சனி, 8 ஏப்ரல், 2017

90% கேன் வாட்டர் குடிப்பதற்கு உகந்தது அல்ல!’’



90% கேன் வாட்டர் குடிப்பதற்கு உகந்தது அல்ல!’’ 

‘‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40 லிட்டர் தண்ணீர் வழங்கினாலே போதுமானது என்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 13 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் 300 கிராமங்களில் தமிழ்நாடு சுகாதாரசங்கம் சார்பில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம்.
அதில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம்...’’ என வருத்தத்துடன் பேச ஆரம்பிக்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனரான டாக்டர் எஸ்.இளங்கோ. ‘‘30 ஆண்டுகளுக்கு முன் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கும் வழக்கம் நம்மிடம் கிடையாது. கேன் வாட்டர் பிசினஸும் புழக்கத்தில் இல்லை. குடிநீரை அரசே வழங்கியது.
ஆனால், தனியார் கம்பெனிகள் இதில் இறங்கிய பிறகு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் கொழிக்கும் தொழிலாக தண்ணீர் பிசினஸ் மாறிவிட்டது. கேன் வாட்டர், பாக்கெட் வாட்டர், பாட்டில் வாட்டர் என எல்லாமே தரமற்றதாக வந்து கொண்டிருக்கின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் களப்பணியாற்றி செயல்பட போதுமான பணியாளர்கள் அவர்களிடம் இல்லை...’’ என்றவர் இதில் அரசின் அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டினார்.
‘‘ஒரு தண்ணீர் நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் அளிக்க வரும் நிறுவனம், பெயருக்கு ஏதோ சோதித்துவிட்டு முத்திரையை அளித்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன்பிறகு அந்த தண்ணீர் தரத்துடன் வருகிறதா என்று கூட பரிசோதிப்பதில்லை. மெட்ரோ வாட்டரை தனியாரிடம் தாரைவார்த்து விட்டதால் அரசு நிறுவனங்கள் அதுபற்றிய அக்கறையே இல்லாமல் உள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட கேனை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. ஆனால், பழைய கேனை எடுத்துச் சென்று மீண்டும் அதில் தண்ணீரை அடைத்து விற்கிறார்கள். காலி கேனில் மறுபடியும் தண்ணீர் நிரப்புவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் அதில் கலக்கின்றன. பயன்படுத்தப்பட்ட கேனை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே புது லேபிள் ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன்படி பார்த்தால் 90% கேன் வாட்டர் குடிப்பதற்கு உகந்தது அல்ல!’’ அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் டாக்டர்
மை.பாரதிராஜா..



மினரல் வாட்டரில் மினரலே இல்லை! கேன் வாட்ட-ரில் வைரஸ்தான் உள்-ளது!

சுற்றுச்சூழல் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துவரும் பேராசிரியர் ரஹ்மான் கூறுவது என்ன?இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை கவர்ச்சியான ஒரு பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் மோசடிதான் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று தடாலடியாக ஆரம்பிக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை நான் மேலோட்டமாக சொல்லவில்லை. கேன் வாட்டர் எப்படி தயாராகிறது என்று தெரிந்தால் நான் சொல்வதன் அர்த்தம் புரிந்துவிடும். இந்த நிறுவனங்கள் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஏதேனும் ஒரு நீர் ஆதாரத்திலிருந்து மொத்தமாக எடுக்கிறார்கள். இந்தத் தண்ணீரில் படிந்திருக்கும் நுண்துகள்கள், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை அகற்ற வேண்டும் என்பதற்காக, சில வேதிப்பொருட்களைக் கலந்து சுத்திகரிக்கிறார்கள். தண்ணீரின் அமிலத்தன்மை, காரத்தன்மையை நீக்க வேண்டும் என்பதற்காகவும் சுத்திகரிக்கிறார்கள்.
இந்தத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, கண்ணாடி போல தண்ணீர் தெரியும். இப்போது மேலே சுத்தமாக இருக்கும் தண்ணீரை மட்டும் பாட்டில் / கேன் வாட்டர் தயாரிக்க எடுத்துக் கொள்கிறார்கள். சுத்திகரிப்பின் போது மாசுகள் அகற்றப்படுவது நல்ல விஷயமாக இருந்தாலும், தண்ணீரில் இயற்கையாகவே இருக்கும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் இதனுடன் வடிகட்டப்பட்டுவிடுவதால் சத்தில்லாத வெறும் தண்ணீராகவே நமக்குக் கிடைக்கிறது. மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் தண்ணீரில் மினரல்களே இல்லை என்பதும் ஒரு வினோதமான உண்மை. பெரிய நிறுவனங்கள் சுத்திகரிக்கும் வாட்டரில் தாது உப்புகள் இல்லை என்றால், சரியாக சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் நச்சுத்தன்மை மிக்க கனிமங்கள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை அதிகமாக இருக்கின்றன. இந்த சுகாதாரமற்ற தண்ணீரால் சரும நோய்கள், கால்சியம் சத்துப் பற்றாக்குறையால் எலும்புகள் பலவீன மாவது என்று பல சிக்கல்களும் கூடவே வருகின்றன. வெளிநாட்டினர் தண்ணீரை சுத்திகரிக்கப் பயன்படுத்துகிற Reverse osmosis என்கிற ‘எதிர்ச்சவ்வூடுப் பரவல்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலை வேறு, அவர்கள் அருந்தும் தண்ணீரின் அளவு வேறு, வெளியேறும் சிறுநீரின் அளவு வேறு, உடலமைப்பு வேறு போன்ற அடிப்படையான விஷயங்களை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். உண்மையில், தெருக்குழாய்களின் மூலமும் நகராட்சிகளின் மூலமும் அரசாங்கம் கொடுக்கும் குடிநீரே போதுமானதுதான். இந்தத் தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சிக் குடித்தால், அதைவிட பாதுகாப்பானது எதுவும் இல்லை. தண்ணீரில் இருக்கும் தாது உப்புகளும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரையோ, குளோரின் மூலம் சுத்திகரித்து அரசாங்கம் கொடுக்கும் தண்ணீரை யோ நாம் நம்புவது இல்லை’’ என்கிறார் வருத்தத்துடன்!

மினரல் வாட்டரால் ஏற்படும் பாதிப்புகள்?
மருத்துவர் அர்ச்சனா கூறியதாவது: உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, சாதாரணமாக நமக்குக் கிடைக்கும் தண்ணீரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்துக் காய்ச்சிக் குடித்தாலே போதுமானது. தண்ணீரைக் கொதிக்க வைப்பதோடு அந்த தண்ணீரை சரியாக மூடி வைக்க வேண்டும், மினரல் வாட்டரால் நமக்குக் கிடைக்காமல் போகும் சத்துகளை சமன்படுத்த காய்கறிகள், பழங்கள், நல்ல சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற மினரல் வாட்டரால் மட்டும் அல்ல, பொதுவாகவே சுகாதாரமற்ற தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்கள் வருகின்றன.
கேன் வாட்டர்.

சில யோசனைகள்
1. கேன் வாட்டர் தயாரிப்பாளர்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்களை விட, குடிசைத் தொழில் போல் அங்கீகாரம் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள்தான் அதிகம்.
2. நுண்கிருமிகள் (strilize) நீக்கப்பட்ட கேன்களில்தான் தண்ணீர் நிரப்பி விற்க வேண்டும். அதனால், கேன் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
3. சீல் உடைக்கப்பட்ட வாட்டர் பாட்டில் நாள்பட்டு பயன்படுத்தக்கூடாது.
4. வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தால், முடிந்த வரை வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்துச் சென்று பழகுங்கள்.
5. வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த விரும்பினால் 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் ப்யூரிஃபையரை சுத்தம் செய்வதும் அவசியம்.




ஆற்று நீரை குடத்தில் சுமந்து வந்து குடித்தது ஒரு காலம். பின்னர் கிணற்று நீரை சில்லென்று இறைத்து பானையில் வைத்து குடித்ததெல்லாம் அந்த காலம். அப்புறம் போர்வெல் தண்ணீர், கார்ப்பரேஷன் குழாயில் வந்த தண்ணீர் எல்லாவற்றையும் கடந்துவிட்டு இப்போது மிஸ்டர் நடுத்தரம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைதான் பெரும்பாலும் குடிக்கிறார்.
இம்மாதிரி கேன்களில் அடைத்து விற்கப்படும் நீரை சுத்தப்படுத்துவதற்கு பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்கவேண்டியது அவசியம். செலவுக்கு பயந்து கொண்டு அதை பலரும் செய்வதில்லை. எனவே, இதுபோன்ற நீரை அருந்துபவர்களுக்கு, இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அலாரம் அடிக்கிறார்கள் மருத்துவர்கள்.இதுவும் தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் (நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்) போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்என்கிறார்கள்.
உங்களை பயமுறுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இதற்கு தீர்வும் இருக்கிறது.சில பெரிய நிறுவனங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். நாம் வாங்கும் கேன் தண்ணீர், இந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை கேட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.கேன் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்தினால் நல்லது என்றொரு நம்பிக்கை உள்ளது. அதிலும் பிரச்சினை இருக்கிறது. நாம் அதிகபட்சமாக 100 டிகிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகளும் நீரில் உண்டு.100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்லச் செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தால் அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை.

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு எவ்வளவு செலவு?
மூடி: 25 பைசா
பாட்டில்: ரூ 1.50 முதல் ரூ. 2.50
நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா
லேபிள்: 15 பைசா முதல் 50 பைசா
அட்டைப்பெட்டி : 50 பைசா
போக்குவரத்து: 10 பைசா முதல் 25 பைசா
மற்றவை: 25 பைசா
மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை
(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)
கடைசியில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்
Source: Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்.

ஆராய்ச்சி
‘எடையை குறைக்கணுமா? தினமும் 8 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். சாப்பிடுவதற்குமுன் 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்’ இதுபோன்ற அறிவுரைகளை, நிறைய எடைக்குறைப்பு திட்டங்களில் படித்திருப்பீர்கள்... அதெல்லாம் பழைய கதை!
‘‘ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கிறதெல்லாம் கஷ்டம்ப்பா’’ என்று அலுத்துக் கொள்ளும் உங்களுக்கு, ‘‘நம் உடலுக்குத் தேவையான நீர் சத்தை
தண்ணீரின் மூலம்தான் பெறவேண்டும் என்பதில்லை. மாறாக நீர்ச்சத்து மிகுந்த சிலவகை காய், கனிகளிலிருந்தே தேவையான நீரைப் பெற முடியும்’’ என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர் டாமிசாங்.
அதிகப்படியான தாகம், திடீர் பசி எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி, நீண்டதூர ஓட்டம் மற்றும் வெயிலில் அலைந்துவிட்டு வரும் வேளைகளில் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். இந்த நேரங்களிலும் அதிகப்படியான தண்ணீர் கட்டாயம் அருந்தவேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் உங்கள் உடல், மனம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தில் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். கவனச்சிதறல், நினைவாற்றல் மற்றும் மனநிலை சேதமடைதல் பிரச்னைகளுக்கும், தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சில நேரங்களில் சிறுநீரக பிரச்னைகளுக்கும் உடலின் நீரிழப்பு காரணமாவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
இதுவே, எடைக் குறைப்பு நடவடிக்கையில் அதிக நீர் அருந்துவது முக்கியமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற
கட்டாயம் இல்லை. எடை அதிகரிப்பு, எடை இழப்பு என வரும்போது தண்ணீரின் பங்கு பற்றிய அறிவியலில் ஒரு குழப்ப நிலையே நீடிக்கிறது. நீர் குடித்தால் எடை இழப்பு ஏற்படுவதாகவும், சில ஆய்வுகள் எதிராகவும் கூறுகின்றன. எடை, உடல் செயல்பாட்டு நிலை மற்றும் வசிக்கும் இடத்தின் பருவநிலை போன்ற பல காரணிகள் உடல் நீரேற்றத்தின் அளவை நிர்ணயிக்கின்றன. அதனால், எடுத்துக் கொள்ள வேண்டிய நீரின் அளவு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது’ என்கிறார் டாமிசாங்.
‘இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பது அனைவருக்கும் எளிமையான வழி’ என்றும்
சொல்கிறார் அவர். வெள்ளரி, தர்பூசணி, சாத்துக்குடி, பூசணி, சுரைக்காய்... இவை எல்லாம் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம்... எடையை குறைக்கவும் உதவும். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக