வெள்ளி, 8 மே, 2020

அன்னையர் தினம் மே மாதம் 2 வது ஞாயிறு


அன்னையர் தினம்... அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

சென்னை: தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்பது பழமொழி. ஆம்.. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவனுக்கு அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும்.

தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். ஒரு கால கட்டம் முதல் தான் மண்ணில் புதையுறும் வரை தன்னலம் பேணாது உழைத்துக் கொண்டே இருப்பவள் தாய். அவளை தூக்கி வைத்து கொண்டாடவிட்டாலும் அவரை போற்ற ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.

அதுதான் அன்னையர் தினம்... நாடெங்கும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடடப்படுகிறது.

பெண் எனும் பிரம்மா

பெண் என்பவள் பூப்பெய்தும் வயதை அடைந்து, திருமண பந்தத்தில் இணைந்து, கருவுற்று தாயாகி குழந்தையை பெற்றதும் முழுமை அடைகிறாள். பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார்கள் என்றால் பெண்ணும் அதே பணியை செய்கிறாள்.

மறுஜென்மம்

பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறை என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள். பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள்.

என்ன கைமாறு

தான் உண்ணாமல் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய்தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள். அத்தகைய தாயை கடைசி காலத்தில் காக்க முடியாமல் முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது.

கணக்கு பார்ப்பது
தம்மை வளர்க்க தாய் பட்ட பாடுகளை மறந்த சில பிள்ளைகள் தன் தாய்க்கு ஒரு பிடி உணவு அளிக்க மனதளவில் வக்கற்று போய், அந்த தாய்க்கு மூன்று பிள்ளைகள் என்றால் மாதம் ஒருவர் பராமரிப்பது என்று கணக்கு போடுகின்றனர். அவர் இருக்கும்போது ஒரு பிடி உணவுக்கு சண்டையிட்டு கொள்ளும் சகோதரர்கள் அவர் இறந்தபின்னர் வடை, பாயாசம் என அறுசுவை உணவுகளை செய்து படைப்பதில் என்ன பயன்!

மகனோ, மகளோ தங்களை உள்ளங்கையில் தாங்குவதை பார்த்து பூரித்து போகும் தாய், தந்தையரை காட்டிலும் இந்த உலகில் எது நமக்குக் கிடைத்தாலும் அது துச்சமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக