வியாழன், 12 அக்டோபர், 2017

குழந்தைகளும் மொபைல் போனும் - தேவை அதிக கவனம்!



குழந்தைகளும் மொபைல் போனும் - தேவை அதிக கவனம்!

மொபைலில் எந்தவிதமான பயன்பாடுகள் இருக்கின்றன என்பதை பெரியவர்களைவிட, குழந்தைகளே தெளிவாகக் கூறுவர். அந்தளவுக்கு மொபைலின் தாக்கம் அவர்களிடம் சென்றடைந்திருக்கிறது. மொபைலைப் பயன்படுத்தும் குழந்தைகளில் இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒரு பிரிவினர், மொபைலில் உள்ள விளையாட்டுகளை ஆடுபவர்கள்.மற்றொரு பிரிவினர், இணையதளங்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள்.

“ஒருமுறை, வீட்டுக்கு உறவினர் வந்திருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது என் மகன் குறுக்கே வந்து, ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தான். ‘பேசாமல் இரு’ என்றாலும் கேட்கவில்லை. அதனால் என் மொபைலைக் கொடுத்து, ‘கேம் விளையாடு’ என்றேன். அன்றைக்கு ஆரம்பித்தது... இன்று ஆபீஸ் விட்டு எப்போது நான் வருவேன் எனக் காத்திருந்து, மொபைலைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறான். இரவு தூங்கும்வரை வேறு எந்தப்பக்கமும் அவன் கவனம் திரும்புவதில்லை” என்கிறார் கோவையைச் சேர்ந்த சுரேஷ். அவரின் மகன் இரண்டாம் வகுப்புதான் படிக்கிறான்.


சென்னையைச் சேர்ந்த நிர்மலாவுக்கு இன்னொரு பயம், “என் மகள் டென்த் படிக்கிறா. ஸ்கூல் விட்டு வந்ததும் என் மொபைலை வாங்கி, அவ ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுவா. அப்படி அவ பேச ஆரம்பிச்ச அடுத்த மாதத்தின் செல்போன் பில் எக்கச்சக்கமா வந்தது. வெறும் கால்ஸுக்கான கட்டணம் மட்டுமில்ல... அவ இன்டர்நெட் பயன்படுத்தினதே அதுக்குக் காரணம்னு தெரிஞ்சு விசாரிச்சப்போ, ‘பாடத்துக்குத் தொடர்பான சில வெப்சைட்களைப் பார்த்தேன்’னு சொன்னா. அவகிட்ட கடுமையா நடந்துக்கவும் முடியல; மொபைலைக் கொடுக்காமலும் இருக்க முடியல’’ என்கிறார்.

அநேகமாக, எல்லோர் வீடுகளிலும் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவது குறித்து இப்படியாக ஏதாவது ஒரு புகார் இருக்கலாம். அந்தளவுக்கு மொபைலின் தாக்கம் சிறுவர்களிடையே புகுந்து விட்டது. பல பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம், வீட்டுப் பாடம் உள்ளிட்டவற்றை பெற்றோர்களின் வாட்ஸ்அப்களில் அனுப்புவது நடக்கிறது. பெரிய வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகள் தங்கள் பாடம் தொடர்பாக இணையத்தில் பார்க்க வேண்டும் என்று மொபைல் கேட்கிறார்கள். டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என நேரம் கழித்து வீட்டுக்கு வரும் சூழலில் இருக்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு மொபைல் வாங்கித் தருகிறார்கள் பெற்றோர்கள். இவையெல்லாம் பிள்ளைகளிடம் எந்த விதமான மாற்றங்களை உருவாக்குகின்றன, அவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது என கடந்த 15 ஆண்டுகளாகச் சிறுவர்களுக்குத் தன்னம் பிக்கையை வளர்த்தெடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்திவரும், ‘மைண்ட் ஃப்ரெஷ்’ கீர்த்தன்யாவிடம் கேட்டோம்.


கைகள் நடுங்க ஆரம்பிக்கும் அடிக்‌ஷன் :

`` சில குழந்தைகளுக்கு  வீடியோ கேம் விளையாட முடியாமல் போனால் குறிப்பிட்ட நேரத்துக்கு  மேல் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன.  கண்களை ஓர் இடத்தில் நிலைநிறுத்த முடிவதில்லை. மொபைல் பயன்படுத்த முடியாத சூழலில் ஒருவருக்கு வரும் இந்தப் பதற்றத்தை Nomophobia (No Mobile Phobia) என்று பெயரிட்டு அழைக்கிறது மனநல மருத்துவ உலகம். இன்றைய தலைமுறையினர் இந்தப் பிரச்னையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, டீன் வயதுகளில் உருவாகும் பழக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவதற்கே வாய்ப்பிருக்கிறது. அது நல்ல பழக்கம் எனில், அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். அதுவே தீய பழக்கம் எனில் அந்தப் பழக்கமே நிறைய சிக்கல்களை உருவாக்கிவிடும்.


கண்டிப்பும் கண்காணிப்பும் :

குழந்தைகளோடு தொடர்பில் இருப்பதற்கு மிக அவசியம் எனில்,  அவர்களுக்கு தனியே ஒரு மொபைல் வாங்கித்தருவதைத் தவிர வேறு வழிகள் என்ன இருக்கின்றன என ஆராயுங்கள். அப்படி ஏதுமில்லை, மொபைல் வாங்கித்தருவதுதான் ஒரேவழி என முடிவெடுத்தால், இணையதளம் உள்ளிட்ட சேவை களைப் பயன்படுத்த முடியாத எளிய வகை மொபைல் போன் வாங்கித் தாருங்கள்.

மொபைல் போனை வாங்கித் தந்தாலும் பயன்படுத்திய பிறகு, வீட்டில் பொதுவான ஓரிடத்தில் வைத்துவிடச் சொல்லுங்கள். அதற்குப் பெற்றோரே தன் மொபைலை அங்கு வைத்து வழிகாட்டலாம். இந்த விஷயத்தில் அன்பைப் போலவே கண்டிப்பும் ஓரளவும் தேவை” என்கிறார் கீர்த்தன்யா.

மொபைல் உலகத்தோடு அதிக நேரம் குழந்தைகள் செலவழிப்பதால் அவர்களின் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கான தீர்வு குறித்துப் பேசுகிறார் மருத்துவர் நா.எழிலன்,


ரத்த அழுத்தம் ஏற்படலாம் :

“பிள்ளைகள் மொபைல் போனில் மூழ்கிக்கிடப்பதற்குப் பெற்றோர்களே முழு காரணம். ஒரு பொம்மையின் இடத்தில் மொபைலை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், இந்தப் பொம்மை அவர்களுடன் உரையாடுகிறது. அதில் வீடியோ பார்ப்பது, கேம் டவுன்லோடு செய்வது என அதிகமான நேரம் செலவழிக்கிறார்கள். இதனால் வெளியில் சென்று விளையாடும் பழக்கமே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் மாலை வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி கிடைப்பதில்லை.
மொபைல் போன் ஸ்கிரீனை அருகில் வைத்தே அதிக நேரம் பார்ப்பதால் தூரத்தில் உள்ளவற்றைப் பார்க்கும் திறன் குறையும். புத்தகத்தில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் ஏற்படும். பார்வையில் சிக்கல் வரும்போது தலைவலியும் ஏற்படும். ரெஸ்ட்லெஸ்ஸாக தன்னை உணர்வர். ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், உடல் பருமனாகிவிடும். கூடவே ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் பழக்கத்தால் மிகச்சிறிய வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை ஏற்படும் அபாயமும் அதிகம்.  அந்த வயதுக்குரிய சுரப்பிகள் சுரப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள் :

முதலில் குழந்தைகளோடு பெற்றோர் விளையாட வேண்டும். மைதானங்களுக்குச் சென்று உடல் களைத்துப்போகும் அளவுக்கு விளையாடுவதை வாரம் ஒருமுறையாவது ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மற்ற நாள்களில் செஸ், கேரம் போன்ற வீட்டுக்குள் விளையாட்டுகளை ஆடலாம். இந்தப் பழக்கமே குழந்தைகளின் பெரும் நேரத்தை எடுத்துகொள்ளும். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அருகிலிருத்தலுமே குழந்தைகளை இத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்க உதவும்’’ என்றார் நிறைவாக!


இணைய உலகில் குழந்தைகளைக் காக்க சில டெக் டிப்ஸ்!

* குழந்தைகளுக்கு எனத் தனி Log in வைத்துக்கொள்ளுங்கள். அதன் பாஸ்வேர்டு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

* குழந்தைகள் மொபைலில் கேம்ஸ் விளையாடுகிறார்கள் என்றால், அதற்கென தனி மொபைல் வைத்துக்கொள்ளுங்கள். அந்த மொபைலுக்கெனக் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரி உங்கள் முகவரியாக இருக்கட்டும்.

* யூடியூப் போன்ற வீடியோ தளங்களில் வயதுக்கேற்ப வீடியோக்களை மட்டும் பார்க்கும் வசதிகள் உண்டு. குழந்தைகள் பயன்படுத்தும் கணினி / மொபைல்களில் இந்த செட்டிங்கைக் கவனித்து மாற்றி வையுங்கள்.

* ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பலவற்றில் யூடியூப்பில் இருப்பது போன்ற 18+ ஆப்ஷன் கிடையாது. எனவே, குழந்தைகளின் friends list-ஐ தினம் தினம் செக் செய்யுங்கள்.

* நல்ல ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். அதுவே தேவையற்ற தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க உதவும்

* கூகுள் போன்ற சர்ச் தளங்களிலும் safe search ஆப்ஷன் உண்டு. இதன்மூலம் குழந்தைகளுக்கு உகந்த தளங்களை மட்டுமே அவர்களுக்கு ரிசல்ட்டில் காட்டும்.

* Parent control-க்கு என நிறைய ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கின்றன. அதையும் மொபைலில் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகள் என்ன செய்தாலும், அதை எளிதில் கண்காணிக்க முடியும்.

* சாட் வசதிகளைக் குழந்தைகள் பயன்படுத்தினால், அதை அன்றாடம் கவனியுங்கள். அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், யார் அவர்களுக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கத் தவறாதீர்கள்.

* குழந்தைகள் கேம்ஸ் விளையாடும்போது சத்தம் கேட்கும். அதைத் தவிர்க்க நினைத்து ஹெட்போனைப் பயன்படுத்த சொல்லாதீர்கள். சத்தம் மூலமும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உங்களால் கண்காணிக்க முடியும். அதோடு, ஹெட்போனைக் குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதும் நல்லதல்ல.
               நன்றி...
- அவள் விகடன் (12/10/2017)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக