சிரித்து வாழ வேண்டும்..!
மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!
''சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் வெளியேறிவிடுகிறது..!" என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.
''உன் மனம் நோகும் போது சிரி... பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!''
உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) 1998 - ம் ஆண்டு உருவாக்கினர்.இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய் கொண்டாடுகிறார்கள்.அப்போது, 'சிரிப்பு மூலம் உலக அமைதி', வாழ்க்கைக்காக சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை, சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி, போன்ற பேனர்களுடன் செல்கிறார்கள். சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-
சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.
ஏன் சிரிப்புத் தினம்?
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பயங்கர வாதம் பரவி அதன் மூலம் அச்சுறுத்தலான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இதுதவிர, ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் பணிபுரிவதால் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது,இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது.மேலும்,அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே காரணமாக இருக்கிறது.
அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது.இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக இருக்கிறது.நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும் இருக்கிறான்.அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்விடுகின்றன.
'லாப்டர் யோகா' மனிதனின் உள்ளம், உடல் இரண்டையும் வலிமையானதாக மாற்றுகிறது. இதன் பலன் நன்றாக இருப்பதால் பல உடற்பயிற்சி மையங்களில் இந்த லாப்டர் யோகாவை சேர்த்து வருகிறார்கள்.
இது அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத தொழில் வல்லுனர்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. வழக்கமாக ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சியின் பலனை இந்த லாப்டர் யோகாவை 20 நிமிடங்கள் செய்வது மூலம் பெற முடியும் என்று ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் ஃப்ரே கண்டுபிடித்துள்ளார்.
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது.உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.
சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி விடுகிறது.கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
நன்றி விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக