சனி, 22 அக்டோபர், 2016

எதுவும் நிரந்தரமில்லை...

இறைவனைத் தவிர
எதுவும் நிரந்தரமில்லை.

அளவில்லாத செல்வத்தோடு வசதியாக வாழ வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அவன் இந்த உலகத்தில் நிறைந்துள்ள பொருட்களே நிலையானது, தன் தாகத்தைத் தீர்க்கும் வல்லமை உடையது என உறுதியாக நம்புகிறான்.

அதனால் எப்பாடு பட்டாவது அதனை வாங்கிக் குவிக்க முயல்கிறான். அதற்காக எத்தகைய பாவச் செயல்களையும் செய்யத் தயாராக இருக்கிறான்.

அராஜக வழியில் முயன்றாவது அத்தனையும் பெற அல்லும் பகலும் கடுமையாகப் போராடுகிறான்.

ஏனெனில் அதற்கு அப்பால் பார்க்கும் ஆற்றல் அவனுக்கில்லை.

அவனது முயற்சி முழுக்க முழுக்க பெருஞ்செல்வத்தை ஈட்டி இவ்வுலகப் பொருட்களைத் திரட்டுவதிலேயே குறியாக இருக்கிறது.

சுவையான உணவு , நாகரிகமான உடை, விரிந்து பரந்த வீடு, சொகுசான வாழ்க்கை,  சுகாதார வசதிகள் இப்படி வசதிகளைத் தேடித் தேடி அலைந்து பணமும் பொருளும் குவிப்பதிலேயே குறியாக இருக்கிறான்.

தன்னைக் காக்கும் அரிய  செல்வம் இவைகள்தான் என உறுதியாக நம்புகிறான்.

இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போல, பெரும் தாகத்தோடு தூரத்தில் நின்று அவன் பார்க்கும் பொழுது, வெட்டவெளியிலே தெரியும் கானல் நீர், உண்மை நீர் போன்ற  தோற்றமளிக்கிறது அவனுக்கு.

அள்ளிப் பருக ஆவலோடு அதனை நோக்கி ஓடோடிச் செல்கிறான். அந்தோ பரிதாபம் அப்போதுதான் உண்மைநிலை என்னவென்று அவனுக்குப் புரிய வருகிறது. உண்மையான தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறான். கானல் நீரைக் கண்டு கண்
கலங்குகிறான்.   

இவ்வாறு அவன் அநியாய வழிகளில் அக்கிரமமாக சேர்த்து வைத்த பொருட்கள் அனைத்தும் நிறைந்து இருக்க,  அவற்றைப் பாதி அனுபவிக்கும் போதோ அல்லது அனுபவிக்க முடியாமலோ கால ஓட்டத்தில் அவன் இறந்து போக நேரிடுகிறது.

அந்த மனிதன். இறைவனால் மறுமையில்   எழுப்பப்படுகிறான்.

அப்போதுதான் அவனுக்கு உண்மை உறைக்கிறது. தான் இத்தனை காலமும் வாழ்ந்து ஏமாந்தது ஒரு மாயை வாழ்வு என்று. எது உண்மையான வாழ்க்கை என்று உணரத் தொடங்குகிறான்.

உலகத்தின் வெளிப்பயண காட்சி வெறும் பொய்த் தோற்றம், மாயத்தின் வடிவம்  என்பதை உணர்ந்து, அந்த வாழ்க்கை வெறும் கானல் நீர் என்பது அப்போது தான் அவனுக்குப் புரிய வருகிறது. 

வாழ்வில் அன்பவிக்க வேண்டிய சந்தோசங்களை, அன்பு கருணை மனிதம் இவைகளின் மூலம்தான் அடைய முடியும் என்ற உண்மை அப்போதுதான் தெரிய வருகிறது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்புக்களை சந்தித்திருக்கிறேன் என அவனால் அறிய முடிகிறது.

சேமித்த செல்வம், பெற்றிருந்த அதிகாரம், அனைத்தும் அழிந்து போன பின்னர்தான், உலக வாழ்வில் தன்னிடம் இருந்த எதுவும் தன்னுடையது அல்ல என்ற உண்மையை என்பதை உணர்கிறான்.

உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை. அங்கிருந்த எதுவும் இங்கில்லை. அவை இல்லாவிட்டாலாவது பரவாயில்லை. தன் வாழ்நாளில்  யாரை நிராகரித்தேனோ அந்த இறைவன் நம் கண் முன் நிற்கின்றானே என அதிர்ச்சியோடு திகைத்து நிற்கிறான்.

முற்பிறவியில் செய்த வினை தான் நமது அனைத்து கஷ்டங்களுக்கும் அலைக்கழிப்புக்கும் காரணம். இப்படி இருக்க இப்பிறப்பில் நாம் பாவ காரியங்களில் ஈடுபட வேண்டுமா?

மனிதன் வாழும் காலம் மிகவும் குறைவானது. இந்த சொற்பமான வாழ்நாளில், நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.

நாம் இறந்த பின் நம்முடன் கூட வருவது காசு, பொருள் தங்கம் நிலம் போன்ற இன்ன பிற சொத்துக்கள்  அல்ல. நாம் செய்த நல்லது கெட்டதுதான். பாவ புண்ணியங்கள்தாம்.

இறைவன் அன்றும் இன்றும் என்றும் உள்ளவர். இறைவன் மீது முழு நம்பிக்கையோடு அவனைக் காண நேர்மை எண்ணங்களோடு முயற்சி செய்வோம். நிச்சயம் நாம் அவனைக் காணலாம்.

எதைக் குறித்தும் கலக்கம் வேண்டாம். இறைவனால் அனைத்தும் கைகூடும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மனப்பாங்கை வளர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். நமக்கு கிடைக்க வேண்டியவைகள் சில சமயங்களில் கிடைக்காமல் இருப்பது கூட, நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக மாறக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக