புதன், 13 செப்டம்பர், 2017

தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.



தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.
தாலி கட்டுவது, இந்த இருவரும் கணவன் மனைவி ஆவதற்கு முன் நடக்கும் ஒரு வைதீக சடங்கு.

இதையே திருமணம் முடிந்தது, கணவன் மனைவி ஆகிவிட்டனர் என்று நினைத்தால், அது தவறு. இவர்கள் இன்னும் கணவன் மனைவி ஆகவில்லை.

இதற்கு பின் இவர்கள் இருவரும் அக்னியை வலம் வந்து, சப்தபதி என்ற சடங்கு செய்த பின்பு தான், கணவன் மனைவி ஆகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, தாலி கட்டுவது எதற்கு ?
கணவன், மனைவி ஆவதற்கு முன், கணவன் இவளிடம் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் போன்றது (Setting up Expectation).

திருமணத்தில் திருமாங்கல்யம் (தாலி) கட்டுகிறான் மணமகன். தாலி 3 காரணங்களுக்காக ஆண் பெண்ணுக்கு கட்டுகிறான்.

1. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் மற்றவர்களுக்கு காட்டும் அடையாளம். இந்த அடையாளம், இவளை தீய குணம் உள்ளவர்களிடம் இருந்து காக்கும். பலர் தாலி அணிந்த பெண் என்று பார்த்தவுடனேயே மரியாதையாய் பழகுவர்.
ஒரு ஆணின் வெளி தோற்றத்தை வைத்து எந்த பெண்ணும் ஆசைப்படுவதில்லை, அலைவதும் இல்லை.
பெண் இவன் நல்லவன், ஆறுதல் அளிப்பவன், காப்பாற்றும் திறன் உள்ளவன் என்று பழகும் போது அறிந்து கொண்டு, அதற்கு பின் அவன் பின்னே அலைவாள்.
பெண் மற்ற ஆணுடன் பழக பழக தவறான வழிக்கு போக வாய்ப்பு உள்ளது. அதனால் பெண்ணுக்கு ஒரு ஆணை பார்த்ததினால் மட்டுமே தீய எண்ணம் தோன்றாது. ஆனால், ஆண் என்றுமே நம்பத்தகுந்தவன் அல்ல.
ஆண் வண்டு போன்றவன், பெண் பூ போன்றவள் என்று சொல்வது இதனால் தான்.

ஒரு பெண்ணை பார்த்தே இவன் சபல புத்தி கொள்வான். இதனால் தான், பெண் தாலி அணிவது அவசியம். விவேகம் உள்ள ஆண், சபல புத்தி இருந்தாலும், தாலி கட்டிய ஒரு பெண்ணை நெருங்க தயங்குவான்.

தியானம், யோகம் எல்லாம் ஆணுக்கு விதிக்கப்பட்டது போல, பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. காரணம், பெண்ணுக்கு அது தேவை இல்லை.

பெண் எப்பொழுது வேறு ஆணிடம் பழகுகிறாளோ, அப்பொழுது தான், இவள் மனம் கெட வாய்ப்பு உள்ளது, ஆனால், ஒரு ஆண் பழகாமல் இருந்தாலும், பெண் உருவமே சபலத்தை கொடுத்து இவன் மனம் கெட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் அறிந்து தான், தாலி என்பது பெண்ணுக்கு மிக மிக அவசியம் என்று விதித்தனர்.

2. தாலியை அடையாளமாக கட்டும் மணமகன், பெண்ணை பார்த்து சொல்கிறான் "இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!". இப்படி சொல்லும் ஆண், "நீ சுகமாக வாழ நான் எப்பொழுதும் இருப்பேன். நான் இறந்து, உன்னை தனியாக விட்டு விடாமல் இருக்க எனக்கும் நீண்ட ஆயுள் தேவை. அதனால், நான் 100 ஆண்டுகள் உன்னோடு வாழ, நீ இறைவனிடம் வேண்டி பிரசாதமாக தரும் இந்த தாலியை அணிந்து கொள்" என்று ஆசையாக இவளை கடைசி வரை காக்கும் எண்ணத்துடன் அணிவிக்கிறான்.
பாணிக்ரஹனம் செய்யும் போது, உன் தந்தை மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லும் போது, மணப்பெண்ணுக்கு இவனிடம் அன்பு உண்டாகிறது.
மாங்கல்யம் கட்டும் போது, தனக்கு நீண்ட ஆயுள் கேட்பது, உன்னை காப்பதற்கே என்று சொல்லும் இவனிடம், மணப்பெண்ணுக்கு மேலும் அன்பு உண்டாகிறது.
இந்த அன்பு மேலும் உறுதியாக சப்தபதி என்ற சடங்கில் இருவரும் பிரிக்க முடியாத கணவன் மனைவி ஆகின்றனர்.

3. தாலி கட்டும் ஆண் வெறுமனே கட்டுவதில்லை. அவள் அணிந்து இருக்கும் தாலியில் மூன்று முடிச்சு போடுவான். தாலி எப்பொழுதும் அணிந்து இருக்கும் பெண், இந்த மூன்று முடிச்சின் காரணத்தை தினமும் ஸ்மரிக்க (ஞாபகபடுத்தக் கொள்ள) வேண்டும் என்பதற்காக தான்.

- சௌபாக்கியவதியே ! நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து இல்லற தர்மத்தைப் பேணவும்.
நீ செய்யும் செயல், பிற்காலத்தில் ஏன் இப்படி அதர்மம் செய்தோம் என்று வருந்தும் படியாக இருக்க கூடாது.
நீ செய்யும் செயல், நிகழ் காலத்தில் அதர்மம் நடப்பதற்கும் காரணம் ஆகி விட கூடாது.
நீ செய்யும் செயல், இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம், தர்மத்திற்கு எதிராகவும் இருந்து விட கூடாது.
சௌபாக்கியவதியே ! ஆதலால், நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து, இல்லற தர்மத்தைப் நீ பேணவும்.

- மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். சௌபாக்கியவதியே ! கண்ணுக்கு தெரியாத, வரப்போகும் எந்த ஒரு ஆபத்தும் உன்னை நெருங்கி விடாமல் இருக்க, அந்த ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் காக்கட்டும். அதற்காகவே மூன்று முடிச்சு. 3 தெய்வங்கள் உனக்கு துணை என்று தினமும் நினைத்து, தைரியமாக குடும்பத்தை நடத்து.

- சௌபாக்கியவதியே, உலகியல் ரீதியாக தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் நீ மதிக்க வேண்டும். அதற்காவும் மூன்று முடிச்சு.

- சௌபாக்கியவதியே ! நீ மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் கடைசி வரை காக்கவும். இந்த மூன்று முடிச்சு உனக்கு இதையும் ஞாபகப்படுத்தட்டும். எக்காலத்திலும் மனத்தாலோ, வாக்காலோ, உடலாலோ உன் புனிதத்தன்மையை கெடுத்துக் கொள்ளாமல், திருமண பந்தத்தைக் நீ காக்கவும்.

காரணம் இல்லாமல் பாணிக்ரஹனம் செய்ய வில்லை, தாலி கட்டவில்லை, சப்தபதி செய்வதில்லை.
ஹிந்துவாய் இருந்தால், பல ஆச்சர்ய விஷயங்கள் நமக்கு தெரிய வரும். மேலும், நாம் ஹிந்து குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்கு உண்டாகும்.

ஏன் எதற்கு என்ற நியாயமான கேள்விகளுக்கு பதில் சரியான பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டா லே, பல விடைகள் கிடைக்கும். ஹிந்துவாய் பிறந்ததற்கே நமக்கு பெருமிதம் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக