'இது நாஞ்சில் நாட்டுக் கல்யாணம்!' நீங்கள் அறியாத பல தகவல்கள்..
காணும் இடங்களில் எல்லாம் மரங்கள், வற்றாத குளங்கள், ஊருக்கு ஒரு நூலகம், பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் என நாஞ்சில் நாட்டின் பெருமைகள் ஏராளம்.
நாஞ்சில் அர்த்தம்
'நாஞ்சில்’ என்ற சொல்லுக்குக் 'கலப்பை’ என்று அர்த்தம். இப்போது இங்கு இருப்பவர்கள் ஒரு காலத்தில் முழுக்கவே வேளாண்மைத் தொழில் செய்தவர்கள்தான். குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைவதற்கு முன் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் நாஞ்சில் நாடு இருந்துவந்தது. அப்போது கேரளாவின் நெற்களஞ்சியமே நாஞ்சில் நாடுதான். நாஞ்சில் நாட்டின் தனித்தன்மைகள் ஆயிரம் என்றாலும் தவிர்க்க முடியாத அடையாளம் நாஞ்சில் நாட்டுத் திருமணங்கள்...
வெற்றிலைக் கைமாறுதல்
அதாவது, நாஞ்சில் நாட்டில் இதை 'உரப்பித்தல்’னு சொல்வாங்க. இவர்தான் மாப்பிள்ளை, இதுதான் பொண்ணுனு பரஸ்பரம் பேசி ஒரு தட்டில் வெற்றிலை வைத்து மாத்திக்கிறதுதான் நோக்கம். ஆனால், இதை ஒரு மினி நிச்சயத் தாம்பூல வைபவமாகவே நடத்துவாங்க. அதைத் தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சி நிச்சயதார்த்தம்.
நிச்சயதார்த்தம்
இதோட விசேஷமே 'சாரத்து’ வாசிக்கிறதுதான். 'சாரத்து’னா, திருமணம் பற்றிய முக்கியக் குறிப்புகள் அடங்கியத் தகவல் அறிக்கைனு அர்த்தம். திருமணம் நிச்சயம் செய்யும்போது கூட்டத்தினர் மத்தியில் பெண் வீட்டைச் சேர்ந்த பெரியவர் ஒருத்தர் இதை வாசிப்பார். இதில் திருமண நாள், முகூர்த்த நேரம், மறு வீடு, மாப்பிள்ளை அழைப்பு நேரம், நாலாம் நீர்ச்சடங்கு, ஏழாம் நீர்ச்சடங்குனு திருமணத்தோடு தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் இருக்கும். கூடவே நிச்சயதார்த்தம் முடிந்ததற்கு அடையாளமாக ஒரு ஆலங்கம்பை வெட்டிக்கொண்டுவந்து சடங்குகளைச் செய்வாங்க. திருமணம் முடிஞ்சதும் மணமக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திலோ, அல்லது பொது இடத்திலோ இந்த ஆலங்கம்பை நட்டு வைத்துத் தண்ணீர்விட்டுப் பராமரிப்பாங்க. நாஞ்சில் நாட்டைச் சுற்றிப் பார்த்தா அதிகமாக ஆலமரங்கள் இருக்கும். அதுக்குக் காரணமே இந்தச் சடங்குதான்.
தாலி உருக்குதல்
நிச்சயதார்த்தம் முடிந்த கையோட இன்னொரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து 'தாலிக்குப் பொண்ணு உருக்குதல்’னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதாவது, மணப்பெண்ணுக்கு மாங்கல்யம் செய்றதுக்காக நகை ஆசாரியை அழைத்துவந்து நாஞ்சில் நாட்டுத் தாலி செய்வாங்க. தாலி செய்றதுக்குத் தேவைப்படுகிற தங்கத்தை மணமகனின் சகோதரிகள் கொடுக்கணும். சமீபகாலமா தங்கத்துக்குப் பதிலா பணமாகவே கொடுக்கிற கலாசாரம் வந்திடுச்சு. நடக்கிற எல்லா விசேஷத்திலுமே தடபுடல் விருந்தும் உண்டு'என்றார்.
'உருமா’ கட்டுவது
நாஞ்சில் நாட்டுக் கல்யாணத்தின் முக்கிய விசேஷங்களில் ஒன்று மணமகனின் தலையில் 'உருமா’ கட்டுவது. அது என்ன 'உருமா’? நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பத்மநாபன், '' 'உருமா’ என்பது ஒரு மா என்பதன் திரிபு. ஒரு மான்னா ஒன்றின் கீழ் இருபதுனு அர்த்தம். அதாவது, நிலத்தோட மதிப்பில் இருபதில் ஒரு பங்குன்னு சொல்ற மாதிரி நகையோட மதிப்பில் ஒரு பவுனில், இருபதில் ஒரு பங்குன்னு அர்த்தம். முன்னாடியெல்லாம் இந்தத் தங்கத்தைத் தலையில் கட்டுவாங்களாம். காலப்போக்கில் பட்டுத் துணியாகி, இப்போ துண்டுத் துணியாகிவிட்டது.
ஊர் அழைப்பு
தாலி கட்டி முடிந்ததும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மணமகனை ஆசீர்வாதம் செய்துவிட்டு மணமகனின் தலையில் ஒரு துணியைக் கட்டுவாங்க. அதாவது பல வண்ண நிறங்களில் அந்தத் துணி இருக்கும். மணமகன் சபையில் இருக்கத் தகுதியானவன்தான் என்றும் சுயமாக முடிவு எடுக்கும் வயதை அடைந்து விட்டான் என்றும் காட்டுறதுக்குத்தான் இந்த உருமா. இதே போல், சொந்த பந்தங்களுக்கும் மணமக்கள் மேல் உள்ள உரிமையை நிலை நாட்ட 'உருமா’தான் ஆதாரம். மற்ற பகுதிகளில் எல்லாம் அடுத்த வீடாகவே இருந்தாலும் 'திருமண அழைப்பிதழ்’ கொடுத்தாதான் கல்யாணத்துக்கு வருவாங்க. ஆனால், நாஞ்சில் நாட்டில் ஒரே ஊரைச் சேர்ந்தவங்களுக்கு 'அழைப்பிதழ்’ கொடுக்க மாட்டாங்க. 'ஊர் அழைப்பு’னு இதுக்கும் தனியா ஒரு நிகழ்ச்சி இருக்கு. திருமணம் நடத்தும் வீட்டார், குடும்ப சகிதமா ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் போய் 'கல்யாணத்துக்கு வாங்க’னு கூப்பிடுவாங்க. இப்படி அழைக்கும்போது பல வருடப் பகை மறந்து சிநேகமாகிடுவாங்க.
அதே மாதிரி கல்யாணத்துக்கு முந்தைய நாள் ஊரில் உள்ள ஆண்கள் எல்லோருமே காய்கறி வெட்ட மண்டபத்துக்குப் போய்டுவாங்க. கல்யாணத்தன்று காலையில் டிபன், மதியம் 21 வகை பதார்த்தங்களோடு சாப்பாடு, மாலையில் நலுங்கு உருட்டு, தலையில் பப்படம் உடைக்கிறது வரைக்கும் பல விசேஷங்கள் நடக்கும்.
சட்ரசம் பரிமாறுதல்
முக்கியமா மதியம் மணமக்கள் சாப்பிடும்போது மணப்பெண்ணே, மணமகனுக்குப் பரிமாறுவாங்க. இதுக்கு 'சட்ரசம் பரிமாறுதல்’னு பேரு. திருமணம் முடிந்த அன்னைக்கு இரவு 'தீயல் சோறு’ போடுவாங்க. இது செரிமானத்துக்குக் கை கொடுக்கும். இப்படி இன்னும் பல சடங்குகள் இருக்கு. மொத்தத்தில் நாஞ்சில் நாட்டுக் கல்யாணங்கள் பாசத்துக்கும் உறவுக்கும் மரியாதை கொடுப்பவை' என்றார்.
நாலாம் நீர்ச் சடங்கு
அத்துடன் முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து அணிவகுக்கின்றன பல நிகழ்வுகள். இதைப்பற்றிப் பேசிய எழுத்தாளரும் முனைவருமான அ.கா. பெருமாள்,''திருமணம் முடிந்த அன்று இரவே 'நாலாம் நீர்ச் சடங்கு’னு ஒரு விழா நடக்கும். அதாவது குளம், ஆறு, கடல், கிணறுனு நான்கு நீர்நிலைகளில் மணமக்கள் நீராடுவாங்க. இப்படி நீராடுவதால் அவர்களுடைய தீட்டுகள் எல்லாம் கழிந்து புனிதமாகிட்டாங்கன்னு அர்த்தம்.
ஏழாம் நீர்ச் சடங்கு
அடுத்த நாள் காலையில் 'ஏழாம் நீர்ச் சடங்கு’ நடக்கும். மணப்பெண் புதுப்பானையில் பொங்கல் வைப்பாங்க. அதைத் தொடர்ந்து 'பிள்ளை மாற்று’னு ஒரு சடங்கு நடக்கும். அதில் மணப்பெண்ணின் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து, அதைப் பிள்ளையாக நினைச்சு மணமகளின் நெற்றியில் விபூதிப் பூசிவிட்டு, கையில் காசு கொடுப்பாங்க. இதில் ஒரு மிகப்பெரியக் கூட்டுக் குடும்ப தத்துவமே அடங்கி இருக்கு. 'இந்தத் திருமணத்தோடு எங்கள் பங்களிப்புகள் நின்றுவிடப் போவதில்லை. அதைத்தாண்டி உங்களுக்குக் குழந்தை பிறந்து, அவர்களை நீங்கள் வளர்த்து எடுக்கும்வரை எங்கள் பங்களிப்பு உண்டு' என்பதைக் காட்டத்தான் இந்த 'பிள்ளை மாற்று’ சடங்கு. ஒவ்வொரு சடங்கும் வாழ்க்கையோடு தொடர்புடைய செய்திகள்தான். இந்த மாதிரி சின்னச்சின்ன விளையாட்டுக்களின் மூலம் மணமக்களின் கூச்ச சுபாவமும் போய்விடும்'என்றார்.
ஆயிரம் காலத்துப் பயிர் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
Thanks.vikatan