பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் உணவுகள்... யாருக்கு எது நல்லது?...
சமையல், அது ஒரு வேலை... இல்லையில்லை அது ஒரு கலை என்கிறார் ஒருவர். சமையல் என்பது சயின்ஸ் என்று சொல்கிறார் ஒருவர். எது எப்படியோ சமையலில் பலவகை உண்டு. ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக் கொழுப்பும் சேர்ந்துவிடும். இதன் அடிப்படையில் நாம் உண்ணும் உணவு பாசிட்டிவ், நெகட்டிவ், நியூட்ரல் என வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உடலுக்கு நல்லது, எவற்றைத் தவிர்க்கவேண்டும் எனப் பார்ப்போமா?
*🔖பாசிட்டிவ் உணவு முறை*♨
பெரும்பாலான சத்துகள் அப்படியே கிடைப்பதை பாசிட்டிவ் உணவுகள் என்கிறோம். உதாரணமாக பழங்கள், சமைக்காத காய்கறிகளைச் சாப்பிடுவது, பச்சடி, பழச்சாறு, இளநீர், தயிர், நீர்மோர், இட்லி, இடியாப்பம், நீர்க்கொழுக்கட்டை, பொங்கல், எண்ணெய் இல்லாத தோசை, சப்பாத்தி போன்றவற்றைச் சொல்லலாம்.
*🔖நெகட்டிவ் உணவு முறை*♨
சத்துகள் நீங்கி கெட்டக் கொழுப்பும் சேர்ந்தால் அது நெகட்டிவ் உணவுகளாகும். உதாரணத்துக்கு, டீப் ஃப்ரை உணவுகள், சிப்ஸ், ஃபாஸ்ட்ஃபுட், பொரித்த மீன், தந்தூரி, ஃபிரெஞ்ச்ஃப்ரைஸ், பீட்சா போன்ற உணவுகளைச் சொல்லலாம்.
*🔖நியூட்ரல் உணவு முறை*♨
சத்துகளும் கொழுப்பும் அளவுடன் இருந்தால் அவற்றை நியூட்ரல் உணவுகள் என்று சொல்லலாம். எண்ணெயும் கொழுப்பும் உடலுக்குத் தேவைதான். ஆனால், நல்லதாக இருக்க வேண்டும். இப்படி எண்ணெயில் பொரித்த நல்ல உணவுகளை அளவுடன் சாப்பிடலாம். செக்கில் ஆட்டிய எண்ணெயில் வடை, பஜ்ஜி போன்றவற்றைப் பொரித்துச் சாப்பிடுவது நல்லது. செக்கில் ஆட்டிய எண்ணெயில் பொரிப்பதால் எந்தவிதக் கேடும் விளையாது. ஏனெனில் இது கொதிநிலைக்கு உட்படுத்தப்பட்ட எண்ணெய் கிடையாது. இதிலும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குச் சேர்ப்பது நல்லதல்ல.
* பெரும்பாலான நோய்களுக்குக் காரணமே நெகட்டிவ் உணவு முறைகளே. எனவே, நோய்களை விரட்ட பாசிட்டிவ் உணவுமுறைக்கு மாறுவது நல்லது.
* ஆரோக்கியமான உடல்நலத்துக்கு 70 சதவிகிதம் பாசிட்டிவ் உணவுமுறைகளைச் சாப்பிடவேண்டும். 30 சதவிகிதம் நியூட்ரல் உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும்.
* டேபிள் சால்ட் தவிர்த்து இந்துப்பு, கல்லுப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
* காய்கறிகளைக் கழுவிய பிறகே நறுக்குங்கள். மாறாக, நறுக்கிய பிறகு கழுவினால் காய்கறிகளில் உள்ள சத்துகள் நீங்கிவிடும்.
* அவித்தல், வேகவைத்தல் முறையில் பயன்படுத்தும் காய்கறிகளைப் பெரிய அளவில் நறுக்கி சமைத்தால், 80 சதவிகித சத்துகள் கிடைக்கும்.
* வறுத்தலும் பொரித்தலும் நம்மை நோய்க்கு கொண்டு செல்லக்கூடிய சமையல் முறைகளாகும். ஆகவே, இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடக் கூடாது.
* சமைக்காத உணவுகளில் என்சைம்கள் நிறைந்துள்ளதால், அவை இன்சுலின் சுரக்க உதவும். இதனால் சமைக்காத உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்பவருக்குச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சமைக்காத உணவுகள் என்றால் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய பயறுகளைச் சொல்லலாம்.
* ரீஃபைண்டு எண்ணெய்களின் பயன்பாட்டை அறவே தவிர்த்து, செக்கு எண்ணெயை பயன்படுத்தலாம்.
* அடிக்கடி பச்சடி செய்து சாப்பிடுங்கள். அதற்குக் காய்கறிகளை சிறியதாக நறுக்கி பயன்படுத்துவது நல்லது.
* சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து சமைக்க வேண்டும் என்பதற்காக முதல்நாளே நறுக்கி வைத்துவிட்டு மறுநாள் அதைப் பயன்படுத்துவார்கள். இது தவறு. காய்கறிகளை நறுக்கியதும் சமைக்க வேண்டும் அல்லது உண்ண வேண்டும்.
* பழவகைகளில் எவற்றையெல்லாம் தோலை நீக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை அப்படியே சாப்பிடுங்கள்.
* நோயால் அவதிப்படும்போது, பெரும்பாலும் பழங்களையும் இளநீரையும் உணவாக உட்கொள்ளுங்கள்.
* வாரம் ஒருநாள் பழங்கள் அல்லது காய்கறிகளை மட்டும் உணவாகச் சாப்பிடுங்கள்.
* தினசரி உணவில் குறைந்தது 100 கிராம் அளவுக்குக் காய்கறிகள், பச்சடி, பழங்களைச் சாப்பிடுங்கள். இது உடலை தூய்மைப்படுத்தும்.
* கீரை வகைகளைச் சுத்தப்படுத்தி, நன்றாக அலசி, சிறிது உப்பு போட்டு சரியான பதத்தில் வேகவைத்து உண்பது நல்லது.
* தானியங்கள், பருப்புகள், பயறு வகைகளைத் தோல் நீக்காமலும் முளைகட்டியும் சாப்பிடுவது நல்லது.
* இரண்டுவிதமான பச்சடிகளைத் தயார் செய்து சாப்பிடலாம். ஒன்று, காய்கறிகளோடு தயிர் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து பச்சடி தயாரிப்பது. மற்றொன்று, எலுமிச்சைச் சாறு, பச்சைமிளகாய் சேர்த்துத் தயாரிப்பது. இந்த இருவகைப் பச்சடிகளும் உடலுக்கு நல்லது.
* பொதுவாக நாம் தயிரை அதிகமாகச் சேர்த்து காய்கறிகளைக் குறைவாகக் கலந்து, உப்பை தூக்கலாகப் போட்டு சாப்பிடுவோம், இது தவறு. அதற்குப் பதிலாக காய்கறிகளை அதிகமாகவும், தயிர் குறைவாகவும் அதேசமயம் புளிக்காத தயிராகவும் இருப்பது நல்லது.
* கேரட் பச்சடி, பீட்ரூட் பச்சடி, வெள்ளரி பச்சடி என எத்தனையோ பச்சடிகளைத் தயாரிக்க முடியும்.
* பச்சடிகளை உணவுக்கு முன் சாப்பிடுவது நலம். அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
* உணவில் சிவப்பு மிளகாய்த்தூளுக்குப் பதிலாக மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது.
* பொரித்த அப்பளத்துக்குப் பதிலாகச் சுட்ட அப்பளத்தைச் சாப்பிடலாம்.
* தினசரி உணவில் பருப்பு சேர்க்கவேண்டாம். வாரம் இரண்டுநாள் சேர்த்தால் போதும். சாம்பாராகவே தினமும் இல்லாமல் ரசம், வற்றல் குழம்பு, மோர்க்குழம்பு, எலுமிச்சை ரசம், நெல்லி ரசம், கீரைக் கூட்டு, துவையல் என மாற்றிச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக