சனி, 2 மே, 2020

உலக சிரிப்பு தினம் மே மாதத்தின் முதல் ஞாயிறு.


உலக சிரிப்பு தினம் மே மாதத்தின் முதல் ஞாயிறு.

நகைச்சுவையின் வெளிப்பாடே இந்த சிரிப்புதான். சிரிப்பு மனதை இலகுவாக்குகிறது. மகிழ்ச்சி தருகிறது. இதனால் மன அழுத்தம் ரத்த அழுத்தம் குறைகிறது. அதனால் தான் ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்று நம் முன்னோர்கள் அன்றே சொல்லிவைத்தார்கள். நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை என்றால் ‘நான் என்றோ தற்கொலை செய்துகொண்டு இருப்பேன்’ என்று சொன்னார் மகாத்மா காந்தி. வாழ்வு தவம் என்றால் சிரிப்பு தான் மனிதனின் வரம்.

உலகில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலக மக்களை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்குத் தான் சிலை வைத்தார்கள். நம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு நாம் சிலை வைத்து பெருமை தேடிக்கொண்டோம். மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ‘சிரிப்பு’ தான் என்று சொன்னார் கலைவாணர்.’ சிரிக்காத ஒவ்வொரு தினமும் வீணான தினமே என்றார் சார்லி சாப்ளின். சிரிக்கும்போது இதயத்துக்கு நல்ல ரத்தம் ஓட்டம் கிடைக்கிறது. நுரையீரல் முழுவதும் சுருங்கி விரிவதால் நிறைய ஆக்ஸிஜன் ரத்தத்தில் கலக்கிறது. மகிழ்ச்சி ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே தான் சிரிப்பை மருந்து என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் அந்த மருந்தை கொடுக்கிற நானும் என் போன்ற நகைச்சுவை நடிகர்களும் கோட் போடாத ஸ்டெதாஸ்கோப் மாட்டாத டாக்டர்கள் தான். இப்பேர்ப்பட்ட உலக சிரிப்புத் தினம் எப்படி உருவாயிற்று? 1998-ல் டாக்டர் மதன் கட்டாரியா என்ற இந்தியரால் தான் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை உலக சிரிப்பு தினமாக அறிவித்தார். அவர்தான் உலக சிரிப்பு யோகா மையத்தின் நிறுவனர் ஆவார்.

வளர்ந்து நிற்கும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு எவ்வளவோ சிக்கல்கள் நெருக்கடிகள். சீட் கிடைத்து (அல்லது வாங்கி) நல்ல படிப்பு படிக்க வேண்டும். அதன் பின் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கவேண்டும். அதன்பின் தன் பணிக்கும் வாழ்விற்கு ஏற்ற துணை தேடி திருமணம் செய்ய வேண்டும். அதன்பின் குழந்தையை படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தை பராமரிக்க பதவி உயர்வு வேண்டும்.

இப்படி தொடர் நெருக்கடி சங்கிலிகளை தன் மேல் மனிதன் பிணைத்துக்கொள்கிறான். இதனால் மன அழுத்தம் ...தூக்கமின்மை... ரத்த அழுத்தம் என்று வியாதிகள் வேறு. பணம் தேடி அலையும் மனிதா ஒன்று சொல்கிறேன்!

எவ்வளவு தான் சொத்து சேர்த்து வைத்தாலும் ...ஆள்... அம்பு... அரண்மனை... ஆஸ்தி... என்று வாழ்ந்தாலும் ...தங்கத்தில் சட்னி செய்து... வெள்ளியில் இட்லி செய்து சாப்பிட முடியுமா? ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கார்களை ஓட்ட முடியுமா? சுகர் வந்து விட்டால் ...எல்லோரும் விருந்து சாப்பிட்டாலும் நீ கஞ்சி தான் குடித்தாக வேண்டும்.

இவ்வளவு தான் வாழ்க்கை! ‘மேல இருந்து போன் வந்தால் ...கீழே வேன் வந்துரும்’. கிளம்ப வேண்டியது தான்!. எனவே... எல்லாம் கொஞ்ச காலம் தான்.. என்று தெளிவு நிலை பெற்று.. மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருப்பதைக்கொண்டு திருப்திகரமாக வாழ வேண்டும். கோபத்தை பொறாமையை எரிக்க வேண்டும். எப்போதும் குழந்தை போல சிரிக்க வேண்டும். மற்றவரை சிரிக்க வைப்பவர்கள் ஆண்டவனின் அருகில் இருக்கிறார்கள் என்றார் அப்துல்கலாம். ஏழையா இருக்கும் போது சதா சிரிக்கும் ஒருவன் பணக்காரன் ஆனதும் அந்த சிரிப்பை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்னு’

நீங்க டென்ஷனா இருக்கும் போதோ, இல்லை கோபமா இருக்கும்போதோ உங்க முகத்தை கண்ணாடியில் பார்த்து இருக்கிறீர்களா? உங்களுக்கே உங்களை பிடிக்காது. ஆனா மகிழ்ச்சியா இருக்கும்போது புன்னகை புரிந்துகொண்டே கண்ணாடியில் பாருங்கள். உங்களை உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். மனிதனின் ஆழ்ந்த அடிப்படை குணமே சிரிப்பது தான். அதனால் தான் ‘மண்டைஓடு’ -எப்பவும் சிரிச்ச மாதிரியே இருக்கும்.

ஆகவே பொன் நகையை விட புன்னகைக்கு மதிப்பு அதிகம். எல்லாவற்றையும் அரசு இலவசமாக கொடுக்குமா என்று எதிர்பார்க்கும் மக்களே! உங்களிடமே இருந்து உருவாகும் ஒரு உயர்ந்த உன்னத இலவசம்- சிரிப்புதான் செலவு இல்லாத மருந்து. என்வே வாய்விட்டு சிரியுங்கள். -அந்த 32 வெள்ளைப்பூக்கள் நன்றாகப் பூக்கட்டும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக