திங்கள், 14 அக்டோபர், 2019

கருவுறுதலை தடுக்கும் ஜங்க் ஃபுட் : ஆய்வு முடிவு


கருவுறுதலை தடுக்கும் ஜங்க் ஃபுட் : ஆய்வு முடிவு

ஜங்க் உணவுகள் இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகி விட்டன. தற்போதைய சூழலில் காலத்துக்கு ஏற்றவாறு உணவு வகைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் அரிதாக இருந்த ஜங்க் ஃபுட் வகைகள் தற்போது மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கிறது.

நூடுல்ஸ், பர்கர், ஃபிரைட் சிக்கன், பிரெஞ்சு ப்ரைஸ் என ஜங்க் ஃபுட் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகளவு இதுபோன்ற உணவுகளையே விரும்புகின்றனர். நண்பர்களுடன் வெளியே செல்லும்போதோ, ஆன்லைனில் ஆர்டர் பண்ணும்போதோ விதவிதமான ஜங்க் ஃபுட்ஸையே வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில், அந்த உணவுகளின் பேக்கிங்கில் உள்ள ரசாயனங்களாலும் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதுபோன்ற துரித உணவுகளின் பேக்கிங்கில் உள்ள ரசாயனம் கேன்சர், கருவுறுதலில் சிக்கல் போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை உடையவை என இந்த ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன.



பேக்கிங்கில் நச்சு

அமெரிக்காவில் மாசசூசெட்ஸில் உள்ள சைலண்ட் ஸ்பிரிங் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, பர்கர் ரேப்பர்கள் மற்றும் பீட்சா பேக்கிங்கில் உபயோகிக்கப்படும் பெட்டிகளில் நச்சு ரசாயனங்கள் உள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், 10,000 க்கும் மேற்பட்டவர்களிடம் பகுப்பாய்வு செய்தனர். ஆய்வுக்கு முந்தைய 24 மணிநேரம், 7 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 12 மாதங்கள் என நான்கு வெவ்வேறு கால அளவீடுகளில் அவர்கள் சாப்பிட்டதை நினைவு கூர்ந்து, அவர்களின் உணவைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது.மேலும் அவர்களிடம் இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ரத்தத்தில் கலந்த ரசாயனம்

இந்த ஆய்வின் முடிவில் அதிக நச்சு கொண்ட பி.எஃப்.ஏ.எஸ், (Per- and polyfluoroalkyl substances - PFAS) ரசாயனம் அவர்களது ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் அதிக உணவைச் சாப்பிட்டவர்கள் உடலில் கணிசமாகக் குறைந்த அளவு PFAS இருப்பதையும், துரித உணவை அடிக்கடி ஆர்டர் செய்தவர்களின் ரத்தத்தில் அதிகளவில் PFAS இருப்பதையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இந்த ரசாயனத்தால் புற்றுநோய், மற்றும் தைராய்டு நோய் போன்றவை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக மைக்ரோவேவ் பாப்கார்ன்களை உட்கொண்டவர்களின் ரத்தத்திலும் கணிசமாக பி.எஃப்.ஏ.எஸ் இருப்பதையும் இக்குழு கண்டறிந்தது. பெரும்பாலும் பாப்கார்ன் பைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்களே இதற்குக் காரணம்.



கருவுறுதலைத் தடுக்கும்

பெண்கள் அளவுக்கு அதிகமாக ஜங்க் ஃபுட்களை எடுத்துக்கொள்வதாலும், அந்த பேக்கிங்கில் உள்ள ரசாயனத்தாலும் பெண்களின் கருத்தரிக்கும் திறனையே முற்றிலும் குறைத்துவிடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதனால் பெண்கள் இதுபோன்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெண்களுக்கு கருவுறுதலைத் தடுப்பது போலவே, ஆண்கள் அதிகளவு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆண்மையைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழு நிபுணர்கள் "உணவு பேக்கேஜிங்கிலிருந்து பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் உணவுக்கு இடம்பெயர்வது இந்த வேதிப்பொருட்களின் வெளிப்பாட்டின் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின் பொதுவான முடிவு என்னவென்றால், உங்கள் உணவுக்கும் உணவு பேக்கேஜிங்கிற்குமான இடைவெளி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அதே அளவுக்கு பி.எஃப்.ஏ. எஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றின் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் நுகர்வோர் ரசாயன பாதிப்புகள் கொண்ட உணவு பேக்கேஜிங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான உணவு பேக்கேஜிங் பொருட்களை உருவாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் உதவும்" எனக் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக