ஞாயிறு, 19 மார்ச், 2017

உங்களின் பதவியும் சம்பளமும் உயர வேண்டுமா?



உங்களின் பதவியும் சம்பளமும் உயர வேண்டுமா?
2016-17ம் நிதியாண்டு முடிவு பெறும் நிலையில், பெரு நிறுவனங்களில் 'அப்ரைசல்" அதாவது ஊழியர்களின் 'பணிமதிப்பீடு" என்ற சொல்லானது பரவலாக உச்சரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகள், அதன் ஊழியர்களின் தனிப்பட்ட செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கென்றே தனியாகச் சில நிபந்தனைகளை வகுத்துள்ளன. இதில் சில அடிப்படை கொள்கைகள் பல வருடங்களாக மாற்றமடையாமல் உள்ளன.
உங்களின் அனைத்துச் சாதனைகளையும் ஆவணப்படுத்தவும் :
நீங்கள் செய்து முடித்த அனைத்து வேலைகளுக்கும் ஆதாரம் இருந்தால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்களுடைய மேலாளர் அண்மையில் நீங்கள் செய்த செயல்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க உதவும். நீங்கள் ஒரு வருடம் முழுவதும் செய்த வேலைகள்ஃசாதனைகளுக்கான ஆதாரத்தைக் காண்பிக்கும் பட்சத்தில் உங்களுடைய முதலாளி அதைத் தவிர்ப்பதற்கு வழியே இல்லாமல் போகும்.
சுய மதிப்பீடு :
உங்களைப் பற்றிய சுய மதிப்பீடு தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் மேலும் எவ்வளவு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்று சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் உங்களின் சம்பள உயர்வை யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு உங்களுடைய தகுதி என்ன என்றும் புரிந்து கொள்ள உதவும்.
மேலாளரிடம் உள்ள உறவு :
உங்கள் முதலாளியுடன் உங்களுக்குச் சரியான உறவு இல்லையென்றால் உங்களுடைய விடாமுயற்சியும் கடின உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர் போலப் போய்விடும். ஏனென்றால் உங்கள் சம்பள உயர்வு உங்களின் மேலாளரின் கையில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
குழுவோடு இணைந்து பணியாற்றுதல் :
உங்களுடன் பணிபுரியும் சகாக்களுடன் இணைந்து பணிபுரிதல் மற்றும் அவர்களின் உதவியைப் பெறுதல், அவர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற தனிப்பண்புகள் சராசரி ஊதிய உயர்வுக்கும், நல்ல ஊதிய உயர்வுக்கும் இடையே முக்கிய வேறுபாட்டைக் கொண்டுவரும்.
உங்கள் எதிர்கால இலக்குகளை அமைத்தல் :
வரும் ஆண்டுக்கான உங்களின் எதிர்கால இலக்குகளை அமைத்து கொள்ள உங்களின் மேலாளரிடம் இது பற்றி விவரங்களை விவாதிக்கவும். இது நீங்கள் சார்ந்துள்ள நிறுவனத்தின் மேல் நீங்கள் வைத்துள்ள விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பை தெரியப்படுத்தும் நல்ல அறிகுறியாக இருப்பதால், உங்களுக்கு ஒரு நல்ல பணிமதிப்பீடும் அதிகச் சம்பள உயர்வையும் பெற்று தரும்.
புதியனவற்றை முயற்சி செய்து உங்கள் திறமைகளை மெருகூட்டுங்கள் :
உங்களுடைய வேலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் போன்றவற்றைத் தெரிந்து உங்கள் திறமைகளை அதில் வெளிப்படுத்தினால் மட்டுமே, மற்றவர்களை விட உங்கள் நிலைமை ஒரு படி முன் செல்லும். அப்போது தான் உங்கள் நிறுவனம் உங்களை வேலையில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
பிரச்சனைகளின் தீர்வாளராக இருங்கள் :
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் அதில் இருந்து வெளியே வந்து பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் போது மற்றவர்களை விடத் தனித்துத் தெரிவீர்கள். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்கள் எப்போதும் முதலாளிகளின் குட்புக்கில் இடம் பிடிப்பவர்களாவும், அவர்களுக்குத் தனி மரியாதையும் கிடைக்கும் முக்கியமாகச் சம்பள உயர்வு நேரத்தில் கவனிக்கப்படுவார்கள்.
அர்ப்பணிப்புள்ள ஊழியராகச் செயல்படுங்கள் :
வேலையில் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், நேரம் தவறாவதவராகவும் இருக்கவும் முயற்சி எடுங்கள். தங்களுடைய பணியிடத்திற்கு எப்போதும் சில மணித்துளிகள் முன்னதாகவே சென்று விடவும். நேரம் தவறாமை என்பது நீங்கள் ஒழுக்கமுடையவர் என்பதை மாத்திரம் அல்ல அது உங்களின் நேர்மையையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக