செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

பொதிகை மலை


" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் " , " தென் பொதிகை வைகை நதி " , "பொதிகை  மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா "  இவைகளெல்லாம்  பல்வேறு காலங்களில் வெளியாகிய தமிழ் சினிமா பாடல்களின் முதல் வரி என்பது உங்களுக்கே தெரிந்து இருக்கும் .இப்படி பொதிகை மலையின் பெருமையையும் அழகையும் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வரிகள் தமிழ் சினிமா பாடல்களில்  ஏராளம்.அந்த பாடல்களை எல்லாம் ரசித்த கேட்ட நாம்,கேட்காத ஒரே கேள்வி அந்த பொதிகை மலை எங்கு உள்ளது ? என்பது தான்.இன்றைய இளம் தலைமுறையினரில் பலருக்கும்  இந்த பொதிகை மலை குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.உலகின் மிக பழமையான மலைகளுள் ஒன்று தான் பொதிகை மலை இதன் மேற்கு பகுதி கேரள மாநிலத்திலும் கிழக்கு பகுதி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலும் தெற்கு பகுதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் விரிந்து காணப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளின் தென் பகுதியில் ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது தான் இந்த பொதிகை மலை.

இந்த பொதிகை மலைக்கு அகஸ்தியர் மலை என்று இன்னொரு பெயரும் உண்டு.இப்பொழுது உங்களில் ஒரு சிலருக்கு இந்த மலையை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.அகஸ்தியர் மலை என்று சொன்னால் தான் உங்களில் பலருக்கும் தெரியவருகிறது ஆனால் அதை அப்படி அழைப்பதில்  தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை அரசியல் காரணங்களுக்காகவே அந்த பெயர் திணிக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.இதில் என்ன அரசியல் இருக்கிறது என்கிறீர்களா ?  வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்நேரம் அது புரிந்திருக்கும் மீதம் உள்ளோருக்கு விளக்கி கூற இது சரியான தருணமில்லை என நினைக்கிறன்.அதில் ஒழிந்துள்ள அரசியலை நாம் வேரோரு பதிவில் விரிவாக விவாதிப்போம். சங்க தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கும் பொதிகை மலை என்ற பெயரிலேயே இந்த பதிவை தொடருவோம்.

பொதிகை மலையின் பெருமைகள் மற்றும் பொதிகை மலை குறித்த சில தகவல்கள்

பொதிகை மலை இந்தியாவின் பழமையான மலை என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது இமயமலை மற்றும் விந்திய மலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக பழமையான மலை என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும்.

இந்த பொதிகை மலையானது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பான UNESCO வால் அறிய உயிரனங்கள் வாழும் இயற்கை வளமிக்க பல்லுயிர் காடாக அறிவிக்கப்பட்டுள்ளது .உலகெங்கிலும் உள்ள 120 நாடுகளில் 669 இடங்களுக்கே UNESCO இந்த பெருமையை வழங்கியுள்ளது அவற்றுள் பொதிகை மலையும் இடப்பெற்றுள்ளது.

இரண்டியரத்திற்கும் (2000) மேலாண மருத்துவ குணமுடைய அறிய வகை மூலிகைகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுகிறது.குறிப்பாக உலகின் மிக மிக அரிதான 50 வகையான மூலிகை செடிகள் இங்கே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு அறிய வகை உயிரினங்களும்,பூச்சி வகைகளும் இங்கே அதிகம் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 1868 மீட்டர் உயரம் உடையதாகிய இந்த மலை  சங்ககால இலக்கியங்களில் பொதியம் என்றும் பொதியில் என்றும் அழைக்கப்பெற்றது.

தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி பொதிகை மலையில் தான் உற்பத்தியாகிறது.

பொதிகை மலையின் உச்சியில் தான் அகத்தியர் தமிழ் வளர்த்ததாக கதைகளில் கூறப்படுகிறது.இந்த மலையின் உச்சியில் அகத்தியருக்கு ஒரு கோவிலும் உள்ளது.

பொதிகை மலைக்கு எப்படி செல்வது ? அதன் தனித்துவம் என்ன ? அங்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு போகலாமா ? போன்ற உங்களுடைய அனைத்து கேள்விக்கான பதிலுடனும் பொதிகை மலை குறித்த மேலும் பல ருசிகரமான தகவல்களுடனும் மீண்டும் ஒரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக