வியாழன், 16 பிப்ரவரி, 2017

எல்லாமே தற்செயல்தான்;

எல்லாமே தற்செயல்தான்;

ஸ்வாதியின் ஒரே நண்பனாக பிலால் மாலிக் இருந்ததும்,அது காவல்துறைக்கு முன்பாகவே ஒய். ஜி. மகேந்திரனுக்குத் தெரிந்ததும்,

ராம்குமார் இருக்கும் சிறையில் மின்சாரக் கம்பி இருந்ததும்,

ஜெயலலிதா அப்பல்லோவில் இட்லி சாப்பிட்டதை சி.ஆர். சரஸ்வதி பார்த்ததும்,

ஆட்சி மாற்றம் வரப்போகிற இரகசியம் ஆறு மாசத்துக்கு முன்பாகவே பொன்னார்,தமிழிசை,ராசாவுக்கு தேவகணங்கள் மூலமாக தெரிய வந்ததும்,

இறுதிச்சடங்கு செய்த அய்யர்  ஏற்கனவே அப்பல்லோவுக்கு வந்து வயித்து வலி மாத்திரைவாங்கியதும்,

அப்பல்லோ நர்சுகளை தேநீர் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி வந்ததும்,

ஒரு மணி நேரத்தில் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக திடீரென்று ஆளுநருக்கு அருள் வந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும்,

தமிழக சட்டமன்றத்திலேயே ஜல்லிக்கட்டுக்கு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு உடனே   ஒப்புதல் வழங்க முடியும் என்கிற ஞானோதயம்  மத்திய அரசுக்கு திடீரென வருவதும்,

ஒசாமா பின்லேடன் இன்னும் சாகாமல் மெரினாவில் தலைமறைவாக ஒளிந்து வாழுகிற விஷயம் காவல்துறைக்கே தெரியாமல் முதலமைச்சருக்குத் தெரிய வருவதும் ,

தான் இருக்கிற போது நடத்த அனுமதிக்காத ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கான அனுமதிக் கடிதத்தை  ஜெயலலிதா பன்னீரின் கனவில் வந்து தந்ததும்,

காவல்துறையின் தடிகள் அவர்களுக்குத் தெரியாமலே மாணவர்களின் உடலை முத்தமிட்டதும்,

சலவைக்குப் போட்டிருந்த காக்கிக் சீருடைகளை மொத்தமாகத் திருடிப் போட்டுக் கொண்டு  கலவரக்காரர்கள் தீ வைத்ததும்,

சசிகலா பதவியேற்க ஆசைப்பட்ட அதே நாளில் தீர்ப்பு வெளிவரப் போவதாக செய்தி கசிவதும்,

பதவி போன பிறகே அம்மாவின் ஆன்மா பன்னீரை அழைத்ததும்,

ஒரு முதலமைச்சர் நாற்பது நிமிடங்கள் பொது இடத்தில் உட்கார்ந்து  கண்ணை மூடினால் ஒட்டுமொத்த மீடியாக்களும் வரும் என்பதை அறியாத அளவிற்குக் குழந்தையாய் இருந்ததும்,

ஒரே நாளில் தேவதைகள் சாத்தானாவதும்

நாற்பது நிமிடத்தில் ஒரு மிக்சர் தேவதூதனாக வழிமொழியப்படுவதும்,

திடீரென்று  ஆளுநரின் சொந்தக்காரர்கள் அவர் செய்து வைக்க வேண்டிய பதவிப் பிரமாணத்தை  தள்ளி வைக்கிற அளவிற்கு தொடர்ந்து விசேஷங்கள் வைப்பதும்,

நடராசனுக்கு நெஞ்சு வலிக்கிற அதே நாளில் டாக்டர்  பீலே அப்பலோ வருவதும்,

ஜெயலலிதாவை முதல் குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு அதிமுகவினரே இனிப்பு தருவதும்,

சசிகலா சிறைக்குப் போகிற அதே நாளில் குட்டியம்மா தீபாவின் தூக்கம் கலைவதும்,

நிச்சயமாக தற்செயல்தான்.இதற்குப் பின்னால் யாருமில்லை.

அதுபோல், ஒரே நேரத்தில் பன்னீருக்கும்,தீபாவுக்கும் ஜெயலலிதாவின் சமாதிக்குப் போக வேண்டும் என்கிற உணர்வு தோன்றி இருவரும்   சரியாக 9.30 க்கு மெரீனாவில் சந்தித்துக் கொள்வதும் கூட தற்செயல்தான்.

எவ்வளவோ நம்பிட்டோம்.இதை  நம்ப மாட்டோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக