#உயிரினங்களை_அறிவோம்
#கருஞ்சிறுத்தை
கருஞ்சிறுத்தை மிகவும் அபூர்வமானவை, அவைகளை பார்க்கவே முடியாது என்பது நம் எண்ணம். அது ஒருவகையில் உண்மையானாலும் கருஞ்சிறுத்தை என்பது தனி இனம் அல்ல, நிறக் குறைபாடு உள்ள சிறுத்தையே.
இன்னும் சொல்லப்போனால் தானொரு கருஞ்சிறுத்தை என்பது அதற்கே தெரியாது (விலங்குகள் பெரும்பாலும் நிறங்களை பிரித்து அறியாதவை).
அருகில் நோக்கினால் அவை முழுவதும் கருப்பாக இல்லாமல் மற்ற சிறுத்தைகளுக்கு இருப்பதைப்போல கருப்பு புள்ளிகள் தெரியும். இதற்கு முக்கியக்காரணம் உடலில் சுரக்கின்ற மெலனின் என்ற நிறமி. இவை அதிக அளவில் சுரக்கும்போது தோலின் நிறம் அடர் நிறத்திலும், குறைவாக சுரக்கும்போது வழக்கமான நிறத்தில் இருக்கும் விலங்குகள் தோல் வெளுத்தும் (Albino) காணப்படும்.
அல்பினோக்கு உதாரணம் வெள்ளை நிற புலிகள், வெள்ளை நிற மயில் (இவை நம் மதுரை திருப்பரங்குன்றத்தின் தென் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன, தற்போது காண்பது அரிதாகி விட்டது.) சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூரிலும் காணலாம்.
கருஞ்சிறுத்தைகளின் இனப்பெருக்கம் என்பது வழக்கமாக நாம் பார்க்கும் சிறுத்தைகளுடனேயே இருக்கும். இவற்றின் பெற்றோரும் நாம் வழக்கமாக பார்க்கும் சிறுத்தைகளாகவே இருக்கும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கர்நாடகத்தின் நாகர்ஹோலே, கபினி, பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள், குதிரைமூக்கு, கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு, இரவிக்குளம் தேசியப் பூங்காக்கள், பரம்பிக்குளம், பெரியார் புலிகள் காப்பகங்கள் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்கள், கோவை வெள்ளியங்கிரி மலை, நீலகிரி மற்றும் சிறுவாணி அணையை ஒட்டியிருக்கும் அடர்காடுகளில் இவை காணப்படுகின்றன.
வனவிலங்குகளை பாதுகாப்பதும் நம் பிள்ளைகள் தலைமுறையினருக்கு வழங்குவதும் நமது கடமையாகும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக