ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சப்பாத்தியும் சர்க்கரை நோயாளியும்



சப்பாத்தியும் சர்க்கரை நோயாளியும்
Kannan Brj· Thursday, 12 October 2017

‘வாய் வழியா உள்ளே போற சர்க்கரையக் குறைக்காம ஊசி போட்டும் மாத்திரை சாப்பிட்டும் ரத்தத்தில சர்க்கரைய குறைச்சுரலாம்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம் சார்... சப்பாத்தியையும் கோதுமை தோசையையும் தூக்கிக் கடாசுங்க சார்...’

என்னுடைய இந்த பலமான விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை அவர். இதோ, முழுக் கதையை உங்களுக்குத் தருகிறேன்.

பதினைந்து வருடங்களாக சர்க்கரை நோயுடன் இருக்கும் என் தூரத்து உறவினர், என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க வந்தவர், சமீபத்தில் சிறுநீரக சம்பந்தமான உப்புகள் சற்று கூடி வருவதாகவும், அதை கவனிக்க ஒரு நல்ல சிறப்பு மருத்துவரை பரிந்துரைக்கும் படி என்னைக் கேட்டுக்கொண்டார்.

‘எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கேன். சர்க்கரை மாத்திரைகளாகட்டும், உணவு கட்டுப்பாடாகட்டும். தவறாம தினமும் நடக்கிறேன். இருந்தாலும் ஏன் இப்படி?’

‘நீங்க கட்டுப்பாடோட இருக்கீங்கங்கிறது இருக்கட்டும், சர்க்கரை கட்டுப்பாடோட இருக்கா?’

‘ஓரளவுக்கு இருக்கு. 250ஐ ஒட்டி இருக்கும்’

‘அப்படீனா கட்டுக்குள் இல்லைன்னு சொல்லுங்க’
‘........’
‘எத்தனை மாத்திரை எடுக்கிறீங்க, எத்தனை ஊசி போடறீங்க எல்லாம் முக்கியமில்ல, சர்க்கரை சரியான அளவா இருக்காங்கிறது தான் முக்கியம். அது இல்லாத பட்சத்தில சிறுநீரகம், கண் சம்பந்த நோய்கள் கூடத்தான் செய்யும்’

‘நான் தான் எல்லாமும் சரியாத் தானே செய்யிறேன். காலையில ரெண்டு இட்லி. ஒரு வேளை மதியம் மட்டும் கொஞ்சம் சோறு. ராத்திரிக்கு சப்பாத்தி. கொழுப்பு சேர்க்கிறதே இல்லை.’

‘இது சரின்னு யார் சொன்னா?’
‘...............’
‘சப்பாத்தி சர்க்கரைய கட்டுப்படுத்தும்ன்னு யார் சொன்னா?’

‘என்ன டாக்டர், எல்லாருக்கும் தெரிஞ்சது தானே?’

‘வடநாட்டிலே எல்லோரும் அத தானே சாப்பிடுறாங்க. அங்கேயும் நிறைய சர்க்கரை நோயாளிகள் இருக்காங்களே. நீங்க சொல்றது உண்மைன்னா அங்கே சர்க்கரை நோய் குறைவா இருக்கணுமே. இந்த சிம்ப்பிள் லாஜிக்கை ஏன் யாரும் யோசிக்கிறதில்லை’

‘எங்க டாக்டர் அரிசிக்கு பதிலா கோதுமை நல்லதுன்னு சொன்னாரே’

‘உணவுல இருக்கிற சர்க்கரைய குறைச்சாத் தான் ரத்தத்தில சர்க்கரை குறையும். இப்படி நான் சொன்னதும், நான் டீக்கு கூட சர்க்கரை போடறதில்லைன்னு  எல்லோரும் சொல்றீங்க. காபி டீக்கு தேவைப்படும் சர்க்கரை கொஞ்சம் தான். ஆனா, மூணு வேளையும் அரிசி அல்லது கோதுமை மூலம் செஞ்ச உணவுகள சாப்பிடறீங்களே, அதெல்லாம் முழுக்க முழுக்க சர்க்கரை தான்’

‘என்ன டாக்டர் சொல்லறீங்க?’

‘வாய் வழியா உள்ளே போற சர்க்கரையக் குறைக்காம ஊசி போட்டும் மாத்திரை சாப்பிட்டும் ரத்தத்தில சர்க்கரைய குறைச்சுரலாம்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம் சார்... சப்பாத்தியையும் கோதுமை தோசையையும் தூக்கிக் கடாசுங்க சார்...’
‘............’
‘அப்படீன்னா சப்பாத்தி நல்லதில்லையா சார்?’

‘கோதுமைக்கும் அரிசிக்கும் கலர் தவிர ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை. சப்பாத்தியில அரிசியைக் காட்டிலும் புரதம் கொஞ்சம் அதிகம், அவ்வளவு தான். மத்தபடி அதுல 80% சர்க்கரை தான். கோதுமை சாப்பிட்டா சர்க்கரை குறையாது, கூடத்தான் செய்யும்......இதோ நீங்களே அதுக்கு உதாரணம்..’

‘ஓ..ஓ.....’

‘உங்க மனைவிக்கு சுகர் ப்ராப்ளம் இருக்கா?’

‘இல்ல சார்’

‘நீங்க ரெண்டு பெரும் ஒரே மாதிரி தானே சாப்பிடுறீங்க, அவங்களுக்கு ஏன் சுகர் வரலை? ஏன்னா, அவங்க உடம்பு சர்க்கரைய நல்லா கையாளுது, உங்க உடம்புக்கு கையாளத் தெரியல’

‘புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு’

‘ஒரு மாணவனுக்கு கணக்கு வரவே மாட்டேங்குதுன்னு வைங்க, நீங்க, அறிவியல் அல்லது சோஷியல் மாதிரி மற்ற பாடங்கள மேற்படிப்புக்கு எடுத்துக்கச் சொல்வீங்களா, இல்ல, நீ கணக்கு தான் படிக்கணும்னு கட்டாயப் படுத்துவீங்களா? அது மாதிரி தான் இங்கேயும். உங்க உடம்புக்கு சர்க்கரைய கையாளத் தெரியல. ஆனா, சர்க்கரை தான் கொடுப்பேன், அதை ஒழுங்கா சமாளின்னு உங்க உடம்பைக் கட்டாயப் படுத்துறீங்களே?’

‘புரியுது டாக்டர். அப்படீன்னா எந்த உணவு என் உடம்புக்கு நல்லது?’

‘புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்’

‘என்னது, கொழுப்பு சாப்பிடலாமா? எல்லாம் மாத்தி மாத்தி சொல்றீங்களே?’

‘இந்த மாதிரி யோசியுங்க. சரிசம விகித உணவு, அதாவது Balanced dietன்னு சொல்ற உணவுல 60% கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை சத்தும், 15% புரதமும், 25-30% கொழுப்பும் இருக்கணும்ங்கிறது விதி. ஆனா இன்னைக்கு நீங்க எல்லாம் சாப்பிடுறத கணக்கு போட்டோம்னா 90%க்கும் மேல சர்க்கரை தான். கொஞ்சமா புரதம் இருக்கு, கொழுப்பு இல்லவே இல்லை. கொழுப்பு மேல இருக்கிற பயத்தினால சர்க்கரைய அளவுக்கு அதிகமா சாப்பிட ஆரம்பிச்சு நிறைய சர்க்கரை மற்றும் இதய நோயாளிகளை உருவாக்கிகொண்டிருக்கிறோம்’

‘எப்படி டாக்டர்?’

‘நீங்க சாப்பிடுற சர்க்கரை எல்லாம் என்ன ஆகுது? ரத்ததில சர்க்கரை ஏறும். அதை அப்படியே சர்க்கரையா சேர்த்து வைக்க முடியாது. உடம்பு அத கொழுப்பா மாத்தும். ரத்ததில இருக்கிற நெறைய கெட்ட கொழுப்புகள் சர்க்கரையால வந்தது தான். ஒருத்தர் உடல் குண்டா இருக்கார்னா, அவர் உடம்புல சேர்ந்த கொழுப்பு எல்லாமும் சர்க்கரையால தானே தவிர, நிறைய கொழுப்பு சாப்பிட்டு வந்தது இல்ல.

‘இப்ப நான் என்ன செய்யணும் டாக்டர்?’

‘Balanced dietல சொன்ன மாதிரி ஒரு 30% கொழுப்பு சேர்த்தா போதும். நம்மால கார்போஹைட்ரேட் உணவை முழுவதுமா தவிர்க்க முடியாது. நான் உங்கள நிறைய பால், தயிர், காய் கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் சாப்பிடச் சொல்லப் போகிறேன். இது எல்லாத்திலேயும் கார்போஹைட்ரேட் இருக்கு. ஆனா இது அரிசி / கோதுமை மாதிரி இல்லாம ரத்ததில சர்க்கரைய மெதுவா ஏத்தும். இவைகளை நாம அள்ளி அள்ளி சாப்பிடவும் முடியாது.’

‘அரிசியும் கோதுமையும் கூடாதுன்னா வேற சாப்பிட ஒண்ணுமில்லையே சார்?’

‘இப்படி செய்யுங்க. மதியத்துக்கு ஒரு கப் கீரை, நிறைய காய்கறி, ஒரு பெரிய கப் நிறைய தயிர். அவ்வளவு தான். காய்கறி எது வேணா இருக்கட்டும்,  எண்ணெய் கத்திரிக்கா அல்லது புடலங்கா கூட்டுன்னா, அதையே நெறைய தட்டுல போட்டு சாப்பிடணும். சோறே கிடையாது’

‘இப்படி முடியுமா டாக்டர்?’

‘நானே இப்படி தான் சாப்பிடுறேன். வேணும்னா என் லஞ்ச்டப்பாவ திறந்து பாத்துக்கோங்க’

‘டின்னருக்கு எப்படி?’

‘இன்னைக்கு இரவு உங்களுக்கு டின்னர் முட்டை. ரெண்டோ, மூணோ சாப்பிட்டுக்கோங்க. அது மட்டும் தான். நாளைக்கு, ஒரு பெரிய கிண்ணம் நிறைய சுண்டல். மூணாவது நாள் பன்னீர்ல எதாவது செஞ்சு சாப்பிடலாம். கோழியோ மீனோ சாப்பிடணுமா? ஒரு கால் கிலோ தட்டுல போட்டு சாப்பிடுங்க. சோறோ சப்பாத்தியோ கிடையாது. இது போல உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்களே முடிவு செய்யலாம். சில நேரம் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு முடித்துவிடலாம். சுருக்கமா, தட்ட திருப்பணும், அதாவது, நாம சைட் டிஷ்னு சொல்றதையே மெயின் டிஷ்ஷா சாப்பிடணும்.

‘இது மட்டுமே போதுமா சார்?’

‘போதும் மட்டுமில்ல, எல்லா சத்தும் கிடைக்கும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நீங்க இப்ப சாப்பிடுறதுல, சர்க்கரை தவிர வேற ஏதாவது சத்து இருக்கா? அரிசி கோதுமை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியாச்சுன்னா, வேற வழியில்லாம நிறைய வித விதமா கீரை, காய்கறி, முட்டை, தயிர், பழம்னு சத்தா சாப்பிடுவீங்க. நான் இப்போ சொன்ன உணவுகள் எல்லாத்தையும் மதியத்துக்கும் இரவுக்கும் மாறி மாறி சாப்பிட்டுக்கலாம்’

‘அப்போ காலைல?’

‘அது தான் கொஞ்சம் ப்ராப்ளம். பாதாம் பருப்போ, முட்டையோ, தயிரோ பழங்களோ சாப்பிட்டு இருந்து விடலாம். முடியாத பட்சத்தில குறைவா ஒன்னுரெண்டு இட்லி நல்லா நெய்யோ எண்ணையோ ஊத்தி சாப்பிடலாம். பத்தலைன்னா தயிர் சாப்பிட்டுக்கலாம்’

‘எண்ணெய் கேட்டது தானே?’

‘இல்ல. எண்ணையில செஞ்ச எந்த உணவவையும் அன்னன்னைக்கு சாப்பிட்டா நல்லது தான். வீட்டுல வட சுடுங்க, அஞ்சாறு சாப்பிடுங்க. முட்டைய ஆம்லேட்டா சாப்பிடுங்க, கோழி மீன் எல்லாம் பொரிச்சி சாப்பிடுங்க, ஒண்ணும பிரச்சினை இல்ல. நம்ம பாரம்பரிய எண்ணைகளான நல்லெண்ணை இல்லன்னா கடலெண்ணை உபயோகப்படுத்துங்க. எண்ணையில செஞ்சு வச்சு சாப்பிடுற ஐட்டங்கள் இருக்கே, சிப்ஸ், பக்கோடா, மிக்ஸர், முறுக்கு அதுல தான் எண்ணெய் கெட்ட எண்ணெயா மாறியிருக்கும். அதுனால அதுகள எப்போதாவது தான்சாப்பிடலாம். வீட்டுல டப்பால வாங்கிவச்சு தினமும் சாப்பிட்டா ஆபத்து.

‘எல்லாத்தையும் உல்ட்டாவா சொல்றீங்களே டாக்டர்? நம்புறதுக்கு பயமா இருக்கு’

‘அப்படீன்னா நாம இதப் பத்தி பேசுறத நிப்பாட்டிருவோம்’

‘ஐயையோ, ஏன் டாக்டர் கோபப்படறீங்க...நம்புறேன், சொல்லுங்க.....நீங்க சொன்னபடி சாப்பிட்டா, சாப்பிட்ட திருப்தியே கிடைக்காதே’

‘உண்மை தான். உடம்பு ஏத்துக்கும், மனசு தான் எத்துக்காது. மொதல்ல ஒரு பதினஞ்சு நாள் கஷ்டமா இருக்கும், அப்பறம் பழகிடும். அதனோட பலன நீங்க பார்த்தப்பறம், பழைய படி உங்களால சாப்பிடவே முடியாது’

‘அரிசி, கோதுமை வேண்டாம் சரி, இந்த கேப்பை கம்பு கேழ்வரகு வரகரிசி குதிரவாலின்னு சொல்றாங்களே, அதெல்லாம் எப்படி?’

‘இதுலே எல்லாம் கொஞ்சம் விட்டமின்கள் மற்றும் புரதம் அரிசியைக் காட்டிலும் அதிகம். ஆனால் அதுலயும் ரொம்ப அதிகமா இருக்கிறது சர்க்கரை தான். அதனால, இதுகள சர்க்கரைக்கு மாற்று உணவா கருத முடியாது, இவைகளை சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறத்தான் செய்யும்’

‘என்ன டாக்டர், இதெல்லாம் நல்லதுன்னு எவ்வளவு பேர் எழுதுறாங்க?’

‘இந்த உணவுகள சாப்பிட்டு சர்க்கரைய நல்லா கொறைச்ச ஆளப் பார்த்திருக்கீங்களா?’
‘.............’
‘இடையில ரொம்பப் பசிக்குமே டாக்டர்?’

‘பசியோட இருங்க, பாதி வயித்துக்கு சாப்பிடுங்கன்னு சொல்லவே இல்லையே...வெள்ளரிப் பிஞ்சு, காரட், பாதாம் பருப்பு, பிஸ்தா, கடலை, பொட்டுக்கடலை, நவதானியங்கள் அவிச்சதுன்னு எது வேணா பசி அடங்குற வரை சாப்பிடலாம். எல்லாப் பழங்களும் சாப்பிடலாம். பச்ச தேங்காய எப்ப வேணா எவ்வவளவு வேணா சாப்பிடலாம்’

‘சரி. நாளையிலிருந்தே ஆரம்பிச்சுடுறேன். பாப்போம், உங்க உணவு முறை எப்படி வேலை பாக்குதுன்னு பாப்போம்’

இவ்வாறு கூறி விட்டு சென்றவர், இரண்டே நாட்களில் திரும்ப வந்து விட்டார், தன் மனைவியை அழைத்துக்கொண்டு.
‘நீங்க சொன்னதெல்லாம் இவ கிட்ட சொன்னேன் சார். நம்ப மாடேங்கிறா’

கடந்த 50 வருடமாக உணவைப் பற்றி மனதில் வேரூன்றியிருந்த கருத்துக்களை சட்டென்று யாராலும் மாற்றிக்கொள்ளவது சற்று சிரமம் தான், அதிலும் குறிப்பாக குடும்பத்தலைவிகள். அவர் மனைவியிடம் மறுபடியும் விளக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே கணவர் மூலம் கேட்டறிந்திருந்ததால், என் வேலை சற்று சுலபமாக முடிந்தது என்று தான் கூற வேண்டும். சிறுநீரக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றுக் கொண்டு சென்றார். பத்து நாட்கள் கழித்து திரும்பவும் வந்தார்.

‘முடியல டாக்டர். வயிறெல்லாம் கடா முடான்னு சத்தம் போடுது. சில நேரம் மலம் கட்டிக்கிறது. ரொம்ப டயர்டா வேற இருக்கு’

‘இதப் பாருங்க. காரணங்கள் வேண்டாம், காரியம் ஆச்சாங்கிறது தான் கேள்வி. வேற வழியில்ல, மாறித்தான் ஆகணும். ஒரு 15 அல்லது 20 நாட்கள் அப்படி இருக்கும், பின்னர் சரியாகிவிடும்’

தலை ஆட்டிவிட்டுச் சென்றார். அடுத்த ஐந்து மாதங்கள் அவரைக் காணவில்லை. ஒரு திருமண விழாவில் அவரை சந்தித்தேன்.

‘சார், இப்போ சர்க்கரை 200க்கு கீழ கொண்டு வந்திட்டேன். கொஞ்சம் இன்சுலின கூட்டியிருக்கார் எங்க டாக்டர். இன்னும் ஒரு காஸ்ட்லியான மாத்திரையும் சேர்த்திருக்கார்’

எனக்கு புரிந்து விட்டது. நான் அவ்வளவு விரிவாக சொல்லியும் உணவு முறையை மாற்றவில்லை அவர்.

‘ஆனா, சாரி டாக்டர், பழைய டைப்ல தான் சாப்பிடுறேன். நீங்க சொன்னீங்க, ஆனா அது பிரக்டிகலா எனக்குப் படல. எங்க டாக்டர் கிட்ட அதப்பத்தி சொன்னேன், அவரே பயந்திட்டார். எனி வே, இப்போ சர்க்கரையை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தாச்சு’

‘பரவாயில்ல சார். ஒண்ணு மட்டும் சொல்றேன். என்ன தான் காஸ்ட்லியா ஊசியும் மாத்திரையும் சாப்பிட்டு சர்க்கரைய கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அதனால மாரடைப்பு வரும் அபாயமோ பக்க வாதம் வரும் அபாயமோ கொஞ்சம் கூட குறையிறது கிடையாது’

‘என்ன சார் சொல்றீங்க? அப்பறம் எதுக்கு சார் இவ்வளவு மெனக்கெட்டு சர்க்கரைய குறைக்கணும்?’

‘நான் சொல்றதுல சந்தேகம் இருந்தா உங்க டாக்டரக் கேளுங்க’
‘...........’
‘ஆனா, இயற்கையா உணவு மாற்றங்கள் மூலமும், உடற்பயிற்சி மூலமும் சர்க்கரைய குறைச்சா இது போன்ற பிரச்சினைகள தவிர்க்கலாம்’
‘............’

பின்னர் நானும் அவரை மறந்து விட்டேன். மேலும் சில  மாதங்கள் கழித்து என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். மிகவும் சோர்வாக இருந்தார்.

‘பத்து நாள் முன்னாடி டெஸ்ட் எடுத்தேன், உப்பு முன்ன விட கொஞ்சம் கூடியிருக்கு. ரொம்ப அப்செட் ஆயிட்டேன் சார். என்ன செய்யலாம்?’

‘என்ன சொல்ல சார், உணவு முறைய முழுசா மாத்துங்க’

வேறு வழியில்லாமல் மாறத் தொடங்கினார். இடையில் என் உதவியாளர் பெண்ணை தொலை பேசியில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொண்டார். பின்னர் மறுபடியும் காணாமல் போனார்! நான்கு மாதங்கள் ஆகி விட்டது, வரவே இல்லை. நானும் ஏறக்குறைய அவரை மறந்தே போய்விட்டேன். எதேச்சையாக ஒரு பல்பொருள் அங்காடியில் அவரும் அவர் மனைவியும் எதோ வாங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவரை சந்திப்பதை தவிர்க்க முடிவு செய்தேன். அதையும் மீறி சந்திப்பு நடந்தால், சர்க்கரை பற்றியோ உணவைப்பற்றியோ விசாரிப்பதில்லை என்று முடிவு செய்தேன். எனவே நான் வேறொரு பகுதிக்கு சென்று பொருட்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து யாரோ ‘சார்’ என்று அழைக்கவும் நான் திரும்பிப்பார்த்தேன். அவரும் அவர் மனைவியும் நின்றிருந்தார்கள்.

‘சார், நல்லா இருக்கீங்களா?’

ஹ்ம்ம்...என்னை விசாரிக்கிறார். ஒரு சிரிப்புடன் தலையை ஆட்டினேன்.

‘உங்க அந்த அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கிற பொண்ணு ரொம்பக் கறார் சார். நான் உங்க ரிலேட்டிவ்ன்னு சொல்லியும் பத்து நாள் கழிச்சு தான் தேதி குடுத்தாங்க. வர்ற புதன். நீங்கள் இங்க வந்திருக்கிரத என் பொண்டாட்டி பாத்துட்டா. நான் வேணாம்னு சொன்னாலும் இழுத்துக்கிட்டு வந்துட்டா சார்’

மறுபடியும் சிரித்து வைத்தேன். இப்பொழுது நான் என்ன பேசுவது? ஒன்று கவனித்தேன். இந்த முறை அவர் குரலில் உற்சாகம் இருந்தது, மனையின் முகத்திலும் புன்னகை இருந்தது.

‘ரொம்ப நன்றி சார். உணவு முறைய நீங்க சொன்ன மாதிரி மாத்தினேன். ஒரு முடிவா என்ன ஆனாலும் பரவாயில்லன்னு. மூணு வாரத்துல சர்க்கரை குறைய ஆரம்பிச்சது. ரெண்டு மாசத்துல இன்சுலின் நிப்பாட்டிட்டேன். எங்க டாக்டருக்குப் புரியல, எப்படின்னு ஆச்சரியப்பட்டார். ஆனா சாப்பிட்ர ஐட்டங்கள மாத்தியிருக்கேன்ன்னு அவர்கிட்ட சொல்லலை. நான் சொல்லி அவர் அத டிஸ்கரேஜ் பண்ணிடுவாரோன்னு பயம். இப்போ சிம்ப்ளா ஒரே ஒரு மாத்திரை தான் சாப்பிடுறேன்’

அவர் சொல்ல சொல்ல எனக்கு சந்தோசமாக இருந்தது, ஆனால் ஆச்சரியம் இல்லை. இந்த முறையை பின்பற்றினால் பயனடைவது நிச்சயம் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

‘மற்றொரு விஷயம், என்னால நம்ப முடியல சார். உப்பு சத்து கூட குறைஞ்சிருக்கு. ரொம்ப தாங்க்ஸ் சார். வர்ற புதன்கிழமை எல்லா டெஸ்ட்டும் உங்க ஆஸ்பத்திரியில எடுத்துட்டு வந்து பாக்கிறேன்’

கை கூப்பி வணக்கம் வைத்து விட்டு திரும்பிவிட்டார். அவர் மனைவி, இரு வினாடிகள் கூடுதலாக நின்று என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பினார். அந்தப் புன்னகையில் நன்றியுணர்ச்சி மேலோங்கி இருந்தது. ஒரு மருத்துவனுக்கு தன்னால் சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார் என்பதை விட வேறு இன்பம் தரும் செய்தி இருக்க முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக