செவ்வாய், 30 அக்டோபர், 2018

குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும்.


*குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது. உங்கள் குழந்தையின் தூக்கம் மற்றும் குழந்தையை தூங்க வைக்கும் முறைகள் பற்றி, பெற்றோராக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.*
குழந்தைகள் இந்த பருவத்தில் தூங்காமல் வேறு எப்போது தூங்கி ஓய்வெடுக்க முடியும்? குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும்.

குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த பகுதியில் குழந்தைகளின் தூக்கம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றியும், பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தையின் தூக்கத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

*சரியான தூக்கம்*

பிறந்த குழந்தை ஆனது ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியமாகிறது. இந்த குழந்தைகளுக்கு இரவு பகல் வித்தியாசம் என்பது கிடையவே கிடையாது. எனவே, பிறந்த ஒரு மாதம் வரை பசிக்கும்போதும் மடி நனைக்கும் போதும் மட்டுமே விழிக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம் சிறப்பாக இருக்கும்.

*தாயின் அரவணைப்பு*

பிறந்த குழந்தையை, தாய் அருகில் இருக்கும்போது அவரின் அரவணைப்பிலும் மற்ற நேரங்களில் பருத்தித் துணியில் கட்டிய தொட்டிலிலும் உறங்கவைக்கலாம். குழந்தை தன் தாயின் கருவறையில் உணர்ந்த அசைவைத் தொட்டிலிலும் உணர்வதாலேயே அதில் நீண்ட நேரம் உறக்கம் கொள்கிறது. மேலும், அணைத்தபடியும் போதிய காற்று கிடைக்கும்படியாகவும் இருக்கும் அதன் அமைப்பும் பாதித் தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலும் அதைத் தொடர்ந்து கண்ணயரச் செய்யும்.

*பாதுகாப்பான சூழல்*

குழந்தையின் தூக்கத்துக்கு உகந்த சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குழந்தை உறங்கும் அறையில் சத்தம், அதிக வெளிச்சம் இருக்கக் கூடாது; கொசுத்தொல்லை, எறும்புக் கடி உள்ளிட்ட தொந்தரவுகள் அற்ற சூழலும் தாயின் அரவணைப்பும் குழந்தைக்கு நீண்ட நேர உறக்கம் கொடுக்கும்.

*தாய்ப்பால்*

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் சில பெண்கள்கூட, நடு இரவில் விழிக்கும் குழந்தைக்குத் தங்களின் இரவுத் தூக்கம் கெடாமல் இருக்க வீட்டில் உள்ளவர்களைக் கொண்டு புட்டிப்பால் கொடுக்கவைத்துப் பழக்கப்படுத்துவார்கள். ஆனால், இது குழந்தையின் தூக்கத்துக்கு எதிரானது. பாட்டில் பால் குடிக்கும்போது குழந்தை காற்றையும் சேர்த்து உள்ளிழுத்துக் கொள்ளும்.

*வயிற்று உபாதைகள்*

அது குழந்தையின் வயிற்றில் அசௌகர்யத்தை உண்டு செய்வதால் இரவில் சரியான தூக்கம் கிடைக்காமல் அழும். குழந்தையின் அழுகையை நிறுத்த இவர்கள் மீண்டும் பாட்டில் பாலையே கொடுக்க, அழுகை அதிகமாகும். எனவே, தாய்ப்பால் கொடுக்க முடிந்தவர்கள் முடிந்தவரை இரவில் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். பாட்டில் பால் கொடுப்பவர்கள் குழந்தையை ஒருக்களித்துப் படுக்கவைப்பதன் மூலம் அதன் வயிற்றில் உள்ள காற்று வெளியேற வாய்ப்பு உண்டாக்கலாம்.

*பகலில் அதிக தூக்கம்?*

தாய்மார்கள் பகலில் தங்கள் வேலையை முடிப்பதற்காகக் குழந்தையை அதிக நேரம் தூங்க வைப்பார்கள். இதனால் இரவில் அது விழித்துக்கொள்ளும். இரவில்தான் அதற்கு அதிக நேரம் உறக்கம் தேவை என்பதால், பகலில் அதைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைப்பதைத் தவிர்த்து, விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.

*சுத்தம்*

குழந்தையின் ஆடைகள், தொட்டில், மெத்தை விரிப்புகள் என அதைச் சுற்றியுள்ள சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தை சிறுநீர் கழித்த உடன் ஆடை மாற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டுகளில் குழந்தையை உறங்கவைக்கும்போது அது வெளியிடும் வெப்பம் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் தவிர்க்கவும்.

*அதிகமான உணவு*

ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு இரவு வேளையில் பால் மட்டுமே கொடுத்துத் தூங்கவைத்தால், பசியால் அதன் தூக்கம் கெடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் குழந்தைக்கு எளிதில் செரிக்கும் வகையிலான திட உணவு கொடுத்து, அது செரிமானம் ஆகும் நேரம் வரை அதை விளையாட விட வேண்டும். பின்னர் தூங்கவைத்து, விழிக்கும் இடைவெளிகளில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

*இதமான குளியல்*

மாலையில் ஒரு முறை குழந்தையைக் குளிக்கவைப்பது, தளர்வான ஆடை அணிவிப்பது, ‘இனி நீ தூங்கப் போகிறாய்' என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்த அதை அணைத்தபடி இருப்பது, தொட்டிலில் கிடத்திப் பாடுவது... இவையெல்லாம் குழந்தையைத் தூக்கத்துக்குத் தயார்படுத்தும்.

*எழுப்ப கூடாது*

தூக்கத்தில் குழந்தை அசைவதும் சிணுங்குவதும் இயல்பு; உடனே தூக்கக் கூடாது. தட்டிக்கொடுக்க, தூளியை ஆட்ட என இருந்தால், மீண்டும் அது தூக்கத்தைத் தொடர்ந்துவிடும். பிறந்த ஒரு மாதத்திலிருந்தே இரவு விரைவில் தூங்கவைத்து, காலையில் விரைந்து எழக் குழந்தையைப் பழக்கப்படுத்துவது நன்று. பிறந்த குழந்தை மட்டுமல்ல, வளர்ந்த குழந்தைகளுக்கும் இரவில் ஆழ்ந்த, தடையற்ற உறக்கம் அவசியம்.

*டிவி*

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அதே அறையில் டிவி பார்ப்பது, சத்தமான சூழலை உருவாக்குவது போன்றவை வேண்டாம். இது குழந்தையை சரியாக தூங்கவிடாமல் செய்யும்..


*குறைவான ஒளி*

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது விளக்கை அணைத்து விட்டு பால் கொடுக்கவும். அல்லது குறைவான ஒளியை கொடுக்க கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால் குழந்தை பால் குடித்துக் கொண்டே நிம்மதியாக தூங்கிவிடும்
👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக