சனி, 14 டிசம்பர், 2019

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.


இந்தியத் தேயிலையின் வயது என்ன தெரியுமா?
#InternationalTeaDay

சிறிய குழந்தை முதல் பெரிய மனிதர்கள் வரை உலகில் தேநீர் பருகாத ஆட்களே இருக்கமாட்டார்கள். தேநீர் மனிதனின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்று. சிலரால் தேநீர் இல்லாமல் ஒரு பொழுதைக் கூட கழிக்க முடியாது எனலாம். இப்படி மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து கொண்ட அந்தத் தேநீர் கொடுக்கும் தேயிலைக்கான தினம்தான் இந்த டிசம்பர் 15. உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளான இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தோனேசியா, வியட்நாம், கென்யா உள்ளிட்ட நாடுகளில் இந்தத் தினம் 2005-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் பிரசித்தி பெற்ற தேயிலைகளில் இந்தியாவின் தேயிலையும் அடக்கம். இந்தியாவில் இதன் வரலாறு மிகப் பெரியது.

இந்தியாவைப் பொறுத்தவரை தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது. உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் தற்போது இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் வணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. 1830-ம் ஆண்டின் பிற்பகுதியில்தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில்தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிறப்புப் புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும். இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்புப் பகுதிகளாகும்.

இமயமலையில் உள்ள பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலை. இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித்தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச்சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை, மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. `உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், 25 சதவிகித பங்களிப்புடன், இரண்டாவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது’ சமீபத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு மொத்தம் 25 சதவிகிதமாகும். மேலும், இரண்டாவது மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளராகவும் உள்ளது. உலக அளவில் நான்காவது ஏற்றுமதியாளராகவும், இந்தியா இருக்கிறது. இதில், 2015 -16-ல், 4,467 கோடி ரூபாய்க்கும், 2016-17ல், 4,602 கோடி ரூபாய்க்கும், 2017-18-ல் 5,059 கோடி ரூபாய்க்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, உலக அளவில் செய்யப்படும் காபி உற்பத்தியில், இந்தியா, 4 சதவிகிதம் பங்களிப்பை வழங்குகிறது. மேலும், காபியில் ஐந்தாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. கடந்த, 2015-16-ல், 3,450 கோடி ரூபாய்க்கும், 2016-17ல், ரூ.3,736 கோடிக்கும், 2017-18-ல் 4,184 கோடி ரூபாய்க்கும் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2017-18-ல், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், மிக அதிகமாக காபியை இறக்குமதி செய்துள்ளனர். உலகளவில் தேயிலை வணிகத்தைப் பிரபலப்படுத்தவும், அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும்தான் இந்த தேயிலை தினம் கொண்டாப்படுகிறது. அதேசமயம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கவும், தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்தும் உரையாடவும் இந்த தினம் உதவுகிறது.
நன்றி விகடன்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக