வியாழன், 14 நவம்பர், 2019

நன்றி சொல்வோம்.. மன்னிப்பு கேட்கப் பழகுவோம்.. அதற்கும் ஒரு தினம் கொண்டாடுவோம்!


நன்றி சொல்வோம்.. மன்னிப்பு கேட்கப் பழகுவோம்.. அதற்கும் ஒரு தினம் கொண்டாடுவோம்!

 மனிதர்களுக்குள் இப்போதெல்லாம் நிறைய மிஸ் ஆகிறது. நல்லது குறைந்து கொண்டே வருகிறது. அதேசமயம் தீயவை பெருகிக் கொண்டே போகிறது. இதில் நமக்கு ஒரு சிறிய யோசனை திடீரென வந்தது.

நன்றி சொல்ல ஒரு தினமும், மன்னிப்பு கேட்க ஒரு தினமும் நாம் கொண்டாடினால் என்ன.. இதுதான் அந்த யோசனை.

"நன்றி மறப்பது நன்றன்று" என்பது வள்ளுவர் வாக்கு. மற்றவர் நமக்காக செய்யும் சிறு உதவிக்கு, குறைந்தபட்சம் ஒரு சிறு பார்வையாலோ புன்னகையாலோ சொற்களினாலோ நன்றி தெரிவிப்பது என்பது சிறு வயதிலிருந்தே கற்று தரப்பட வேண்டிய நற்பழக்கம். அனைத்திற்கும் தகுதியானவன்/ என்ற இறுமாப்பு ஆணவமும் மனதில் கொண்டவர்கள் யாருக்கும் எதற்கும் நன்றி தெரிவிக்க விரும்ப மாட்டார்கள்.

சிறு வயதிலிருந்தே மனதிலிருந்து தோன்றும் நன்றி, ஈரமுள்ள மனதை கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் மனதில் ஈரம் ஊற வைக்கும் சில விஷயங்களாவது சிறு வயதிலிருந்தே விதைக்கப்பட்ட வேண்டும். அவற்றில் முக்கியமானது நன்றி சொல்லும் நற்பழக்கம். மேற்கத்திய நாடுகளில் இது கடவுளுக்கு நன்றி சொல்லும் நாளாக கொண்டாடப்படுகிறது என்று அறிகிறேன். இந்தியாவில் அறுவடை நாள் நன்றி சொல்லும் வகையில் கொண்டாடப்பட்டாலும், இங்கு நான் குறிப்பிட விரும்பும் "நன்றி", சகமனிதனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் கொண்டாட விரும்புவது.

எத்தனையோ பேர் "அன்னிக்கு அவங்க அதை செய்யலைன்னா நான் இன்னிக்கு இங்கே உயிரோட நிக்க முடியாது" என்றும் "அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா" என்றும் பேச கேட்பதுண்டு. பெருந்தன்மை கொண்டவர்கள் யாரும், தான் மற்றவர்களுக்கு செய்த உதவிகளை பெரிய விஷயமாக கருதுவதில்லை. ஆனாலும், அதனால் பயன் பெற்றவர்கள் அதை குறிப்பிடும்போது அவர்கள் மனம் பூப்பூக்கும். இதற்காக ஒரு நாளை கொண்டாடும்போது ஒரு மனிதருக்கு தான் எத்தனை பேருக்கு அவர்கள் நினைவில் நிற்கிறோம் என்பது தெரியும்போது மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.

#Apology_day
குறுஞ்செய்தி மூலமோ மின்னஞ்சல் மூலமோ ஒரு தொலைபேசியிலோ நேரிலோ தெரிவிக்கப்படும் அந்த நன்றி அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கும். முகம் தெரியாத பலருக்கும் இன்றிருக்கும் சோசியல் மீடியா மூலம் நன்றி போய் சேரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஆகவே ஒருவருக்கொருவர் நன்றி தெரிவிக்க ஏதுவாக வருடத்தில் ஒரு தினம் கடைப்பிடித்தால் அது விதையாக விதைக்கப்பட்டு விருட்சமாக வளர்ந்து நிழலாக பயன் தரக்கூடியது என்பது என் எண்ணம்.

நன்றி சொல்லும் பழக்கம் இல்லாதவரும் மற்றவர்களை பார்த்தாவது அந்த ஒரு தினத்தில் சொல்லும் நன்றி, ஆரம்பத்தில் உதட்டிலிருந்து உதித்தாலும், அடுத்தடுத்த முறை சொல்லும்போது மனதிலிருந்து அது வெளிப்பட ஏதுவாகும். அதை அவர் வேறொருவர் மூலமாக பெறும்போது அதன் மகிழ்ச்சியும் கிடைக்க பெறுவர். நாட்பட நாட்பட சமுதாயத்தில் மகிழ்ச்சியை பெருக்கும் பழக்கம் இது. உதவி தேவைப்படும் பொன்னான நேரங்களில் செல்போனில் படமெடுத்து லைக்ஸ் பெற விரும்பும் இந்த காலத்தில் இது போன்ற நல்லெண்ணங்களை விதைக்க வேண்டிய நேரமிது.


தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தினத்தை நன்றி நவிலும் தினமாக நாமும் பின்பற்றலாம். மிக மிகப் பொருத்தமான தினமாக அது அமையும்.


அதேபோல இன்னொரு தினத்தையும் நாம் கொண்டாடலாம். அது மன்னிப்பு கேட்கும் நாள் (Apology Day)

தவறு செய்யாத மனிதர்கள் உலகத்தில் இருக்க மாட்டார்கள் என்பார்கள். தவறு செய்வது மனித இயல்பு என்பார்கள்.

தெரியாமலோ அறியாமலோ சிறியது முதல் பெரியது வரை சில பல தவறுகள் செய்து விடுகிறோம் பின்னொரு சமயம் "ஐயோ தெரியாமல் செய்து விட்டோமே அதனால் பாதிக்கப்பட்டவர் இந்த கஷ்டங்களை அனுபவித்தார்" என்று வருத்தப்படுவதும் உண்டு. சிலர்/பலர் அந்த சமயங்களில் அந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்பதும் உண்டு. சிலரோ, மனதில் நினைத்தாலும் சுயகவுரவத்தினால் சொல்லாமல் விடுவதும் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய், செய்த தவறை நியாயப்படுத்துவதும் உண்டு..

கேட்கப்படாத மன்னிப்புக்கள் பல சமயங்களில் பல பேருடைய வாழ்க்கையையே மாற்றி விடுகின்றன. இன்று செய்தித்தாள்களில் சாலை தகராறுகளிலும் நண்பர்கள் கூடும் இடங்களிலும் ஏற்படும் சில வாக்குவாதங்களில் பலர் கொல்லப்பட்டதாக செய்திகளை காண்கிறோம்.. ஒரு "சாரி" சொல்லியிருந்தால் அவற்றில் சில தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்.

சரியான தருணத்தில் கேட்கப்படாத மன்னிப்புகள் தலைமுறைகளை கடந்தும் பேரெதிரிகளை உருவாக்கும் வல்லமை கொண்டவை. பேராபத்துக்களையும் விளைவிக்க வல்லவை.

வேண்டுமென்றே / தெரிந்தே தவறுகள் செய்வதை குறைத்துக் கொள்வோம்!.... ஆக்ரோஷ உணர்ச்சிகளை குறைக்கும் விதமாக மன்னிப்பு கேட்கும் மனிதத்தை வளர்ப்போம்! ... பெரும் தவறாக கருதப்படும் செயலான காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை மன்னிப்பு கேட்கும் நாளாக அனுசரிக்கலாமே..

சட்டம் மூலமாக தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் இந்த மன்னிப்பு கேட்டலில் அடங்காது. நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறு தவறுகள் சட்டத்தின் முன்னாள் கொண்டு செல்ல வேண்டியிராத தவறுகள் மட்டுமே இதில் அடக்கம். என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மன்னிப்பு கேட்குறவன் மனுஷன்.. மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன் என்பது வெறும் சினிமான வசம் மட்டுமல்ல. உண்மையும் கூட. அதற்கேற்ப நாம் மனிதத்தை வளர்க்க வருடத்தில் ஒரு நாளாவது முனைவோமே.
Thanks oneindia tamil.
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக