ஞாயிறு, 28 ஜூலை, 2019

உலக நண்பர்கள் தினம்..! உறவை விட பெரிதாக மதிக்கப்படும் நட்பு..!


உலக நண்பர்கள் தினம்..! உறவை விட பெரிதாக மதிக்கப்படும் நட்பு..!

மனிதர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. அத்தகைய நண்பர்களின் அன்பை சொல்லும் தினம் இன்று... ரத்த சொந்தம் இல்லாத, நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைப்பது ஏன்?.

நீரியின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு சற்றும் மிகையானது அல்ல "நட்பின்றி அமையாது மகிழ்ச்சி" எனும் புதுமொழி. அதனால் தான் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என வள்ளுவ பெருந்தகையும் நட்புக்கு தனி அதிகாரம் அமைத்து கொண்டாடியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1935ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உறவுகளை விட சிறந்தது நட்பு என்பதை மெய்பிக்க பல்வேறு சான்றுகள் உள்ளன. கடவுளுக்கும் எளியோனுக்கும் இடையேயான நட்பாக கண்ணன் - குசேலன், சங்க காலத்தை வியப்பில் ஆழ்த்திய கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், தேரோட்டி மகனை அரசனாக்கி அழகு பார்த்த துரியோதனன் - கர்ணன் நட்பு, அரசியலில் கருணாநிதி - எம்.ஜி.ஆர், சினிமாவில் ரஜினி - கமல் என அனைத்து பரிமாணங்களிலும் நட்பிற்கான உதாரணங்கள் குவிந்து கிடக்கின்றன்.

இந்த உலகமே நட்பு எனும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது. பெற்றோர், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில ரகசியங்கள் தோழன் அல்லது தோழியிடம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, சுயநலம் கருதாது உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை என்றே கூறலாம். அப்படியான நட்பை திருவள்ளுவரும் தனி அதிகாரம் போட்டு கொண்டாடியுள்ளார்.

வீட்டுக்கு, நாட்டுக்கு, ஊருக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது. அனைவரது வாழ்விலும் ஸ்கூல் பிரண்ட், காலேஜ் பிரண்ட், ஆபீஸ் பிரண்ட், பஸ் பிரண்ட், டிரெயின் பிரண்ட் (Train) என நண்பர்களின்  பட்டியல் முடிவுறாமல் நீள்கிறது. நம் சந்தோஷங்களை பல மடங்காக அதிகரிக்கவும், துன்பங்களை தூர விலக்கவும் நமக்கு எப்போதும் ஒரு நட்பு தேவைப்படுகிறது.

90-களில் க்ரீட்டிங் கார்டு, ஃப்ரண்ட் ஷிப் பேண்ட் என திருவிழா கோலமாக கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினம், இன்றைய தொழில் நுட்பத்தால் வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்வது, ஃபேஸ்புக்கில் டேக் செய்து விடுவது, இன்ஸ்டாவில் போட்டோ போடுவது என வேறு பரிமாணத்திற்கு மாறியுள்ளது. மாற்றங்கள் பல நேர்ந்தாலும் நட்பை அழிக்க யாராலும் முடியாது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் நன்றாக உணர்ந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக