வியாழன், 21 டிசம்பர், 2017

சமையலும் மிச்சங்களும்


சமையலும் மிச்சங்களும்

என்னதான் அளந்து அளந்து சமைத்தாலும் தினசரி சமையலில் ஏதேனும் ஒன்று மிச்சமாவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மனிதன் இயந்திரமாய்ச் செயல் பட்டாலும் உணவு என்று வரும்போது அதில் மனதின் பங்கு முதன்மை பெறுகிறது. பிடித்தமான உணவு என்றால் அடுத்து சாப்பிட இருப்பவர்களைப் பற்றி கவலைபடாமல் உபரியாக உள்ளே தள்ளுபவர்களால் வரும் பிரச்சனை வேறு. அது பற்றாக்குறை.

ஆனால் ஒரு கால் கிராம் உப்பு குறைவு என்பதாலோ, அரை கிராம் புளிப்பு அதிகம் என்பதாலோ அரை குறையாகச் சாப்பிட்டு தட்டைக் கழுவி வைக்கும்போது தான் உணவு மிச்சம் என்னும் பிரச்சனை உருவாகிறது. சில சமயங்களில் அஜீரணம் போன்ற இயற்கைக் காரணங்களாலும், முன்னிரவு உண்டு களித்த பெருவிருந்தின் மிகைக் கலோரிகள் காரணமாகவும் தினசரி சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிட நேரிடலாம்.
நல்லதொரு குடும்பத்தில் ஏற்படும் பல்சுவைக் கலகங்களாலும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு அது உண்ணும் அளவில் பிரதிபலிப்பதும் அன்றாட நிகழ்வுகள்தான்.  வீட்டுக்கு வீடு இத்தகைய பிரச்சனைகள் உண்டு என்றாலும் நாம் அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் அதற்கான தீர்வுகள் இருக்கின்றன.

சமையல் என்பதும் ஒரு வகை முதலீடுதான். அதன் இடுபொருட்கள் விலையேற்றம் அதனை நம் சம்பாதிப்பில் கணிசமான அளவை இப்போது அபகரிக்கரிக்கின்றன. முன்பு மளிகைச் செலவுகளும், தினசரி காய்கறிச் செலவுகளும் ஏனைய செலவுகளும் ஒப்பிடும்போது குறைந்த சதவீதமாக இருந்தது இப்போது நாலு நாட்டு காய்கள் வாங்கினாலே அதன் மின்னணு பில் நானூறு என்று காட்டி பின்னர் வரக் காத்திருந்த ஹார்ட் அட்டாக்கை முன்னரே அனுப்பிவைக்கிறது..

காய்கறிகளைச் சமைப்பதா அல்லது பார்த்துக்கொண்டே காலத்தைத் தள்ளுவதா என மலைப்பாக இருக்கிறது. கையில் காசு, பணம், துட்டு எல்லாம் தொலைந்து போய் அட்டை வந்து ஒட்டிக்கொண்ட நாள் முதலாய் எப்படி என்ன செலவு செய்து தொலைக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் வங்கி இருப்பு வரண்டு போகுமளவு செலவழிக்கிறோம். அது என்னவோ தேய்க்கத் தேய்க்கத் தேயாத அமுதசுரபியாய் எண்ணி வாங்கும்போது ஆசையின் உந்துதலில் வாங்கிவிட்டு பின் அவசியம் என்று வரும்போது அல்லல்படுகிறோம்.

அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதாகவே ஒரு பதிவை எழுதுவது சுலபம்தான். மாறாக அடுத்தவர்களின் எண்ணம் என்ன என்று ஒரு கலந்தாய்வாய் இருந்தால் பல நல்ல யோசனைகள் படிக்கும் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புண்டு என்பதால் நண்பர்களே இதனை இத்தோடு நிறைவு செய்கிறேன். இனி உங்கள் பாடு.

சமையலில் சிக்கனம் அவசியமா? ஆம் என்றால் எப்படியெல்லாம் ‘சிக்’ என சிக்கனம் பிடிக்கலாம்? ஆகக் குறைந்த அளவு மீதமாகும்படி சமைப்பது எப்படி? எதிர்பாராமல் அதிகம் மீதமாகிவிட்டால் உணவை வீணாக்காமல் சமாளிப்பது எப்படி? என்பதற்கான தங்களின் மேலான ஆலோசனைகளை தனிப் பதிவாகவோ பின்னூட்டமாகவோ அளிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொண்டு…….என் சிற்றுரையை சிக்கனமாக முடிக்கிறேன்.

பின்குறிப்பு:

கூடுமானவரை தமிழ் செயலியை பதிவிரக்கம் செய்து செந்தமிழில் தட்டச்சு செய்ய முயற்சிக்கவும். சமையல் போலவே முதலில் சுமாராக,  நாலு பேர் பார்த்துச் சிரிக்குபடியாக இருந்தாலும் போகப் போக அசத்துவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக