வியாழன், 18 ஜனவரி, 2018

இலக்கிய பெண்களும் இன்றைய பெண்களும்..



இலக்கிய பெண்களும் இன்றைய பெண்களும்..

*காலங்களில் அவள் வசந்தம்கலைகளிலே அவள் ஓவியம்மாதங்களில் அவள் மார்கழிமலர்களிலே அவள் மல்லிகை'இப்படி 'அவள்' என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவது பெண்ணைத் தான்.*

வீட்டைத் துாய்மையாக வைத்து, வாயில் முற்றத்தில் கோலம் இட்டு, நிலையில் மாவிலைத் தோரணம் கட்டி, நிலையின் நடுவே குங்குமம் தடவி, நடையில் விளக்கு ஏற்றி வைப்பதும், சாமி படங்களுக்கு மலர்மாலை சூட்டுவதும் மங்கலம் என்று பொதுவாகச் சொல்வர்.ஆனால் வள்ளுவர் சொல்லும் மங்கலம் வேறு.
'மங்கலம் என்ப மனைசாட்சி மற்று அதன்நல்கலம் நன்மக்கட் பேறு'
- என்ற குறளில் மங்கலம் என்று கூறுவது பெண்ணைத்தான். இன்னும் சிறப்பாக சொல்லப் போனால் பண்பும், பரிவும், பாங்கு கொண்ட சிறந்த மனைவியையே அவர் மங்கலம் என்று சொல்கிறார்.
பெண்களின் உயரிய வடிவங்கள் : பண்டைய காலத்தில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை வடிவங்களாக வாழ்ந்து பண்டைத் தமிழ் மரபைப் போற்றியும், காத்தும் வந்திருக்கின்றார்கள். குடும்ப வாழ்வாம் இல்லற நெறியை சிரம் மேற்கொண்டு பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரளவு இன்றே'
இந்த வரிகள் ஒரு பெண் தன் தலைவன் மீது கொண்டுள்ள அளவில்லா அன்பையும், நட்பையும் காட்டுகிறது. இங்கு பெண் அன்பின் வடிவம்.
'தேன் மயங்குபாலினும் இனியஅவர்நாட்டு உவலைக் கூவற்கீழமானுண்டு எஞ்சிய கலுழி நீரே'
என்ற வரிகள் உயிர்களுக்கு அறம் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் உணர்ந்து கொண்டதைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் புகுந்த வீட்டு மாண்பை போற்றும் வகையில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை காட்டுகிறது. இங்கு பெண் நல்லறத்தின் வடிவம்.
விருந்தினர் உபசரிப்பு :
விருந்து எதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அங்சவும் அரும் பெறற் புதல்வனை முயங்கக் காணவும்ஆங்கவித்து ஒழியும் என் புலவி
(கலித்தொகை 75) என்ற வரிகள் கணவரோடு தேரில் வரும் விருந்தினரை தலைவி எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. விருந்தினர்களை உபசரிப்பதை தன் கடமையாகக் கொண்டிருப்பதால் இங்குப் பெண் பண்பாட்டின் மகுடம்.
சிறுவர்ப் பயந்த செம்மலலோர் எனப்பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்வாயே ஆகுதல் வாய்த்தனம் (அகம் )
என்ற வரிகள் நன்மக்கட் பேறு பெற்றதன் மாண்பைக் பெற்றதாக தலைவி மனநிறைவு கொள்வதை காட்டுகிறது. இங்கு பெண் மக்களோடு மகிழ்ந்து மனையறம் காக்கும் இல்லநெறியின் வடிவம். இவற்றைப் போல் இன்னும் பல உயரிய வடிவங்களாக பெண்கள் வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள்.
பெண் வாழ்க்கை ஒரு தவம் : இப்போதும் இன்றைய பெண்களுக்குள் இந்த வடிவங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். பெண்களை சுற்றியிருப்போர் வாய்ப்புகளை வழங்கினால் வடிவங்கள் வெளித் தோன்றும். சமுதாயத்தில், குடும்பத்தில் எழும் பிரச்னைகள், பெண்களை வளரவிடாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றன.
'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின்'
- என்று வள்ளுவர் கூறுகிறார். மயில் தோகை லேசானது தானே, மென்மையானது தானே என்று ஏற்றிக் கொண்டே போனால், அச்சாணி முறிந்து வண்டியும் சாய்ந்து கீழே விழுந்துவிடும். பிரச்னையும் சிறிது தானே என்று பெண்மைக் குணம் படைத்த பெண்ணின் மீது பிரச்னைகளை ஏற்றிக் கொண்டே போனால் எவ்வளவு தான் இன்றைய பெண்கள் தாங்குவாள்.
சாதுமிரண்டால்...
இன்பம் மட்டும் கணவன் - மனைவிக்கு உரியதல்ல. துன்பமும் கணவன் - மனைவிக்கு உரியது என்று எண்ணிக்கொண்டு குடும்பத்தை வழிநடத்தினால் மலை போன்ற துன்பமும் பெண்ணுக்குப் பனி போல விலகும்.
'இன்ப துன்பம் எது வந்தாலும்எனக்கு நீங்கள் உலகம்'
- என்று கண்ணதாசன் பாடுவது போல் இன்றைய பெண்கள் கணவரை மதிக்கத் தொடங்கிவிட்டால் வருகின்ற துன்பம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்.எப்போதும் கணவன் - குடும்பம் நல்வாழ்வு என்ற ஒரே நினைப்பு தான் பெண்ணுக்கு. இது அவள் வாழ்க்கையை ஞானிகள் செய்யும் தவத்திற்கு சமமாக செய்து விடும். அவள் சாதாரணப் பெண்ணாக இருக்கலாம். அவளுடைய ஆற்றல் பெரிது. குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போயிருக்கலாம். அவள் உயிரில் ஏறியிருக்கும் சக்தி பெரியது. அது அவளுக்கே தெரியாது.'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பார்கள். ஏதேனும் ஒரு நெருக்கடி தோன்றி அடக்கமாக உள்ள அவள் உணர்ச்சி, எழுச்சி பெறுமானால் அவள் எண்ணியது நடக்கும். இது இன்றைய பெண்களின் உணர்வுக் கோட்பாடு.
சம்சாரம் என்பது வீணை : இன்றைய பெண்கள், அனுபவங்களை பாடங்களாக்கிப் படித்துக் கொண்டே வந்தால், ஒரு சமுதாயத்தையே தன் அறிவால் புரட்டிப் போடுகின்ற சக்தியை பெறுவாள் என்பது நிச்சயம்.
சம்சாரம் என்பது வீணைசந்தோஷம் என்பது ராகம்சலனங்கள் அதில் இல்லைமணம் குணம் ஒன்றான முல்லை.
வாழ்க்கை என்ற இசையின் ஆதார சுருதி. அடிநாதம் பெண்கள் தாம். அந்த பெண்ணை மயங்க வைப்பது மட்டுமல்லாமல் மணக்க வைப்பதும் ஆண்களின் கடமை. பெண்களுக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக்குவது பிள்ளைகளின் கடமை.

இப்படி ஒவ்வொருவருக்கும் இன்றைய பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால், ஒவ்வொரு இன்றைய பெண்ணும் இலக்கியப் பெண் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக