புதன், 20 செப்டம்பர், 2017

ஒருநாளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க குழந்தைகளுடன் இப்படி திட்டமிடலாமா?



ஒருநாளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க குழந்தைகளுடன் இப்படி திட்டமிடலாமா?

#GoodParenting
காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். அனைத்து வீடுகளில் அதற்கான திட்டமிடுவார்கள். அந்தத் திட்டமிடலில் கணவன், மனைவி, வீட்டிலுள்ள மூத்தவர்கள் இடம்பெறுவர். ஆனால், அந்தப் பட்டியலில் அநேக வீடுகளில் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. இது சரியான விதம் இல்லை. ஏனெனில், நமக்குப் பெரும் சந்தோஷத்தை அளிப்பவர்கள் குழந்தைகளே. எனவே, அவர்களையும் இணைத்துக்கொண்டு ஒருநாளுக்கான திட்டமிடலை எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம்.

காலையில் குழந்தைகளை எழுப்புவதே பெரிய வேலை என்று பல பெற்றோர்கள் கூறுவதுண்டு. அதைப் பெற்றோர் தன் வேலையாக அமைத்துகொள்ளாமல் பிள்ளைகள் தாங்களாவே எழுந்திருக்க வைக்கச் செய்யலாம். உதாரணமாக... வீட்டின் தோட்டத்தில் மூன்று விதமான செடிகள் நடுங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு செடிகளை 'உங்களுடையவை' எனப் பிள்ளைகளிடம் கூறுங்கள். சூரிய உதயத்துக்கு முன் அவரவர் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பதாக முடிவெடுங்கள். அடுத்த நாள் காலையில் உறங்கிகொண்டிருக்கும் குழந்தையிடம், 'எங்களுடைய செடிகளுக்கு நீர் ஊற்றினோம். இலைகளை அசைத்து 'தேங்க்ஸ்' சொல்லின. உன்னுடைய செடி மட்டும் பாவம் நீர் இல்லாமல் தவிக்கிறது' எனக் கூறுங்கள். அதைக்கேட்டு அவர்கள் தானாகவே எழுந்திருக்கத் தொடங்கிவிடுவர்.
செய்தித்தாள் என்பது பெரியவர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளுக்கும் அதில் படிப்பதற்குச் செய்திகள் உள்ளன. அதனால், அவர்களுக்கான செய்திகள் எதுவென நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றைச் சுற்றி வட்டமிடுங்கள் அல்லது கார், விமானம் படத்தை வரையுங்கள். பின், செய்தித்தாளை உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்தால் ஆர்வமாகப் படிப்பார்கள்.
குழந்தைகளை, காலை டிபனைச் சாப்பிட வைப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது எனக் கவலைப்படும் பெற்றோர் இருக்கின்றனர். அவர்கள், உணவைச் சமைக்கும் முன் குழந்தைகளின் விருப்பதைக் கேட்டுச் சமைக்கலாம். ஒருவேளை அவர்கள் விரும்பியதைச் சமைக்க முடியாத நிலை என்றால் (ஜங்க் ஃபுட் கேட்கும்போது) நீங்கள் செய்யும் உணவு வகையை அவர்கள் விரும்பும் வகையில் பரிமாறலாம். தோசையின் மீது வெண்டை, வெங்காயம், வெள்ளரியை நறுக்கி மனிதன் போல உருவம் செய்துகாட்டி உணவின் மீது ஆர்வத்தை ஈர்க்கலாம். அதேபோல மதிய உணவையும் லஞ்ச் பாக்ஸில் அழகாக டெக்கரேட் செய்து வைக்கும்போது, பார்த்தவுடனே சாப்பிடும் எண்ணம் உருவாகும். இதனால், பாதி உணவை மட்டும் சாப்பிடும் பழக்கம் உங்கள் குழந்தையிடமிருந்து விலகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாலை நேரத்தில் அந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவுடனே உங்களுக்கு வரும் கோபத்துக்கு விடைக்கொடுக்கலாம்.

பள்ளி வேனில் அனுப்புவதை விடவும், அலுவலகம் செல்லும்போது குழந்தைகளைப் பள்ளிவிட்டுச் செல்வது நல்ல பழக்கம். அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களில் ஏதேனும் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வது பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு இருக்கும் பயத்தைக் குறைக்கும்.
மாலையில் வெளியே செல்வது என்றால், எங்குச் செல்வது எனத் திட்டமிடும்போது குழந்தைகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். அந்த இடத்தின் அருகில் உங்களின் நண்பர் வீடு இருக்கிறது, விலை குறைவாக இருக்கும் என்பதை மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அங்கு செல்ல விரும்புகிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடிக்காத இடம் என்றால், விரைவிலேயே சோர்ந்து, வீட்டுக்கு அழைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நீங்கள் வாங்க நினைத்த அல்லது செலவிட நினைத்த நேரத்தை அங்கே செலவிட முடியாது. அதனால், வெளியே சென்று வந்த மகிழ்ச்சியும் உங்களுக்குக் கிடைக்காது.
ஒருநாளின் முடிவில் உடல் மற்றும் மனம் ரீதியான களைப்பு இருக்கவே செய்யும். அதற்காகத் தனித்தனியான ரிலாக்ஸ் முயற்சிகளில் ஈடுபடாமல், குழந்தைகளோடு சேர்ந்து ஏதேனும் விளையாடுவது, கதை சொல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். ஏனெனில் ஒரு நாள் முடிவு என்பது குழந்தைகளுக்கும்தான். பள்ளியில், நண்பர்களிடம், செல்லும் வழியில்... பல இடங்களில் சோர்ந்து போகச் செய்யும் சம்பவங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கலாம். அதிலிருந்து மீள்வதற்குப் பெற்றோர்தான் உதவ வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் சில அடிப்படை விஷயங்கள் பெரிய அளவில் மாறாது. எனவே அவர்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டு பெற்றோரும் சில தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக