வியாழன், 11 ஜனவரி, 2018

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

நமது முன்னோர்கள் காலத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிட பல இடங்களிலும் பல காரணங்களை அடிப்படையாக வைத்திருந்தார்கள். ஆனால் பொதுவாக சொல்லப்பட்டது ஒரே காரணம்தான் ஒரே கருத்துதான். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கும் மாதம்தான் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தங்களுடைய உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கவும், அறுவடை காலங்களில் நல்ல மழை பொழிந்து கதிர் அறுக்கவும், நல்ல காற்று அடித்து தானியங்களை தூற்றி எடுக்கவும், நல்ல வெயில் அடித்து எல்லா தானியங்களையும் பதமாக காயவைத்து பாதுகாத்திடவும், உதவிய இயற்கைக்கு நன்றி கூறுவதற்காகவும். விஞ்ஞானம் வளராத காலத்தில் தங்களால் முடியாத எல்லா வேலைகளுக்கும் உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறும் சிறப்பு நாள்தான் பொங்கல் திருநாள். வீட்டிற்கு கொண்டுவந்த முதல் தானியத்தை சக்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் முதலில் படைத்து நன்றிகூறும் சிறப்பான நாள்தான் நாம் கொண்டாடும் இந்த பொங்கல் திருநாள்.
இந்த பொங்கல் திருநாளை ஒரே நாட்களில் கொண்டாடாமல், மொத்தம் நான்கு நாட்களாக முதல்நாள் போகிப்பண்டிகை, இரண்டாம்நாள் இயற்கையின் பொங்கல் அதாவது சூரிய பொங்கல், மூன்றாம்நாள் மாட்டுப்பொங்கல் அதாவது கனுமாட்டுப் பொங்கல், நான்காம் நாள் உழவர் திருநாள் என்றும் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளாக பிரித்து கொண்டாடினார்கள்.
முதல்நாள் போகிப்பண்டிகை:-
"பழையன கழித்து புதியன புக" அக்காலத்தில் தமிழ் மாதத்தின் கடைசி நாளாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை கருதினர். இந்த மாதத்தில்தான் காலையில் எழுந்து வாசலில் கோலமிட்டு பஜனைகள் பாடி பல பூஜைகள் செய்து விரதம் இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் அதிகாலை முதல் பாடல்கள் ஒலிக்க தொடங்கிவிடும்." பழையன கழித்து " என்பதற்கு பொருள்படும் வகையில் வீட்டில தேவையில்லாதவற்றை நீக்கிவிட்டு தேவையானவற்றை சுத்தம் செய்தும், வீடுகளுக்கு புது வர்ணங்கள் பூசி "பூலாப்பூ, வேப்பிலை தோரணங்கள் கட்டி அழகு பார்த்தனர்.குழைந்தைகளும் பெரியோர்களும் புத்தாடைகள் அணிந்து புதுப்பிக்கப்பட்ட அனைத்திற்கும்,
புதியவற்றிற்கும் பொட்டு வைத்து, வெள்ளை நூலில் மஞ்சள் தடவி, தங்களுக்கும், வீட்டிற்கும், கால்நடைகளுக்கும் காப்பு கட்டி போகிப் பண்டிகையை வரவேற்பார்கள். வயல்களில் பூலாப்பூ, வேப்பிலை,ஆவாரம்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவார்கள். இப்படி செய்வதை நிலத்திற்கும் தங்களுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாக உணர்ந்தார்கள்.
இரண்டாம்நாள் தைப்பொங்கல்:-
அந்த காலத்தில் சிலர் இந்த நாளை வருடத்தின் முதல் நாளாகவும், சிலர் தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாளாகவும் கருதி சிறப்பாக கொண்டாடினார்கள். சில இடங்களில் வெடிகள் வெடித்து பொங்கலை வரவேற்பார்கள். அதிகாலையில் எழுத்து முற்றத்தில் கோலமிட்டு, பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்தையும் கொண்டுவந்து வைத்து அதுக்கு மஞ்சள்நூல் காப்பு கட்டுவார்கள், புதுப்பானையில் அரிசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு பிடியாக அள்ளி போடுவார்கள்.
கூடவே சக்கரையும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். நுனி வாழை இலையை படையலுக்காக விரித்து வைத்தும், கரும்பு முற்றத்தில் கட்டி வைத்தும், வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் அணிந்தும், பொங்கல் பொங்கிவரும் வரும்வரை காத்திருப்பார்கள். சரியாக சூரியன் உதிக்கும் நேரத்திற்கு பொங்கல் பொங்கிட "பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்!, பொங்கலோ பொங்கல்! எனக் கூவி தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் இயற்கைக்கு வெளிப்படுத்துவார்கள். உழவர்களுக்கு இதுதான் ஆனந்தத்தின் உச்சகட்டமான இடம் என்றே சொல்லலாம்.
மூன்றாம்நாள் கனுமாட்டுப் பொங்கல்:-
மூன்றாம் நாளான இன்று தங்களளோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கு தங்களுடைய மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவிக்கும் நாளாக கருதி மிகவும் கடமை உணர்ச்சியோடு, கால்நடைகளை குளுப்பாட்டி பொட்டு வைத்து, பல பல வர்ணங்கள் அடித்து , கொம்பு சீவி அதில் சலங்கைகள் அணிந்து அல்லது கொப்பி அணிந்து, கழுத்தில் வெண்கல மணி மாலை அணிந்தும், அழகுபடித்தி பார்ப்பார்கள். ஆடு, மாடு என இரண்டிற்கும் ஒரேநேரத்தில் பொங்கல் வைத்து படிப்பவர்களும் உண்டு, பல இடங்களில் செம்மறியாடு வைத்திருப்பவர்கள் காலையில் ஆட்டுப் பொங்கலாகவும், மாலையில் மாட்டுப் பொங்கலாகவும் தனித்தனியாக கொண்டாடுவார்கள்.
காலையில் எட்டு மணிக்கு தொடங்கி ஆடுகளை குளுப்பாட்டி பொட்டு வைத்து மாலையிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் அருகில் பொங்கல் வைத்து, பொங்கிய கஞ்சி நீரை தொட்டில்போல் செய்து அதில் ஊற்றி வைப்பார்கள். அதில் ஒரு குட்டி ஆட்டை நடக்கவைத்து வேடிக்கை பார்ப்பார்கள். வேப்பிலையின் மீது மஞ்சள் நூலையும் கட்டு சில ஆடுகளுக்கு கப்பு கட்டுவார்கள். மூன்று அல்லது ஐந்து கெடாக்களை பிடித்து அதன் கொம்பில் தேங்காயை உடைத்து படைப்பார்கள். படித்தபிறகு மஞ்சள் நீரை மாவிலையால் ஆட்டின்மேல் தெளிப்பார்கள். சிலர் ஆடுகளை பிடித்து படைத்த படையலை ஊட்டுவார்கள். இதேபோல்தான் மாலையில்
மாட்டுக்கும் பொங்கல் வைத்து படைத்து மாட்டுக்கும் ஊற்றுவார்கள். இந்த நாளை தங்களுடன் உழைத்த கால்நடைகளுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாக கருதி சந்தோஷப்படுவார்கள்.
நான்காம்நாள் உழவர் திருநாள் அல்லது கரிநாள்:-
முதல் மூன்று நாட்களை வீட்டை சுத்தம் செய்தும், மனதை சுத்தம் செய்தும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நற்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தவர்கள், பண்டிகையின் கடைசிநாளை தங்களுக்காக கொண்டாடினார்கள், முந்தையநாள் இரவு முதலே ஆட்டம்பாட்டம் எல்லாம் தொடங்கிட, மறுநாள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு சூரியன் வருவதற்குள் வீடு வந்து சேர்வார்கள். பெரியவர்கள் தங்களுடன் உழைத்த கூலி தொழிலாளிகளுக்கு பரிசுகளையும், புதிய ஆடைகளை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். சில இடங்களில் பணமாக கொடுப்பதும் வழக்கம். சிறிய குழந்தைகள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிவாதம் வாங்குவதும், பிறகு அருகில் உள்ள விளையாட்டு அரங்கிலோ
அல்லது ஆற்று மணலிலோ விளையாடுவார்கள். பெண்கள் தங்களுக்கு தெரிந்த கோ கோ , கும்மிப்பாட்டு, ஊசிநூல் கோர்ப்பது என பல விளையாட்டுகளை விளையாடி பரிசுகளை தட்டிச் செல்வார்கள். ஆண்கள் விளையாட்டுகள் எல்லாம் வீர விளையாட்டுகளாக இருக்கும், ஜல்லிக்கட்டு காளையை அடக்குதல், கபடி கபடி, மல்யுத்தம், ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மாட்டுவண்டி பந்தயம், பட்டி மன்றம், வழுக்குமரம் ஏறுதல் இப்போது
 புதியதாக கிரிகெட் போட்டிகள், என ஆங்காங்கே கலை கட்டும். இப்படிதான் நம் தமிழர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக