சனி, 19 ஆகஸ்ட், 2017

ஆண்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்திர அவஸ்தை!...



ஆண்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்திர அவஸ்தை!...

♥இது #பெண்கள் பற்றியது, ஆனால் பிரத்தியேகமாக ஆண்களுக்காக. உங்கள் காலில் ஒரு காயம். அதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டே இருக்கிறது. காயத்தில் ஏற்பட்ட வலி வேறு பாடாகப்படுத்துகிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

♥நிச்சயம் உங்களால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. அதற்கான மனநிலையும் இருக்காது. இந்த வலி ஒருபுறம் என்றால், அந்த வேதனைக் காலத்தில் உங்களை எல்லோரும் தீண்டத்தகாத ஒருவராகப் பார்க்கிறார்கள். வீட்டில் ஓர் ஓரமாக (சில) ஒதுக்கிவைக்கப்படுகிறீர்கள். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நீங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா?

♥இந்த ரத்தம், வலி உங்கள் வாழ்க்கையின் சரிபாதி காலத்துக்கு, அதுவும் மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் நிகழ்ந்தால் வாழ்க்கை நரகம்தானே?! அந்த நரகத்தை மாதா மாதம் தாங்கிக்கொண்டேதான் நம் சகோதரியும், மனைவியும், அம்மாவும், உலகில் உள்ள எல்லாப் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்... மாதவிடாய் நாள்கள்’ என்கிற பெயரில்.

♥அந்த வேதனை தரும் நாள்களில், வலியைத் தாங்கிக்கொண்டு, தங்கள் வேலையையும் மற்றவர்கள் வேலையையும் செய்து கொடுப்பது பெண்கள் நிகழ்த்தும் சாதனை. எல்லாப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்வதாலேயே நம் கண்களுக்கு இது, சாதனையாகத் தெரிவதில்லை. சாதாரணமாக தெரிகிறது.

♥நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் அத்தனைப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்கிறார்கள்.
எப்போதும் மாதவிடாய் பற்றிச் சொல்லும்போது `இது பெண்களின் சமாசாரம்’ என்று மட்டும்தானே சொல்வார்கள். அதைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

♥நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இங்கே மாதவிடாய் சுழற்சி பற்றி அறிவியல் சொல்வதைத்தான் பார்க்கப் போகிறோம். இது அறிவியல் பாடத்தில் ஏற்கெனவே படித்தவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடும், ஆனால், ஒவ்வோர் ஆணும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சங்கதி.


#மாதவிடாய்_சுழற்சி
♥மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு காரணங்களால் 20 முதல் 40 நாள்களுக்குள் நடைபெறும்.

#கர்ப்பப்பையில்_ஏற்படும்_மாற்றங்கள்...
♥மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அவை மூன்று கட்டடங்களாக நடைபெறும்.

1>#வளரும்நிலை
இது மாதவிடாய் ரத்தப்போக்கு நின்ற நாள்முதல், சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation) நடைபெறும் நாள் வரை நீடிக்கும் (பொதுவாக 4-ம் நாள் முதல் 14-ம் நாள் வரை). அண்டகத்தில் இருந்து (Ovary) வெளிப்படும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன், கர்ப்பப்பையின் சுவரை வளர்ச்சியடையச் செய்யும். இந்த ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவருக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, 1 மி.மீ ஆக இருந்த சுவரை 4 மி.மீ அளவுக்குத் தடிமனாக்கும்.

2>#சுரக்கும்_நிலை
இது மாதவிடாய் சுழற்சியின் இறுதி 14 நாள்களுக்கு நீடிக்கும். சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர், கார்பஸ் லூட்டியம் (Corpus luteum) அண்டகத்தில் உருவாகி, புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இதுவும், சிறிய அளவில் வெளிப்படும் ஈஸ்ட்ரோஜெனும் சேர்ந்து கர்ப்பப்பை சுவரை மேலும் தடிமனாக மாற்றும். இறுதியாக கர்ப்பப்பை சுவரின் மொத்த அளவு 6 மி.மீ. என்ற அளவுக்கு இருக்கும்.

3>#மாதவிடாய்நிலை
கருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால் கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும், இதனால் கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும்.
இந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும்.
இந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும்.


♥இந்த நிகழ்வுகள் அனைத்தும் அறிவியலில் படித்ததுதான் என்றாலும், நமக்கு இன்னும் மாதவிடாயைப் பற்றித் தெரியாது. ஏன் தெரியாது என்று கேட்கும் ஆண்களுக்காக இந்தக் கேள்விகள்...

1. சானிட்டரி நாப்கின் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?

2. கடைசியாக எப்போது சானிட்டரி நாப்கின் வாங்க கடைக்குச் சென்றீர்கள்?

3. உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் இன்று எத்தனையாவது நாள்?

4. உங்கள் மனைவியைத் தவிர வேறு பெண்கள் யாரிடமாவது, மாதவிடாயைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலான ஆண்களிடம் “இல்லை”, “தெரியாது” என்ற பதில்களே உள்ளன. அப்படியானால், மாதவிடாயைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்தானே?.......

♥ இந்த மாதவிடாய் நாட்களில் மனைவியை புரிந்துகொள்ளுங்கள்.. இந்தநாட்களில் சரி அவளுக்கு சற்று ஓய்வையும் ஆதரவையும் அரவனைப்பையும் கொடுங்கள்... உங்களை மறுதாயாக அவள் உணருவாள்.
நன்றி உலகத்தமிழ் மங்கையர் மலர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக