வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் சிறந்த 10 திரைப்படங்கள்..

ஜெயலலிதாவின் சிறந்த 10 திரைப்படங்கள்..

ஜெயலலிதா நடிப்பில் வந்த படங்கள்
அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தன. ஆனாலும்
அவற்றில் சில அவருடைய நடிப்பு திறமையை
பறைசாற்றுவதாக அமைந்தன. அந்த படங்கள்
விவரம் வருமாறு:-
1. வெண்ணிற ஆடை
1963-ல் வெளியாகி பெரும்
வெற்றியை பெற்ற படம்
வெண்ணிற ஆடை. இந்த படத்தில்தான்
ஜெயலலிதா அறிமுகமானார்.
ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி ஆகியோரும்
நடித்து இருந்தனர். ஸ்ரீதர் இயக்கினார்.
இதில் இடம்பெற்ற சித்திரமே, அம்மம்மா,
என்ன என்ன வார்த்தைகளோ பாடல்கள்
பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
2. ஆயிரத்தில் ஒருவன்
எம்.ஜி.ஆர் ஜோடியாக ஜெயலலிதா
நடித்திருந்த இந்த படம் ஹாலிவுட் சாயலில்
அரண்மனை, கடற்கொள்ளையர்கள்,
தீவில் விற்கப்படும் அடிமைகள் என்று
பிரமாண்டமாக படமாக்கப்பட்டு இருந்தது.
இதில் ஜெயலலிதா இளவரசி வேடத்தில்
நடித்து இருந்தார். பருவம் எனது பாடல்,
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல்
பாடுகிறேன். உன்னை நான் சந்தித்தேன் நீ
ஆயிரத்தில் ஒருவன், ஆகிய பாடல்களில்
நடனம் ஆடி நடித்தது ரசிகர்களை
வெகுவாக கவர்ந்தது.
3. அடிமைப்பெண்
ஜெயலலிதாவின் சினிமா
வாழ்க்கையில் அடிமைப்பெண்
முக்கியமான படம். 1969-ல்
வெளியானது. இதில் எம்.ஜி.ஆர்
ஜோடியாக நடித்து இருந்தார். சிறுவயதிலேயே
சிறையில் அடைபட்டு கிடந்த இளவரசனுக்கு வாள்
சண்டை பயிற்சிகள் அளித்து பெரிய போர்
வீரனாக மாற்றி எதிரிகளுடன் மோதவைக்கும்
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து
இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற
அம்மா என்றால் அன்பு பாடலை
ஜெயலலிதாவே பாடி நடித்தது விசேஷம்.
ஆயிரம் நிலவே வா, காலத்தை
வென்றவன் நீ, தாய் இல்லாமல்
நான் இல்லை ஆகிய இனிமையான
பாடல்களும் இடம்பெற்று இருந்தன.
4. பட்டிக்காடா பட்டணமா
சிவாஜி கணேசன் ஜோடியாக இதில் நடித்து
இருந்தார். நாகரிக பெண்ணாகவும்
குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலும்
வந்து சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தினார். கிளைமாக்சில்
கணவர் இன்னொரு பெண்ணை
திருமணம் செய்ய இருப்பதாக தவறாக
கருதி தவிக்கும் காட்சிகளில் கவர்ந்தார்.
5. கந்தன் கருணை
முருக கடவுளின் பிறப்பு, சூரபதுமன் வதம்,
வள்ளி, தெய்வானையுடன் திருமணம்
என்று கந்த புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய
படமாக 1967-ல் வெளிவந்தது. இதில்
முருகன் மனைவி வள்ளி கதாபாத்திரத்தில்
நடித்து இருந்தார். இந்த படமும் அவருக்கு
முக்கிய படமாக அமைந்தது.
6. யார் நீ
1966-ல் வெளிவந்த திகில் படம். இந்தியில்
வெற்றிகரமாக ஓடிய வே ஹவுன் தி
என்ற படத்தை தமிழில் தயாரித்தனர்.
ஜெயலலிதாவும் ஜெய்சங்கரும்
இணைந்து நடித்து இருந்தனர். இந்த படம் அதிக
நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது.
7. சூரியகாந்தி
அதிகம் சம்பாதிக்கும் மனைவியால்
கணவனுக்கு ஏற்படும் தாழ்வு
மனப்பான்மையே இந்த படத்தின் கரு.
ஜெயலலிதாவும் முத்துராமனும்
ஜோடியாக நடித்து இருந்தனர். கணவனின்
அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு
அவனது குடும்பத்துக்காக உழைக்கும்
அழுத்தமான கதாபாத்திரத்தில்
ஜெயலலிதா நடித்து இருந்தார். 1973-ல்
இந்த படம் வெளிவந்தது. இதில்
இடம்பெற்ற நான் என்றால் அது
அவளும் நானும் அவள் என்றால் அது
நானும் அவளும் என்ற பாடலில் தனது
சொந்த குரலில் பாடி இருந்தார்.
இந்த படத்தில் நடித்ததற்காக
ஜெயலலிதாவுக்கு சிறந்த நடிகைக்கான
தமிழக அரசு விருது கிடைத்தது.
8. திருமாங்கல்யம்
ஜெயலலிதாவுக்கு இது 100-வது படம்.
தடம்மாறிச்செல்லும் ஒரு குடும்பத்தை
நல்வழிப்படுத்தும் வலுவான
கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 1974-
ல் இந்த படம் வெளிவந்தது. இதில்
ஜெயலலிதா நடிப்புக்கு பலதரப்பில்
இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. அரசு
விருதும் கிடைத்தது.
9. வந்தாளே மகராசி
இந்த படத்தில் ஜெயலலிதா இரட்டை
வேடத்தில் நடித்து இருந்தார். மற்றவர்களை
துன்புறுத்தி வில்லத்தனம் செய்யும்
பெண்ணுக்கு பாடம் கற்பிப்பதுபோல் ஒரு
கதாபாத்திரம் அமைந்து இருந்தது. இந்த
படமும் ஜெயலலிதாவுக்கு முக்கிய
படமாக அமைந்தது.
10. சவாலே சமாளி
சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும்
ஜோடியாக நடித்து இருந்தனர்.
விருப்பமில்லாதவரை சந்தர்ப்ப சூழ்நிலையால்
மணந்து பிறகு அவரது நல்ல குணத்தில்
ஈர்க்கப்பட்டு மனம் மாறும் அழுத்தமான
கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த
படத்தில் ஜெயலலிதா பாடி நடித்த
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது
சொந்த வீடு பாடல் பட்டி
தொட்டியெங்கும் ஒலித்தது. இது
சிவாஜிகணேசனுக்கு 150-வது படமாக
வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக