வியாழன், 14 மே, 2020

சர்வதேச குடும்ப தினம் மே 15 !


சர்வதேச குடும்ப தினம் மே 15 !

 சர்வதேச குடும்ப தினம்!
'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வரிக்கேற்ப குடும்பம் சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கிறது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும். இன்று மே 15 ஆம் தேதி உலக முழுவதும் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் நோக்கில் ஐ.நா. சார்பில் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினம் எந்தச் சூழ்நிலையிலும் எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவது என்பது அரிது. ஒருவரின் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானிப்பது குடும்பம்தான். இன்றைய காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது. சுதந்திரம் வேண்டும் என்ற நோக்கில் பெரும்பாலானோர் தனிக் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்கும் முதியோர் இல்லாமையால்,அவர்கள் வழி தவறி செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், கல்வி,வேலை, போன்ற காரணங்களால் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். நவீன தொழில்நுட்ப காலத்தில்,குழந்தைகள் வாட்ஸ் அஃப், ஃபேஸ்புக்கில் முழுகிக் கிடக்கின்றனர். அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பேச நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களுடைய துன்பங்களையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள மனிதர்களை விட இயந்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இளைஞர்கள், தங்கள் உறவினர்கள் அனைவரோடும் கூட சந்தோஷமாக இருக்கும் நிகழ்ச்சிகளில், கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டு, பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுகின்றனர். எப்போதுமே, தனிமையில் இருப்பதால், மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நாம் பேசும் ஒருசில வார்த்தைகளால் குடும்பம் கண்ணாடி துண்டு போல், இரண்டாகப் பிரிகிறது. உடைந்த கண்ணாடி துண்டை ஓட்ட வைப்பது எவ்வளவு கடினமோ, அதுபோன்றுதான், பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பது. அதனால், ஒருசில வேளைகளில் நம்முடைய நாவை அடக்கிக் காப்பதும் நன்மை பயக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டுப் பேசுவதால், எத்தனைப் பெரிய காரியங்களையும் எளிதாகக் கையாள முடியும்.

அதனால், நாம் அனைவரும் நல்ல குடும்பத்தை உருவாக்குவதும், இருக்கின்ற குடும்பத்தை தக்க வைத்துக் கொள்வதும் நமது கடமையாகும். நமக்கு முன் வாழ்ந்துவிட்டுச் சென்ற முன்னோர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நல்ல குடும்பங்களை அமைப்போம் என உறுதிமொழி எடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக