புதன், 2 ஆகஸ்ட், 2017

கல்லீரல் காக்கும் இயற்கை உணவுகள்



நெல்லி முதல் மஞ்சள் வரை... கல்லீரல் காக்கும் இயற்கை உணவுகள்!

கல்லீரல் பிரச்னைகள் வருகிற வரைக்கும் அதன் நலன் பற்றிப் பெரும்பாலும் யாரும் சிந்திப்பதே இல்லை. நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலைச் சென்றடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசியாகச் சாப்பிட்ட சாப்பாடு, வேலை முடிந்த பிறகு குடித்த குளிர்பானம் அல்லது உட்கொண்ட மருந்தும்கூட கல்லீரலை அடைந்திருக்கும். எனவேதான், `கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

திராட்சை, விஷ்ணு கிரந்தி, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மதுசாரா  கல்லீரல் நோயிலிருந்தும் (Non-alcoholic fatty liver disease) இந்த உணவுகள் நம்மைக் காப்பாற்றுகின்றன. மணமுள்ள காய்கறிகளான வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்கக்கூடியவை. கல்லீரலைச் சுத்திகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆனாலும், ஏற்கெனவே கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

*இஞ்சி*

இஞ்சி, உணவின் சுவையைக் கூட்டுகிறது. அதோடு, கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மதுசாரா  கல்லீரல்  நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*நெல்லி*

நெல்லிக்காய் கல்லீரலுக்குப் புத்துயிரூட்டக்கூடியது. வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இது உதவும். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை (Hypolipidemic) உள்ளது. எனவே கல்லீரலின் சுமையை இது  குறைக்கும்.

ஒமேகா-3 நிறைந்த உணவுகள்
கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன. இது தொடர்பாக ஓர் ஆய்வே நடந்திருக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேரும் நோயான ஹைபர்லிபிடிமியாவால் (Hyperlipidemia) பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 மி.லி ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தினமும் இரண்டு வேளைகளாக, 24 வாரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தச் சிகிச்சையின் முடிவில் அல்ட்ரோஸோனோகிராபி (Ultrasonography) முறையில் அவர்களைப் பரிசோதித்ததில், கல்லீரல் பாதிப்புகள் நீங்கி அவர்கள் நலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மணமுள்ள உணவுகள்

*பூண்டு*

பூண்டு, வெங்காயம் போன்ற மணமுள்ள உணவுகளும் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. அவற்றில் உள்ள சல்ஃபர்தான் மணம் உருவாகக் காரணமாவது. சல்ஃபர், கல்லீரலில் என்ஸைம் உற்பத்திக்கு உதவுவது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்குத் தேவையானது இந்த என்ஸைம்கள்தான்.

காய்கறிகள்

பூண்டு மற்றும் வெங்காயத்தின் மணத்தை சிலரால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள், சல்ஃபர் அதிகமுள்ள வேறு சில காய்கறிகளைச் சாப்பிடலாம். முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவும்.

*ஸ்ட்ராபெர்ரி*

ஸ்ட்ராபெர்ரியில் பாலிபினால் (Polyphenols) மற்றும் அந்தோசயனின் (Anthocyanins) அதிகம் உள்ளன. இவை வீக்கம், கட்டி முதலியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவை. இவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கூட. ஸ்ட்ராபெர்ரி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

*பீட்ரூட்*

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) என்ற நிறமி, கல்லீரலைப் பாதுகாக்க உதவக்கூடியது. பீட்ரூட் ஜூஸ் அருந்துவது, கார்சினோஜென் (Carcinogen)   எனும் புற்றுநோய் காரணியை உடலில் சேராமல் தடுக்கும். தொடர்ந்து பீட்ரூட்டை நீண்ட நாட்களுக்குச் சாப்பிடுவது கல்லீரல் பாதிப்புகளிலிருந்து  நம்மைப் பாதுகாக்கும்.

திராட்சைப்பழம்

புளிப்பான திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது, குடல் நன்றாகச் செயல்பட உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.  திராட்சையில் உள்ள `நாரின்ஜெனின்’ (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க உதவும்.

விஷ்ணு கிரந்தி

விஷ்ணு கிரந்தியில் டீ போட்டுக் குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதை சாலட்களிலும் பயன்படுத்துவார்கள். `சிலிமரின்’ (Silymarin)  என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் நிறமி இதன் விதைகளில் உள்ளது. இவை கல்லீரல் நச்சை வெளியேற்ற உதவுவதோடு மட்டுமில்லாமல் கல்லீரலை சேதப்படுத்தும் டைல்னோல் (Tylenol) மருந்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் காப்பாற்றும். புதிய செல்கள் வளர உதவிசெய்து, கல்லீரலைப் புத்துயுயிரூட்டவும் விஷ்ணு கிரந்தி உதவும்.

*மஞ்சள்*

இயற்கையான வழிமுறை மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் மஞ்சள் இல்லாத பட்டியல் நிச்சயம் இருக்க முடியாது. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவ முறைகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் சிகிச்சைக்கு மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது தவிர கல்லீரலை சுத்திகரிக்கவும், பாதுகாக்கவும் சில ஜூஸ்களும் டீக்களும் உதவுகின்றன.

கலர்ஃபுல் ஜூஸ்

தேவையானவை:
கேரட் - 3, வெள்ளரிக்காய் (சிறியது) - 1, எலுமிச்சைப்பழம் - 1/2, ஆப்பிள்  - 1.
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஜூஸாக்கிக் கொள்ளவும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிதைவதற்குள் ஜூஸைக் குடித்துவிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இந்த ஜூஸைக் குடித்துவர கல்லீரல் சுத்தமாகும்.

*எலுமிச்சை - கிரீன் டீ*

அரை கப் கிரீன் டீயை ஆறவைத்துக்கொள்ளவும்.  அதனுடன் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றை சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் கலந்துகொள்ளவும். இதை தினமும் குடித்துவர, கல்லீரல் சுத்தமாகும். கிரீன் டீயில், ஈ.ஜி.சி.ஜி (EGCG) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது கல்லீரலைப் பாதுகாக்க உதவும்.

இஞ்சி - மஞ்சள் சாறு

அரை டீஸ்பூன் மஞ்சள், சிறிய துண்டு இஞ்சி, பாதி எலுமிச்சையின் சாறு இவற்றுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இது குடலைச் சுத்தம் செய்யும். பித்தக்கற்கள் வருவதைத் தடுக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.

கல்லீரல் நம் கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் இருப்பதால், நாம் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் ஒரு பகுதி ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலில்தான் போய்ச் சேரும். கல்லீரலில் சேரும் கொழுப்பை, நச்சுப்பொருட்களை வெளியேற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அவை பெரிய நோய்களாக மாறி நம்மைப் பாதிப்பதற்கு முன்னர் இயற்கை வழிமுறைகள் மூலம் கல்லீரலைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக