ஞாயிறு, 8 அக்டோபர், 2017

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை எப்படி போக்குவது...



வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை எப்படி போக்குவது...

வெள்ளரிக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு காய்கறி வகையை சேர்ப்பதாகும். வெயில் காலங்களில் இதனை அதிகம் உட்கொள்ளும்போது உடல் நீர் வறட்சி இல்லாமல் இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதனை அப்படியே சாப்பிடலாம். மற்றபடி, பச்சடி அல்லது சாலட் செய்து சாப்பிடலாம். பல்வேறு மினரல்களும், வைட்டமின்கள் , எலெக்ட்ரோலைட்டும் அடங்கப்பெற்றது இந்த வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயின் விதையிலும் சதையிலும், சிலிக்கான் மற்றும் க்ளோரோபில் அதிகம் உள்ளது. கொலஸ்டரோலை குறைக்கும் ஸ்டெரால் இதில் அதிகம் உள்ளது.
சில வெள்ளரிக்காய் கசப்புத்தன்மையுடன் இருக்கும். இதை வாங்கும்போது நம்மால் கணிக்க முடியாது. வெள்ளரிக்காயை வெட்டி ஒரு சிறிய துண்டை வாயில் வைத்தவுடன் அந்த கசப்புத்தன்மை இருந்தால், யாருமே வெள்ளரிக்காயை தொட மாட்டார்கள்.
இந்த கசப்புத்தன்மை எப்படி வருகிறது? இயல்பாக நாக்கிற்கு இதமான சுவையில் இருக்கும் வெள்ளரிக்காய் சில நேரங்களில் கசப்பதற்கு என்ன காரணம்.?
வெள்ளரிக்காய், சுரைக்காய் இனத்தை சேர்ந்த தாவரமாகும். பொதுவாக இந்த வகை தாவரங்கள் குர்குபிடாஸின் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த ரசாயன உற்பத்திதான் அதன் கசப்பு தன்மைக்கு காரணம். இத்தகைய குர்குபிடாசினை அதிகம் உட்கொள்ளும்போது , உடல் பலவீனமாகிறது. அதன் கசப்புத்தன்மைக்கு சுற்று சூழலும் ஒரு காரணம். சரியாக நீர்ப்பாசனம் இல்லாத இடங்களில் விளையும் வெள்ளரிக்காய், அதிக வெப்பமான இடத்தில் வளரும் வெள்ளரிக்காய், தேவையான அளவு உரம் போடாமல் வளரும் வெள்ளரிக்காய் போன்றவற்றில் கசப்புத்தன்மை அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. தட்ப வெப்ப மாற்றங்களாலும் இதன் கசப்புத்தன்மை அதிகரிக்கலாம்.
சரி, வாங்கிய வெள்ளரிக்காயில் இருக்கும் கசப்புத்தன்மையை சரி செய்ய முடியுமா? முயன்றால் முடியாதது இல்லை. முயற்சித்து பார்க்கலாமா?
முனைகளை உரசுங்கள்:
பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு முறை தான் இது. வெள்ளரிக்காயின் காம்பு இருக்கும் முனையில் சிறியதாக அறிந்து கொள்ளுங்கள். அறிந்து எடுத்த சின்ன பகுதியை கொண்டு வெள்ளரிக்காயின் முனையை நன்றாக சூழல் வடிவில் தேயுங்கள்.இப்படி செய்யும்போது பால் போன்ற ஒரு திரவம் அல்லது நுரை வெளியில் வரலாம். இது தான் அந்த இரசாயனம் குர்குபிடாஸின். மற்ற முனையிலும் இதையே செய்யுங்கள். பிறகு வெள்ளரிக்காயை முழுவதும் கழுவிவிட்டு உண்ணுங்கள். உங்களால் நிச்சயம் வித்தியாசத்தை உணர முடியும்.
உப்பு சேர்த்து பாருங்கள்:
வெள்ளரிக்காயை நீள வாக்கில் வெட்டி கொள்ளுங்கள். வெட்டிய இரண்டு பாகத்திலும் சிறிது உப்பை தூவுங்கள். பிறகு இரண்டு பாகத்தையும் ஒன்றோடு ஒன்று தேயுங்கள். இப்படி தேய்க்கும்போது நுரை போன்ற ஒன்று வெளிவரும். இந்த முறையை 2 அல்லது 3 முறை செய்து விட்டு பின்பு நான்றாக கழுவி பின் சாப்பிட்டு பாருங்கள். ஓரளவு கசப்புத்தன்மை நீங்கி இருக்கும்.
போர்க்(Fork) பயன்படுத்துங்கள்:
இது மிகவும் எளிமையான முறை. வெள்ளரிக்காயின் இரண்டு முனைகளையும் அறிந்து விடுங்கள். தோலை நீக்கி விடுங்கள். துண்டுகளாக அறிவதற்கு முன் ஒரு ஃபோர்க்கை எடுங்கள். அதன் ஊசி போன்ற முன் பகுதியை வெள்ளரிக்காயின் நீளவாக்கில் செலுத்துங்கள். முழுவதுமாக அந்த பகுதி வெள்ளரிக்காயில் மறைக்கப்படுவதுபோல் வையுங்கள். இப்போது அந்த வெள்ளை நுரை போன்ற திரவம் வெளியில் வரும். இதனை 2-3 முறை செய்து பாருங்கள். நன்றாக கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள்.
மேலே கூறிய முறைகளால் வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை முற்றிலும் அகற்ற முடியாது. ஆனால் நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை உணர முடியும். கசப்பாக இருப்பதால், சாப்பிட முடியாது என்று நினைந்து தூக்கி எறிவதை விட, இதனை முயற்சித்து ஓரளவு சாப்பிட முடிந்தால் அது நம் உடலையும் பாதுகாக்கும். பண விரயத்தையும் தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக