வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சாக்லேட்


சாக்லேட்

இலக்கியம் இல்லா இன்னிசையாய்

இலக்கணமற்ற தேன்மழையாய்

அறுந்தறுந்து விழும் அழகிய கவிதையாய்

காற்றோடு சிறு நடனமாடி

காணும் விழியை வருட செய்து

ம்மா… சாக்லேட்… ம்மா… என அபிநயம் செய்கையில்

சாக்லேட் ஆகவே மாறிவிடுகிறாள் வைஷு…

தேவதைகளின் தேவதை

சாக்லேட் தேவதையாய்…

சாக்லேட்… இந்த வார்த்தையைக் கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள்  வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இதயத்தை புத்துணர்வு ஆக்கும். எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.

gift-sets

உலகளவில் ‘சாக்லேட் தினம்’, வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்டம்பர் 4ம் தேதி ‘உலக சாக்லேட் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. சாக்லேட் ‘கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும், சாக்லேட், பல்வேறு இடுபொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது, இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  (அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்).

chocolate

கொலம்பியாவுக்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்லேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு வந்தது. பண்ட மாற்றுக்குக் கூட சாக்லேட் பயன்படுத்தப்பட்டதில் இருந்து அதன் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. சாக்லேட், சோளக்கூழ் மற்றும் தேனுடன் சேர்த்து பானமாக பருகப்பட்ட வழக்கமும் பண்டைய காலத்தில் இருந்து வந்ததே. நாம் இப்போது அதிகம் விரும்பி உண்ணும் கன செவ்வக வடிவ சாக்லேட்டுகளுக்கு முன்னோடி ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர். இவர்தான் முதன் முதலில் 1847ம் ஆண்டு கன செவ்வக வடிவிலான சாக்லேட்டுகளை வார்த்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. ‘சாக்லேட், இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்’ என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவை வெளியிட்டவர்கள் ‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக’ ஆராய்ச்சியாளர்கள். தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சாக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சாக்லேட் அளிக்கப்பட்டு வந்தது. தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவிகிதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவிகிதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பைத் தடுப்பதில் சாக்லேட்டுக்கு பங்கில்லை என்பதும் தெரிந்தது. முதல்கட்ட 6 ஆய்வுகளில் சாக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சாக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெஸர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும், ‘சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை’ என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயாபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ‘கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயைத் தடுக்க உதவும்’ என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை பாதுகாக்க சாக்லேட்டை பரிசாக அளிக்கின்றனரோ என்னவோ? நீங்களும் தினசரி ஒரு சாக்லேட் சாப்பிடுங்களேன். இதயம் பலமாகும்.

Chocolate-City

தயாரிக்கும் முறை:

கோகோ (Cocoa) மரத்தின் கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவை, சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கோகோ தூள் என பல வகைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

சாக்லேட் என்பது கோகோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் சொல். இது, கோகோ கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவையுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் என்ற சொல் மத்திய மெக்ஸிகோவில் வாழ்ந்த சிவப்பிந்தியர்களிடமிருந்து தோன்றியது.

பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் மற்றும் குக்கீஸ்களிலும் மூலப்பொருளாக சாக்லேட் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட்டுகள் பெரும்பாலும் அவற்றின் சுவை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன. அவற்றில், இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், கூர்வெர்சர், பால் சாக்லேட் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இனிப்பு மட்டுமல்ல… கசப்பு சுவை கொண்ட சாக்லேட்டுகளும் சந்தையில் கிடைக்கின்றன. சாக்லேட்டின் சுவையை மேலும் மெருகூட்ட அவற்றில் ஆரஞ்சு, புதினா, ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன.

Portfolio : http://fr.fotolia.com/p/201433930

இதோ நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்ஸ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…

* ஒரு பவுண்டு (450 கிராம்) சாக்லேட் தயாரிக்க சுமார் 400 கிராம் கோகோ அவரைகள் தேவைபடுகின்றன.

* அமெரிக்காவின் மாபெரும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ‘ஹெர்ஷே சாக்லேட் நிறுவனம்’ ஒரு நாளைக்கு 80 மில்லியன் சாக்லேட்டுகளை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிறுவனரான Milton Hershey என்பவரின் சுவாரஸ்யமான தகவல் இது. இன்று வரை பேசப்படும் பெரிய விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணமாக இருந்தவர் இவர். ஆனால், கடைசி நிமிடத்தில் பணி நிமித்தமாக அப்பயணத்தை ரத்து செய்தாராம்.

20ம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் அமெரிக்க போர் வீரர்களின் ஒரு பிரதான உணவுப் பங்கீடாக கருதப்படுகிறது.

* ஒரு தனி சாக்லேட் சிப் உங்களுக்கு 150 அடி தூரம் நடப்பதற்கான ஆற்றலைத் தருகிறது.

* சாக்லேட்டுகள் கோகோ பழங்களின் உள்ளே இருக்கும் நெற்றுக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது முதன்மையாக மத்திய, தென் அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் வெப்ப மண்டலங்களில் வளருகின்றன.

*சாக்லேட்டில் உள்ள ஒருவகை பாக்டீரியாக்களை அழிக்கும் பண்பு பற்சிதைவை தடுக்க உதவுகிறது.

*ஐவரி கோஸ்ட் மற்றும் கானா நாடுகளில் உள்ள கோகோ பண்ணைகளில் 5-17 வயதுடைய சுமார் 1.8 மில்லியன் சிறார்கள்

கட்டாயப் பணிகளில் அமர்த்தப்பட்டனர் என 2010ம் ஆண்டு அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால், சிவப்பு வர்த்தக சான்றளிக்கப்பட்ட சாக்லேட் கட்டாய குழந்தை தொழிளார்களிடமிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.

* டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், சாக்லேட் உண்பது உடலுக்கு உகந்தது எனக் கூறுவது இந்த கரும் சாக்லேட்டுக்களைதான். ஏனென்றால் இதில் பால் மற்றும் வெள்ளை வகைகளை விட கோகோவின் அளவு கூடுவதுடன் குறைவான சக்கரையும் பயன்படுத்தப்படுகிறது.

* கி.மு 1900க்கு முன் சாக்லேட் : அஸ்டெக்குகள் கோகோ அவரைகள் கடவுள் அளித்த வரம் என நம்பப்பட்டு அவற்றை ஒரு நாணய வடிவத்திலும் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மேலும் முதலில் மசாலா வகைகள், மது அல்லது சோளக் கூழ் போன்றவற்றுடன் கோகோ சேர்க்கப்பட்டு ஒரு கசப்பான பானமாகவே தயாரிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டில்தான் ஸ்பானியர்கள் கோகோவுடன் சர்க்கரை சேர்ப்பதை அறிமுகபடுத்தினார்கள்.

* பெரும்பாலான மக்களால் சாக்லேட் விரும்பப்படுவதற்கான காரணம் சாப்பிட்ட பின் சாக்லேட்டின் நறுமணம் மூளையின் ஒருவித திறன் அலைகளை அதிகரிக்கச்செய்வதுடன் ஓய்வுணர்வையும் அளிப்பதே…

நம்ம வீட்டு செல்லங்களுக்காக ஓர் எளிய ஹோம் மேட் சாக்லேட் முறையை பார்ப்போமா?

home made chocolate

என்னென்ன தேவை?

டார்க் சாக்லேட் பார் – 1, பிரவுன் சாக்லேட் பார் – 1, முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் இரண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் டிரை ஃப்ரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* அடுப்பை ஒரே சூட்டில் வைத்திருக்கவும். அப்போதுதான் சூடு, மேலே இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரேயை எடுத்து அதனுள் உருகிய சாக்லேட்டை ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் டிரை ஃப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்றவும்.

* இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மென்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழே வைக்கும் பாத்திரத்தை விட, மேலே வைத்திருக்கும் பாத்திரம் பெரியதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக எளிதாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் கீழே உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் குறைந்தால் மறுபடியும் ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ஃப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரேவை உபயோகப்படுத்தலாம். ஹோம் மேட் சாக்லேட் குறைந்த செலவில், வீட்டிலேயே பண்ணலாம். டிரை ஃப்ரூட்ஸ்க்கு பதிலாக, நம் விருப்பத்துக்கு எதை வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ஃப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேஃபர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ஃப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கெட், போலோ.
நன்றி - குங்குமம் தோழி.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக