள் அம்மா
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையில் இருந்து,
அப்பாவின் உடல்மொழி வரை,
தங்கள் பெற்றோரின் ஒவ்வொரு
வார்த்தையையும்,
செயலையும்
எப்போதும்
உற்றுநோக்கிக்கொண்டே இருக்கும்
குழந்தைகள், அதையே தாங்களும்
பின்பற்றுவார்கள். தங்கள் பெற்றோரையே
அவர்கள் தங்களின் முதல் ரோல் மாடலாகக்
கொள்வார்கள். எனவே
பெற்றோர்கள் நல்ல பழக்கவழக்கங்களை,
ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக
இருக்கவேண்டியது மிக அவசியம்.
அதேபோல, 'அவ எப்பவும் தன் புத்தக
அலமாரியை நீட்டா வெச்சிக்குவா',
'இவன் எப்பப் பார்த்தாலும்
இப்படித்தான் ஹோம்வொர்க்
செய்ய உட்காரவே மாட்டான்' என்று
பெற்றோர்
சொல்லிக்கொண்டே
இருந்தால், அது நேர்மறையானதோ,
எதிர்மறையானதோ... 'நாம இப்படித்தான்
இருக்கோம்போல' என்று குழந்தைகளும் தங்களின்
குணத்தை, நடத்தையை அப்படியே
நிர்ணயித்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை
அணுகுவதிலும், அவர்களிடம் பயன்படுத்தும்
வார்த்தைகளிலும் கவனம் தேவை'' என்று
வலியுறுத்தும் இராமன், குழந்தைகளிடம்
நன்மதிப்பைப் பெற, குழந்தைகளை
நல்லவிதமாக வளர்த்தெடுக்க
பெற்றோர்கள் செய்யவேண்டுவன
குறித்துத் தந்த ஆலோசனைகள் இங்கே...
* ''பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்
ஒப்பிட்டுப் பேசக் கூடாது. அதேபோல, ஒரு
பெற்றோர் படிப்பு, உடல்நலமின்மை என்று
தன் குழந்தை பற்றி
வருந்திக்கொண்டிருக்கும்போது, 'என்
குழந்தையெல்லாம் சூப்பர்...' என்று அந்த
நேரத்தில் பெருமை பேசுவதையும்
தவிர்க்கலாம்.
* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
உறவினர்கள், நண்பர்கள் முன் மட்டம்தட்டிப்
பேசுவது, அடிப்பது கூடவே கூடாது. மாறாக,
அவர்களிடம் உள்ள நல்ல குணங்களை
கூட்டத்தில் பகிர்ந்து, குழந்தைகளின்
தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
* வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், உறவினர்கள்,
'பொண்ணு எப்படிப் படிக்கிறா?',
'பையன் சேட்டை பண்ணுவானா?' என்று
கேட்டால், 'அதை ஏன் கேட்கிறீங்க...' என்று
புகார்ப் பட்டியலை வாசிக்கக் கூடாது.
'நன்றாகப் படிக்கிறாள்/
பொறுப்பாக இருக்கிறான்... வளர
வளர நிறைய மாற்றத்தை உணர்கிறோம்' என்று
உயர்வாகப் பேசி குழந்தைகளை
உற்சாகப்படுத்த வேண்டும்.
Advertisement
* குழந்தைகள் சோகமாக இருக்கும்போது
அவர்களிடம் ஒரு நண்பன் போல பேசி,
அவர்களின் பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வு
காணவேண்டும். 'படிக்கிறதுக்கு டிமிக்கி
கொடுக்க தலை வலிக்குதுனு
சொல்லி உம்முன்னு
உட்கார்ந்திருக்கு' என்று உங்கள் யூகங்களை
அங்கே நிரப்பி அவர்களை இன்னும் தனிமையில்
தள்ளக்கூடாது.
* தினமும் குழந்தைகள் பள்ளி விட்டு வீட்டுக்கு
வந்தவுடன் நண்பர்கள், பாடம், வகுப்பு,
ஆசிரியர் என பள்ளியில் நடந்த விஷயங்களை
அவர்கள் பெற்றோர்களிடம்
பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை
உருவாக்க வேண்டும். அப்படி அவர்கள்
சொல்லும்போது சலிப்பு காட்டாமல்,
பொறுமையுடனும் ஆர்வத்துடனும்
அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.
அதற்காக, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததுமே,
'இன்னைக்கு மேத்ஸ் டெஸ்டை ஒழுங்கா
செஞ்சியா?', 'நாளைக்கு சயின்ஸ் ஒன்
மார்க் டெஸ்ட் இருக்காம்... ஸ்கூல்ல
இருந்து மெஸேஜ் வந்தது' என்று
விரட்டக்கூடாது.
* குழந்தைகள் தாங்கள் புதிதாக ஒரு
விஷயத்தை அறிந்துகொள்ளும்போது, அதை
ஆச்சர்யத்துடம் நம்மிடம்
பகிர்ந்துகொள்வார்கள். அப்போது அதே
ஆர்வத்துடன் பெற்றோரும் அதைக்
கேட்டுக்கொள்ள வேண்டாம். அதைப்
பற்றிய மேலதிக தகவல்களை அவர்களுக்குச்
சொல்ல வேண்டும். 'அம்மா
மண்பானையில தண்ணீர் வெச்சுக்
குடிச்சா, ஃபிரிட்ஜுல வெச்ச மாதிரியே
ஜில்லுனு இருக்குமாம்' என்று அன்றைய தினம்
அவர்கள் அறிந்துகொண்ட ஒரு புது
விஷயத்தை வந்து பகிரும்போது, அது உங்களுக்கு
சாதாரணமான, அசுவாரஸ்யமான
ஒரு தகவலாக இருக்கலாம். ஆனால் அதை
அவர்களிடம் வெளிப்படுத்தக் கூடாது.
மாறாக, 'ஆமா... சூப்பர் கூலா இருக்கும்.
ஃப்ரிட்ஜ்ல வெச்சு குடிக்கிற தண்ணி
ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல. ஆனா,
மண்பானைத் தண்ணியைத் தாராளமா
குடிக்கலாம்' என்று அவர்களை இன்னும்
ஆச்சர்யப்படுத்தும் விதமாக, அறிவூட்டும்
விதமாகப் பேச வேண்டும்.
* ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் குழந்தையிடம்,
வீட்டில் நடக்கும் கவலை தரக்கூடிய தகவல்களைத்
தெரிவிக்க வேண்டாம். அதே சமயம்,
'நாங்க எல்லோரும் இன்னைக்கு சினிமாவுக்குப்
போனோம்' என்று அவர்கள் ஏங்கும் விஷயத்தையும்
பகிர வேண்டாம். 'நீ லீவுக்கு வந்ததும்
எங்கெங்க போகலாம்னு
சொல்லு... எல்லோரும் போவோம்' என்று,
அவர்கள் ஹாஸ்டலில் இருந்தாலும், வீட்டில்
அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்
முக்கியத்துவத்தைப் புரியவைக்க வேண்டும்.
* குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குழந்தைகள்
முன் விவாதிப்பது, சண்டை போடுவதை அறவே
தவிர்க்க வேண்டும். நம் அப்பாவும்
அம்மாவும் பிரியமானவர்கள், நம் குடும்பம்
அன்பான குடும்பம் என்ற நம்பிக்கையை,
பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு
ஏற்படுத்த வேண்டும்.
மொத்தத்தில், 'என் அப்பா,
அம்மாதான் சூப்பர் பேரன்ட்ஸ். என் வீடு
ரொம்ப சந்தோஷமான வீடு' என்று
மகிழும், கொண்டாடும் பால்யத்தை
குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது,
பெற்றோரின் கடமை!"
- மல்லிகார்ஜுனா 
நன்றி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக