வியாழன், 11 ஜனவரி, 2018

வீட்டுக்கு வெள்ளை...தரைக்கு சாணம்...வீரத்திற்கு ஏறு... முன்னோர்கள் கொண்டாடிய பொங்கல்...



வீட்டுக்கு வெள்ளை...தரைக்கு சாணம்...வீரத்திற்கு ஏறு... முன்னோர்கள் கொண்டாடிய பொங்கல்...

ஆதித்தமிழர்கள் முதல் ஐ.டி தமிழர்கள் வரை, பொங்கலை சிறப்பாகக் கொண்டாடச் செய்கின்றனர். பொங்கலின் சிறப்பு ஊரறிந்ததென்றாலும் அதன் பின் இருக்கக்கூடிய பெரிய சிந்தனைத்திறனும் செயல்பாடுகளும் ஆட்டம் பாட்டங்களும் சுவாரஸ்யமானது.
"ஆடிப்பட்டம், தேடி விதைக்கணும்"என்பார்கள். அதன் பொருள், விவசாயிகளால் பயிரிடப்பட்டப் பயிர்கள், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி அடைமழையில் செழித்து, கார்த்திகை, மார்கழி தைக்கு அறுவடைக்கு வந்து விடும் என்பதுதான். "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது"என நெற்றி வியர்வை நிலத்தில் விழ, வெயிலில் வெந்து உருகும் விவசாயிகள் "பயிர்கள் அறுவடையால் தைப்பிறந்தால் தங்களின் வாழ்விற்கும் வழிப்பிறக்கும்"என நம்பிக்கைக் கொண்டு கொண்டாடும் உன்னத விழா, பொங்கல்.
ஏன் பொங்கலுக்கு வீட்டை வெள்ளையடிக்கிறோம், மாட்டுச்சாணம் கொண்டு மொழுகுகிறோம்?
பொங்கல் என்பது நம் மண்ணிற்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஒருபுறம் இருந்தாலும், அது நம் உடலுக்கும் மனதிற்கும் மறைமுகமாக ஆரோக்கியம் தரும் நாள். பழங்காலத்தில் இப்பொங்கல் கொண்டாடும் நாட்கள் மழைக்காலம் தணிந்து, குளிர்காலத்தின் ஒருபகுதியில் நடைபெறுவதால், உடலின் அதிக உஷ்ணசக்திகள் மாறிமாறி வெளியேறி, மக்களிடையே பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களை உருவாக்கிவிடுமாம்.
அதுமட்டுமின்றி மழைக்காலம் முடிந்தவுடன் பல நச்சுப்பூச்சிகள் வீட்டினை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிடும் என்பது அறிந்த விஷயம். இதனைத் தவிர்க்கவே பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள அனைத்துப்பொருட்களையும் சுத்தம் செய்து, சுண்ணாம்பினால் வெள்ளையடித்து, பரண்களில் மாட்டுச்சாணம் கொண்டு மொழுகுவர். ஏனெனில், சுண்ணாம்பு மற்றும் மாட்டுச்சாணத்தின் காரத்தன்மையால், பூச்சிகள் வராது என்ற அறிவியல் உண்மை. மேலும் வெள்ளையடிப்பதினால் சுவர்களில் வெயிலினால் ஏற்படும் தாக்கம், வீட்டைத் தாக்காமல் பாதுகாக்கும், இதனால் வெயில் சார்ந்த அம்மை, வயிற்றுப்போக்கு நோய்கள் நம்மை அண்டாது.
"காப்பு" இப்போ "போகி"யாச்சு
முற்காலத்தில் பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முதல்நாள், பண்டிகைக் காலங்களில் வீட்டினரை நோய் அண்டி விடக்கூடாது என எண்ணி, "காப்பு கட்டுதல்" எனும் பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தற்போது "போகி" என அழைக்கப்பட்டாலும் அதன் சிறப்பு, தமிழர்கள் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயம். இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவர், இதனால் நோய் தாக்கும் பூச்சிகள் வருவதில்லை என்ற உண்மை பொதிந்துள்ளது
"மனைப்பொங்கலும் மாட்டுப்பொங்கலும்"
பழங்காலத்தில் வீடுகள் வேளாண் செய்யும் நிலங்கள் அருகிலேயே அமைந்திருந்தன. தைத்திங்கள் முதல் நாளன்று, வீட்டிலுள்ள அனைவரும், உறவினர்கள் ஒன்றுகூடி, வீட்டின் முன்பகுதியில், பகலவனுக்கு நன்றி சொல்லும் விதமாக, விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட கரும்பு, மஞ்சள், வாழை ஆகியவை சேர்த்து படையலிட்டு இடும் பொங்கல்"மனைப்பொங்கல்"எனப்படுகிறது.
இப்பொங்கலில் இருக்கும் பச்சரிசி, பால், ஏலக்காய், முந்திரி, மண்டைவெல்லம் ஆகியப்பொருட்கள், பனிக் காலத்தில் பாதிக்கப்பட்ட உடலுக்கு வலுசேர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளன. இதில் கரும்பும், மண்டை வெல்லமும் இரும்புச்சத்தினையும், பச்சரிசி கார்போஹைட்ரேட்டையும், ஏலக்காய் செரிமானத்தையும் தருகின்றன.
கால்நடைகளுக்கு நன்றி
மறுநாள் நடைபெறும் பொங்கல், நமக்கு உற்றத்தோழனாகயிருந்த பாசமிக்க கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கால்நடைகளுடன் விளைநிலங்களுக்குச்சென்று, மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. இந்நாளில் தமிழர்களைச் சுதியேத்தும் பாரம்பரியமான ஒட்டு மொத்த வீர விளையாட்டுக்களும் துவங்குவது மிகச்சிறப்பு. இந்நாளில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களான மஞ்சு விரட்டு எனப்படும் ஏறுதழுவுதல், சிலம்பாட் டம், இளவட்டக்கல் தூக்கும் போட்டி, சேவல் சண்டை, ரேக்ளாரேஸ் எனப்படும் மாடுகள் பூட்டிய வண்டிகளின் பந்தயங்கள், உறியடி போன்ற விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். பின்னர் சொந்தங்கள் ஒன்று கூடும் காணும்பொங்கலிலும் இதன் தொடர்ச்சி நீளும். இதன்பின்னால் முன்னோர்கள் சொன்ன பழமையான தகவல் நம்மை ஆச்சர்யப்படுத்தியது.
மஞ்சு விரட்டும் ஏறுதழுவுதலும்
அன்றைய காலகட்டங்களில் திருமணம் எனும் பந்தத்தில் இணையும் ஆண்மகனின் முழு உடல்தகுதியை சோதிக்கவும், பெண் வீட்டாரால் இம்மாதிரியான விளையாட்டு, கண்காணிக்கப்படுமாம். இதில் தேர்ந்த வீரனுக்கு மனோதிடமும், உடல் திடமும் இருப்பது உறுதியளிக்கப்பட்டு, மாப்பிள்ளை உடனடியாக நிச்சயம் நடைபெறுமாம். எதற்காக இத்தேர்வு என்றால், மருத்துவ வசதிகள் பின் தங்கிய காலகட்டத்தில், மணமகன் நோய்தொற்றுக்கு ஆளாகி, தங்கள் வீட்டுப் பெண் விரைவில் விதவையாகிவிடக்கூடாது என்பதில் பெண் வீட்டாரிடையே இருந்த விழிப்புணர்வே காரணமாம்.
இப்படி ஒவ்வொரு கொண்டாட்ட தினங்களில் நடக்கும் முன்னோரின் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்பும், ஒரு ஆழமான மதிநுட்பமும் அறிவியலும் இருந்ததைக் கண்டால், தமிழர்கள் என்ற ஒற்றை வார்த்தை வெறும் சொல் அல்ல அது பாரம்பரியமும் பண்பாடும் கொண்ட வாழ்க்கை என நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
ஐ.டியில் ஐந்திலக்க சம்பளம் வாங்கினாலும் மல்லுவேட்டிக்கட்டும் தமிழர்களாய் இருப்போம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழர் பண்பாட்டை மறக்காமல் பேணுவோம். பொங்கலோ பொங்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக