சனி, 17 டிசம்பர், 2016

திருவாரூர் தியாகராஜர் கோயில்...

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்...

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. “சப்தம்‘ என்றால் ஏழு.
திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கர்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை “தியாகராஜர்’ என்பர்.
வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி - முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி - அன்னதானம்
மாலை 4 மணி - நடை திறப்பு
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்

******************************

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர்
கோயிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளில்
புதையல் இருப்பதாகவும், அதை திறந்து பார்க்க
வேண்டும் என்றும் பல ஆண்டாகக்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள்
மற்றும் பக்தர்கள் கூறி வருகின்றனர்.
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில்
வரலாற்று சிறப்பு மிக்கது. சைவ சமயத்தின்
தலைமை இடமாகவும், பாடல் பெற்ற
தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயிலின்
தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆழி தேர்
என்று அழைக்கப்படும் இந்த தேர் ஆசியாவிலேயே
இரண்டாவது பெரிய தேர் என்ற சிறப்பும்
இதற்கு உண்டு.
அந்தத் தேர் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில்
வெள்ளோட்டம் விடப்பட்டது. அதற்கு மக்கள்
வெள்ளமென திரண்டு தேரை வடம்
பிடித்து இழுத்தனர். வருகிற 8-ம் தேதி கோயிலுக்கு
கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதற்காக யாகசால பூஜைகள்
தொடங்கப்பட்டு நடைபெற்று
வருகின்றன. கும்பாபிஷேகம் நடப்பதற்குள்
கோயிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளைத்
திறந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும்,
அதில் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும்
அரிய வகை பொக்கிஷங்கள்
இருக்கின்றன என்றும் பக்தர்கள் கூறி
வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கல்வெட்டு
ஆராய்ச்சியாளர் குடவாயில்
பாலசுப்ரமணியனிடம் பேசினோம்.
Advertisement
''தியாகராஜர் கோயிலில் தியாகராஜர்
சுவாமிகளின் கருவறைக்குள்ளும், இரண்டாம்
பிரகாரத்தில் ஆனந்தேஸ்வரர்
கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறை கல்
கொண்டு மூடப்பட்டு இருக்கிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்நியர்கள்
தமிழ்நாட்டின் மீது படையெடுத்து
கோயில்களையெல்லாம் சூறையாடினர்.
சோழநாட்டு கோவில்களில் சூறையாடியதை முகமதிய
எழுத்தாளர்கள் தங்கள் குறிப்பேடுகளில்
குறிப்பிட்டுள்ளனர். டெல்லியிலிருந்து வந்து
மதுரையை மையமாகக் கொண்டு
சுல்தான்கள் ஆட்சி செய்தபோதும்,
தமிழகக் கோயில்கள்
கொள்ளையடிக்கப்பட்டன.
அப்படி கொள்ளையடிக்கப்பட்ட
கோயில்களில் தியாகராஜர் கோயிலும், சிதம்பரம்
நடராஜர் கோயிலும் ஒன்று. இதனால் 80
ஆண்டு காலம் கோயில்கள் மூடப்பட்டு பூஜை
எதுவும் நடக்காமல் இருந்தது என்பதைக்
கல்வெட்டுகள் மூலமாக உறுதி
செய்ய முடிகிறது. அந்நிய
படையெடுப்புக்கு பயந்து, தியாகராஜர்
கோயிலில் இரண்டு அறைகளிலும் விலை உயர்ந்த
நகைகள், சாமி உருவ சிலைகள் மற்றும் காண
கிடைக்காத பொக்கிஷங்களை வைத்து
கர்ப்பகிரக வாயிலை மூடியிருக்க வேண்டும்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலின்
பொருட்கள் தியாகராஜர் கோயிலில்
வைத்து பாதுகாக்கப்பட்டது என
கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தப்
பொருட்களும் இந்த அறைகளில்
இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
Advertisement
மேலும், பல ஆண்டுகளாக ரகசிய அறைகளைத்
திறக்க வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள்.
ஆனால், அறநிலையத்துறை அதற்கு
செவிசாய்க்க மறுக்கிறது. இப்போது உள்ள
தொழில் நுட்ப வளர்ச்சியில் கோயிலை
சேதப்படுத்தாமல், அபிஷேக நீர்
வெளியேறும் கோமுகம் வழியாக
கேமராவுடன் கூடிய நவீன கருவியை
செலுத்தி, ரகசிய அறைக்குள் என்ன
இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்.
ஆனால், ஆட்சியாளர்களும், அறநிலையத்துறை
அதிகாரிகளும் அதைக் கண்டு
கொள்ள மறுக்கிறார்கள். அப்படி
செய்ய வேண்டியது அரசின் கடமை.
ஆனால், அவர்கள் செய்ய மறுப்பது
ஏன் என்பதுதான் புரியவில்லை'' என்றார்.
பக்தர்கள் சிலரிடம் பேசினோம்.
''திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயிலில்
இதேபோல் ரகசிய அறைகளைத் திறக்க வேண்டும் என
கோரிக்கை வைத்தனர். அதன்படி அவை திறக்கப்பட,
ஏராளமான விலை உயர்ந்த
பொருட்கள் கிடைத்தன . இன்றளவும்
அவர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டு
வருகிறார்கள். அதேபோல் தியாகராஜர்
கோயிலையும் ஆய்வு செய்ய உடனே அரசு
உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால்
நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற
அறிய வகை பொக்கிஷங்களைக்
காண்பதுடன் நம் பெருமையை உலகம்
அறிய செய்யலாம்'' என்றனர்.

நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக