அறிஞர் அண்ணா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்!
இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தவர் சி.என்.அண்ணாதுரை. இதே நாள் 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடராஜன் பங்காரு அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட அண்ணா பெரியாரின் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியாக பிரிந்து வந்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.
மேடைப்பேச்சு மற்றும் எழுத்துக்களால் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் அண்ணாவைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
ஐந்தே விநாடி :
அண்ணா எந்த கூட்டத்தில் பேசினாலும் மக்கள் முழு பேச்சையும் ஆர்வத்துடன் கேட்பது வழக்கம். எவ்வளவு நேரம் கடந்தாலும் மக்களை சோர்வுறச்செய்யாது தன் பேச்சாற்றலால் கட்டிப்போடும் ஆற்றல் உண்டு அவருக்கு.
ஒரு கூட்டத்தில் இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அப்போது தான் அண்ணாவிற்கு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. மைக்கை பிடித்த அண்ணா மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை உங்களுக்கோ நித்திரை போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை என்று மட்டும் கூறி உரையை முடித்துக் கொண்டார்.
அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வத்துடன் நின்றிருந்த மக்கள் கூடம் இவரின் இந்தப் பேச்சைக் கேட்ட் வெகு நேரம் ஆரவாரத்துடன் கைத்தட்டினார்கள்.
தமிழ் மட்டுமல்ல :
அண்ணா தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் சரளமாக சொற்பொழிவாற்றும் ஆற்றல் உண்டு. அமெரிக்கவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாவின் ஆங்கில அறிவை சோதிக்க, 'Because' என்ற இணைப்புச் சொல்லை மூன்று முறை பயன்படுத்தி ஆங்கில வார்த்தை ஒன்று அமைக்குமாறு கேட்டார்களாம், அதற்கு அண்ணா 'Because is a Conjuction because, because is not a word' என்று பதிலளித்து வாயடைத்து விட்டார்.
சொத்து :
காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு மூன்றும் தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவருக்கு இருந்தன.
மாட்டார்... மாட்டார் :
தினமும் துவைத்து சுத்தப்படுத்திய வேட்டி-சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்.தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார்.
ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் `வெள்ளையான சட்டை' அணிந்தார்!``என்னை காலண்டர் பார்க்க வைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று புலம்பினார்!.
அதிக புத்தகம் :
மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக் ஷாப், சென்னை ஹிக்கின் பாதாம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தங்களையும் வாங்கிவிடுவார் அண்ணா. அன்றைக்கு ஹிக்கின்பாதாம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின் படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும் தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம்.
செல்லபிராணிகள் :
இரண்டு மயில்கள், இரண்டு மான்கள்,புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் அங்கேயே உயிரை விட்டது.
செல்லப்பெயர் :
அண்ணா தனக்கு கீழே இருந்தவர்களை எல்லாம் பட்டத்துடன் அழைப்பது பிடிக்கும். நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து அவர்களை வளர்த்து விடுவார்.
வங்கி கணக்கு :
அண்ணா முதலமைச்சராகும் முன்னர் அவருக்கென வங்கிக் கணக்குக் கூட இல்லை. அவர் முதலமைச்சரான பின்னர் அவருடைய மாத ஊதியக் காசோலை முதலியவற்றை மாற்றிப் பணம் பெறுவதற்காகவே பத்து ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வங்கிக் கணக்கு அண்ணா பெயரில் தொடங்கப்பட்டது.
அண்ணாவின் குணம் :
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது அன்றைய மரபுப்படி அவர் வீட்டிற்கு வெளியே கையில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் விரைப்பாக நின்று கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட அண்ணா, பணி நேரம் முழுவதும் இப்படி ஒருவர் நிற்பது தமக்கு வருத்தம் தருவதாகக் கூறிக் காவலர் அங்கே நிற்க வேண்டாம் எனக் கூறினார்.
ஆனால் காவல் துறையினர் அது பாதுகாப்பு ஏற்பாடு அதனை நீக்க இயலாது எனத் தெரிவித்தனர். உடனே அண்ணா, 'அப்படியானால் அவரைச் சாதாரண உடையில் ஓர் இருக்கையில் அமரச் செய்யங்கள்' என்று கூறினார்.
சிந்திக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைக்கும் பேச்சு :
அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருந்த திரு. விநாயகம். சட்டமன்றத்தில் புளி விலை ஏறி விட்டதைப் பற்றிக் காரசாரமாகப் பேசினார். அப்போது அவர், 'எங்கள் ஆட்சியில் புளி விலை குறைந்திருந்ததே அது யார் சாதனை?' என்று கேட்டார்.
உடனே அண்ணா. 'அது புளிய மரத்தின் சாதனை' என்றார். அண்ணாவின் பதில், கேள்வி கேட்ட விநாயகம் உள்ளிட்ட அனைவரையும் சிரிக்கச் செய்தது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் :
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
அதற்கு, உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார் என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை ஆனாலும் போட்டோகிராபர் சொன்னபடி ஒரு விரலைக் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பிறகு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்த போது ஏன் ஒரு விரலை காண்பித்தபடி புகைப்படம் எடுக்கச் சொன்னாய் என்று கேட்டார் அண்ணா, அதற்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறார் அண்ணா .
இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்ததினம்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக