வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய முழு விவரம்..

நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய முழு விவரம்..

➠ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடுமையான அரசியல் குழப்பங்களும், தொடர் இழுபறிகளும் ஏற்பட்டது.

➠ பின்னர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழகத்தின் 21-ஆவது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார். இதன்மூலம், திராவிட கட்சிகளில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

➠ கடந்த 11 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணப்பட்டு இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 15 நாள்களுக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டதாக ஆளுநரின் செயலர் ரமே;சந்த் மீனா தெரிவித்தார்.

➠ நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல்.ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

➠ அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

➠ இதையடுத்து, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார். இது ரகசிய வாக்கெடுப்பாக இருக்குமா அல்லது வெளிப்படையானதாக இருக்குமா என்பதை சபாநாயகரே முடிவு செய்வார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்:

➠ ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் எல்லா நேரங்களிலும் அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதாகும்.

➠ ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி, சட்டசபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதினால், அதன் அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.

➠ ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். சுயேட்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றால், கொறடா உத்தரவுப்படி வாக்களிக்க வேண்டும்.

➠ அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், சட்டசபையின் கதவுகள் மூடப்படும். சட்டசபை செயலாளர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நடைமுறைகளை தொடங்குவார். 234 உறுப்பினர்களும் ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர். முதலில் ஆதரவு, பிறகு எதிர்ப்பு பிறகு நடுநிலை வகிப்போரை எழுந்து நிற்க சபாநாயகர் உத்தரவிடுவார். எழுந்து நின்று தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோர் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்.

➠ முடிவை தீர்மானிக்க கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும்பட்சத்தில் சபாநாயகர் வாக்களிக்கலாம். ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.

➠ சபாநாயகர்தான் முடிவை அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக