விந்தைகள் செய்யும் விதைகள்!
விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை.
பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம்.
இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம் உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுபவை...
விதைகளின் மருத்துவப் பயன்களும், பயன்படுத்தும் வழிமுறைகளும்..
தர்பூசணி விதை
பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துகளை உள்ளடக்கியது.
இந்த விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.
இதன் மேல் தோலை நீக்கி, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.
*முள்ளங்கி விதை*
ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மை இதற்கு உண்டு.
ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, கால் வீக்கம், மது அருந்துவதால் வரும் தலை சுற்றல், தொண்டைப்புண் போன்ற பல உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அரை ஸ்பூன் அளவுக்கு நீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என மூன்று நாளைக்கு தொடர்ந்து அருந்தி வந்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற வாயுக்கள் நீங்கும்.
நெய்யில் வறுத்த முள்ளங்கி விதைகளைப் பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து அருந்தி வந்தால், ஆண்மை அதிகரிக்கும்.
*பூசணி விதை*
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடியதுமான பூசணி விதையில் அதிக அளவு மக்னீஷியம் சத்து உள்ளது.
பூசணியில் உள்ள துத்தநாகச் சத்து, உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலப்படுத்தும்.
பூசணி விதைகளும், இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் போன்ற பாதிப்புகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும்.
ஆண்கள் பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும்.
பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்..
*வெண்டைக்காய் விதை*
புரதச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின் பி போன்ற பல்வேறு சத்துக்கள் இதில் உள்ளன.
குறிப்பாக, இதன் மேல் தோலில் நார்ச் சத்து அதிகம் உள்ளது.
இந்த விதைகளை நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி இளஞ்சிவப்பாக வறுத்து சமையலில் பயன்படுத்தலாம்.
நன்கு காயவைத்த வெண்டை விதையுடன், காபி கொட்டையை சேர்த்து அரைத்துப் பருகினால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் தீராத தலைவலியும் நீங்கும்.
*முருங்கை விதை*
கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு.
முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும்.
ரத்த சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும்.
பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.
விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.
: *சுரைக்காய் விதை*
சிறுநீரை அதிகப்படுத்துதல், பித்தத்தைக் குறைத்தல், உடல் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு சக்தியை அளித்தல் போன்ற பல பயன்களை தரக்கூடியது சுரைக்காய் விதை.
வெயிலில் காயவைத்து மேல் தோலை நீக்கிய பிறகு கிடைக்கும் பருப்பு போன்ற விதைகளை உணவில் பொடி செய்து சேர்த்துச் சாப்பிடலாம்.
இனிப்புப் பண்டங்களில், முந்திரிப் பருப்புக்குப் பதிலாகவும் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
*நாவல் கொட்டை*
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து, நாவல் பழத்தின் கொட்டை.
இதில் உள்ள ஜம்போலின் என்ற வேதிப் பொருள், மாவுச் சத்து சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்துகிறது.
நாவல் கொட்டையை, நிழலில் உலர்த்தி லேசாக வறுத்து, வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து நீர் அல்லது மோருடன் கலந்து பருகலாம்.
மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் அடங்கும். நா வறட்சியும் நீங்கும்.
அதிகமாக உட்கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதை நினைவில் நிறுத்தவும்.
*திராட்சை விதை*
உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிப் புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது.
மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தியாக உதவுகிறது.
திராட்சைப் பழத்துடன் விதைகளைச் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும்.
ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் விதைகளை உண்டு வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
மலச்சிக்கலுக்கும், மூலத்துக்கும் நல்ல மருந்து. மேலும், ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
*பருத்தி விதை*
அதிக அளவு புரதச் சத்து, நார்ச் சத்து, கொழுப்புச் சத்து கொண்டது பருத்தி விதை.
சித்த மருத்துவத்தில் சளியைக் கரைக்கக்கூடியதாகவும், மலமிலக்கி யாகவும் பயன்படுகிறது.
இதன் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பருத்திப் பால் மிகுந்த ஊட்டச் சத்து உடையது.
நன்கு சுத்தம் செய்த பருத்தி விதையை தண்ணீரில் நன்கு ஊறவைத்து, அரைத்து, பிழிந்து பால் எடுக்கவேண்டும்.
இத்துடன் சுக்கு, வெல்லம், தேங்காய்ப் பால் அல்லது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொதிக்கவைத்து சாப்பிடலாம்.
பப்பாளி விதை
உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியது.
சீன மற்றும் ஜப்பான் மருத்துவத்தில், கல்லீரலைப் பலப்படுத்தவும், உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் இந்த விதைகள் பெருமளவில் பயன்படுகின்றன.
வாரம் ஒருமுறை, பப்பாளி விதை கஷாயத்தைப் பருகிவந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும், செரிமானம் அதிகரிக்கும், வாயுத்தொல்லை நீங்கும்.
ஒரு ஸ்பூன் விதையை அரைத்து முகத்தில் பூசிவந்தால், சருமம் பொலிவாகும்.
மருந்தாக ஐந்து முதல் பத்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
*கவனிக்க வேண்டியவை:*
*ரசாயனக் கலப்பில்லாத, இயற்கை விதைகளை மட்டுமே மருந்தாகவோ அல்லது உணவாகவோ பயன்படுத்த வேண்டும்.*
*குறைந்த அளவில் மட்டுமே விதைகளை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.*
*அதிகளவில் பயன்படுத்தினால், எதிர்விளைவுகள் ஏற்படும்.*
*கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி விதைகளை எடுக்க வேண்டும்.*
*அதிகம் துவர்ப்புத் தன்மைகொண்ட விதைகளை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படலாம்*நன்றி:டாக்டர் நந்தினி சுப்பிரமணியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக