பெண் ஜென்மம்
ராக்காயிக்கு இருப்பு கொள்ளவில்லை... எங்கே தான் போச்சு இந்த கர்மம் புடிச்ச ரேஷன் கார்டு.... வீட்ல எங்க தேடியும் காணலியே... ச்சே... வீட்டுல நானு, எம்மவன், புருஷன் மருதும் தான்..... எனக்கும் நல்ல நாபகம் இருக்கு..... போன ரேசன் வாங்கிட்டு வந்து சாமி படத்துக்கு கீழ இருக்குற ஆணில எப்பவும் தூங்குற மஞ்சபைல தான் போட்டு வச்சேன். வீடாம் பெரிய வீடு... இருக்குறதே ரெண்டு, மூணு பானை.... நாலு சட்டி, ஒரு பாய் , ரெண்டு தலாணி.... எங்கன போச்சுனே தெரியலியே.... நானும் எடுக்கல, வெளிய இருந்தும் ஒரு பய வந்து எடுத்துருக்க முடியாது. எடுத்துட்டு போயி என்னத்த செய்ய முடியும். அவன் தான் அவனே தான் எடுத்ருப்பான் , என்று புருஷன் மேல் தான் சந்தேகம் வந்தது..... அப்படியே சோற்றையும் வடித்துவிட்டாள். ' நேத்து வெச்ச மீன்கறி மீதி இருக்கு, இன்னிக்கு மட்டும் தான் அரிசி இருக்கு, நாளைக்கு என்ன செய்ய' 'ஐயோ என்றிருந்தது அவளுக்கு..... இந்த கார்டு எங்கனே போயிருக்கும்... எங்கனே தேடுனாலும் இல்லியே,..... பக்கம் பக்கம் இருக்குரவ எல்லாம் மூட்ட மூட்டையா கொண்டு பொய் வீட்டுல அடுக்குவாளுகளே... கர்மம் பிடிச்ச கார்டு.... இப்படி எல்லாம் எண்ண அலைகள் மனமெனும் சுவற்றில் மோதி ஒலிக்க, அவன் கணவன் வந்து விட்டிருந்தான்.
காலையும், கையையும் திண்ணையில் இருந்த சருவத்தில் கழுவிவிட்டு ,
"ஏ ராக்காயி சோறு குடுடி..." என்று வந்தான் மருது.
அவளும் சோறும், பழைய மீன்குழம்பும் கொண்டு வைத்தாள்.
"இன்னா சோறும், பழைய மீன்கறியும் தானா, தொட்டுக்க வேற ஏதும் இல்லியா?" என்று கேட்டான் சலிப்புடன்.
"இந்தேரு, இது கெடைச்சதே பெருசுன்னு நெனச்சுக்கோ" என்றாள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,
"ஏன் ஒரு கருவாடுமா பொரிக்க இல்ல" என்று கேட்டான்.
"ஏயா கையில பத்து பைசா இல்ல, வயலு வேல தொடங்கினா காசு வரும்.... இன்னியோட அரிசியும் தீரும்.... காலங்காத்தால இருந்தே தேடுறேன் இந்த கார்ட காணல, ஆமா நீ பாத்தியா? என்று அவள் கேட்டதும் அவனுக்கு புரை ஏறியது...... தண்ணி எடுத்து வந்து வைத்தாள்.
"வெள்ளம் கூட திங்கரப்போ எடுத்து வெய்க்க துப்பு இல்லியோ" என்று சொல்லிவிட்டு தண்ணீரைக் குடித்தான்.
"அதான் மொண்டு குடுத்தாச்சு.... நீயும் குடிச்சாச்சு..... இன்னாத்துக்கு இபோ எகிறுற...விடேன்....ஆமா நீ கார்ட பாத்தியா"
"திங்குற புருசனுக்கு தண்ணி மொதவே எடுத்து வெச்சு குடுக்க துப்பு இல்ல, இதுல வாய்கிழிய பேச்சு வேற"
" இப்ப என்னா நீ புரை ஏறி செத்தா போயிட்ட"
"இப்ப நான் சாவணும்னு சொல்லுதியோ.... இல்ல தெரியாம தான் கேக்கேன், சொல்லு"
"இப்ப இன்னா சொன்னேன்னு இப்பிடி விழுந்து லாவுற...??"
"ஓ..... ஏண்டி தண்ணி வெய்க்க துப்பில்லியான்னு கேட்டா நாயாட்டம் உன்ன லாவுரியானு கேக்குற...,நா என்னா இப்போ உனக்கு அம்புட்டு கேவலமா இருக்கேனோ"
"அப்பா...சாமி.... கொஞ்சம் வாய மூடுதியா ..... சும்மா ... 'ஒணக்க ஓலைல ஒண்ணுக்கு போனது போல' சும்மா தொன தொனனு .... ஆமா உனக்கெல்லாம் வாய் வலிக்காதா.....?..."
"இந்தேரு .... எளிச்சு வந்தேன்னு வச்சுக்கோ ..... மிதி மிதின்னு மிதிச்சு தள்ளிடுவேன்.... ஆமா... சும்மா ஒண்ணுக்கு மண்ணுக்குனு"
"செரி அத்த விடு..... கார்டு எங்க?"
"எனக்கு இன்னடி தெரியும்..."
"இந்த வீட்டுல தான நீயும் இருக்க "
"பின்ன வேற எங்கன இருக்குரதாம், இத்து நா கட்டுன வீடு, உங்கொப்பனா வந்து கட்டிகுடுத்தான், அதுக்கு இன்னா இப்ப"
"இந்தேரு ... பேச்சு உனக்கும் எனக்கும் தான்.... சும்மா எதுக்கு எங்கப்பன இழுக்குற இப்ப...... என்னைய கட்டித்தந்ததே பெருசு, இத்துல வீடு வேற கட்டனுமாம்ல"
"ஆமா கட்டிக்குடுத்துட்டாலும், வக்கத்த வெறும் பய, ஒரு வண்டி உண்டா..... அவனவன், மாமனாரு வாங்கிக்குடுத்த வண்டிய எடுத்துகுனு சல்லு சல்லுனு போறானுக..... எனக்குன்னு வாச்சவன் குடுத்தான் பாரு வெறும் பத்து ஏக்கரு நெலமும், பண்டார ஓட்ட வடையும்...."
"எங்கப்பனுக்கு பத்து ஏக்கரு நெலம் இருந்த நல்ல எடத்துல என்ன குடுத்துருக்காதா ?? பாவி இந்த பாளுங்கெனத்துல கொண்டாந்து தள்ளுமா??"
"என் வீட்டுலயே இருந்துகின்னு, என் சொத்தையே தின்னுட்டு, என்னையே பாளுங்கெனருனு சொல்லுதியா, பொசகெட்ட சிறுக்கி"
"இன்னது .... உங் வீடா?? இது என் வீடுயா?? உன்கொம்மா சண்ட வளத்துகின்னு போனபோ, காதுல, கையில கெடந்தத கழற்றி அடமானம் வெச்ச பணத்துல கட்டுன வீட்ட உம்மட வீடுன்னு பீத்துரியாக்கும்....உன் வீட்டுல இருந்து ஒரு ஓட்ட பான கூட வரல ..... பெருசா பேசுற பேச்சு....!!!"
"வாய , கைய வெச்சுகினு சும்மா இருந்தா ஏன் என் ஆத்தா வெளிய தொறத்துது.... "
"நீ ஒரு நச்சவாயின்னா, ஓங்க்கொம்மா ஒரு நாறவாயி... எப்பவாது வாயி தொறந்தா பரவால, சதா தெறந்தே வெச்சுகிட்டு பொலம்பிட்டே , இது குத்தம், அது நொத்தம்னு-கிட்டு இருந்தா எவ தான் சகிச்சுப்பா..?"
"ஆத்தா , அப்பன் நல்லா வாய மட்டும் வளத்து விட்டுருக்குதுக..... அவஅவ 100 பவுன் , 200 பவுனு கொண்டு வராளுக... எனக்குன்னு வந்து வாச்ச பாரு.... வெட்டிப்பயலுக்கு பொறந்தவ.... பொண்ண மட்டும் ஓட்டி விட்டுட்டு வீட்டுலே உக்காந்துட்டான் , சொம்பப்பய"
"யோவ் ...!!! இந்தேரு ...இம்புட்டு தான் உனக்கு மருவாதி.... எங்கப்பன் காசு இல்லேனா, இரந்து குடிக்குமே தவிர , சொந்த வீட்டுலே களவாடாது....."
"இப்ப என்னத்தடி நான் திருடினேன்"
"ரேசன் கார்டு உன்னைய தவிர எங்கன போயிருக்கும்றேன்..?? இப்ப தானே நாபகம் வருது , ரெண்டு நாளு குடிச்சுக்கிட்டு வந்தியே ..... இப்போல்லே தெரியுது எப்பிடி காசு வந்திருக்கும்னு ..., எவன்கிட்டயோ ரேசன் கார்ட குடுத்து அடமானம் வெச்சுகிட்டு குடிச்சுட்டு வந்திருக்க "
"இப்போ நீ கிட்டக்க இருந்து பாத்தியா நா அடமானம் வெச்சத?"
"கிட்டக்க இருந்து வேற பாக்கணுமா.... உன் லட்சணம் தான் தெரியுமே ......"
"இங்கேரு இங்கனெ பேச்சுக்கு பேச்சு பேசுனே ....செவுள பேத்துருவேன்..."
"பேசுனா என்னைய பண்ணுவ ... பொட்டபய மாதிரி போய் அடமானம் வெச்சுட்டு வந்துருக்க, உனக்கு என்னா மருவாதி..."
அவ்ளோ தான் மருது எழுந்து வந்து சாத்து சாத்து என்று சாத்திவிட்டான்.... "இனி பேச்சுக்கு பேச்சு பேசுவியா" என்று கேட்டுவிட்டு மிதி மிதி என்றும் மிதித்து விட்டான்.
"பாவி, என்னைய போட்டு இப்பிடி பாடாப் படுத்துறியே.... உன்ன பாம்பு புடுங்க, ரேசன் கார்ட போய் எங்கனயோ அடமானம் வெச்சு குடிச்சுட்டு வந்து இப்பிடி அடிக்குறியே..... உன் கையு வெளங்காம போக , உன் காலுல கட்ட மொளைக்க,"
"என் வீட்டுல இருந்துகிட்டே எனக்கு சாபம் குடுக்குறியா....??? ஆமாடி நான் தான் டி அடமானம் வெச்சு குடிச்சேன், அவனவன் பொண்டாடியயெ வெச்சு குடிக்குறான், ரேசன் கார்ட தானே வெச்சு குடிச்சேன், உன்ன இல்லையே,... அதுக்குன்னு கண்ட பயல எல்லாம் வெச்சு அறுக்குற, இனி அவ்ளோ தான் டி... வெளிய போடி" என்று விட்டு தலைச் சிண்டைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் வெளியில் தள்ளினான்.
நிலைகுலைந்து போய் தரையில் விழுந்தவள் கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தாள்..... அக்கம்பக்கம் வேடிக்கைபார்ப்பதை கண்டு எழுந்தவள் அப்படியே தளர்ந்தது விடாமல், சேலையை எடுத்து சரியாக கட்டிக்கொண்டாள். எழுந்து வீட்டுக்குள்ளே போயி குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கிக் கொண்டு விறு விறுவென கிளம்பினாள்.
போகும் வழியில் குழந்தையை படித்துறையில் படுக்க வைத்துவிட்டு குளத்தில் இறங்கி முகம் ,கை கால் அலம்பினாள்.
பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மண்பாதையில் ஊரின் குறுக்கே காணும் வழியில் நடக்கத் தொடங்கினாள்.
நேரே நடந்தவள் வரும் வழியில் இருந்த காளி கோயிலில்... "ஆத்தா நீயே கேளு, எவனாச்சும் ரேசன் கார்ட போயி அடமானம் வெச்சு குடிப்பானா?" என்று வேண்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு நடந்தாள் சாலையில்....
வெயில் கொளுத்தியதும் குழந்தையை முந்தானையால் இழுத்து முடிந்து கொண்டு நடந்தாள். சாலையைத் திரும்பி தோப்பைத் தாண்டி வளைவில் இருந்தது அவள் வீடு......
வீட்டில் கொல்லையில் அவள் அம்மா சட்டியில் மீனைக் கழுவிக் கொண்டிருந்தாள். இவளைக் கண்டதும் அரக்கப்பரக்க வந்ததும் ,"யாத்தே இப்ப எதுக்குத்தா வெயிலா வெளையுற நேரமா கேளம்பியாந்துருக்க, "
"யம்மா " என்று வாய் நுனியில் நின்றிருந்த அழுகை பீறிட்டுக் கொண்டு வெடித்ததும், தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
"இப்போ என்னாத்துக்கு கரையுதவ, எனக்கு ஒண்ணும் இல்ல கண்ணு , வெறும் ஏழு தையலு தேன், குளிகேக்குனு கல்லுலே எறங்கி வரப்ப, காலு வழுக்கி விழுந்தனாக்கும்...... கரயாதவே என்னா பெத்த ஆத்தே.....உன்னாண்ட ஆரு சொன்னா, அந்த தீவட்டி தடியன் சேதுவா , சந்தைக்கு வந்தப்போ பாத்தியா கண்ணு, " என்று தாயும் மகளுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தாள்.....
"ஏ புள்ள செல்லி, போயி அந்த மீன கழுவி குழம்பு பண்ணிட்டு, தோட்டத்துல நாலு கீரைய கிள்ளி கூட்டு ஆக்கிடு" என்று மகளையும் , பேரனையும் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.
"ஏக்கோவ் , ஆத்தா பொய்யு சொல்லுவுது.... அது ஒண்ணும் கீழ விளுவல... நம்ம அப்பாரு தான் குடிச்சுட்டு வந்து சண்டைய போட்டு அம்மாளு மண்டைய கட்டயால உடச்சுச்சு, ஏ யப்பா ...எம்புட்டு ரத்தம் தெரியுமா....." என்று அடுக்கினாள் அவள் தங்கை.
"ஏ கூறுகெட்ட சென்மம்.... இப்ப தான் அவளே வீட்டுல வந்துருக்கா அதுக்குள்ள வாய தொறக்குரியாக்கும்....போ போ ..... சீனியும் , தண்ணியும் வெச்சு அக்காவுக்கு வரக்காப்பியாச்சும் போடு ....." என்று விட்டு சுவற்றில் சாய்த்து வைத்திருந்த பாயை எடுத்து பேரனையும், மகளையும் அதில் அமர்த்தினாள்.
"அத விடுமா நம்ம அப்பா திருந்தவே திருந்தாதா ?
" அத்த விடு மா, ஏதோ குடிபோதைல செஞ்சுடுச்சு..... பெரவன நா கீழ விழுந்து கெடந்ததும் அது தான் தூக்கி சைகிழு பின்னாடி உக்கார வெச்சுகிட்டு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயி தையலும் போட்டு கூட்டியாந்துது.... இருக்குற உன் 3 தங்கசியள குடி இல்லாதவனா பாத்து புடிச்சுக் குடுக்கணும்.... தம்பி உன்ன நல்லா பாத்துக்குதா மா....பிரச்சினை எதுவும் இல்லியே.....உன் மூஞ்சி வேற சரியா இல்ல"
"அதெல்லாம் ஏதும் இல்ல மா.... அங்க நாத்து நடுவை நடக்குது.....உம்மருமவனுக்கு சோறு குடுக்க வந்தேன் .... அப்பிடியே ஒரு எட்டு உன்ன பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்..... ஆனா வருத அவசரத்துல ஒரு வெத்தல பாக்கு கூட உனக்கு வாங்கியாரல நெனைக்கும்போ தான் மனசு வலிக்கு"
" ஏ நீ என்னா விருந்தாளியா ......இது உன் வீடு..... எப்போ வேணாலும் வரலாம்...... என் மவ நல்லா சமத்தா பொறுப்பா குடும்பம் நடத்துதே அது தான் எனக்கு வேணும்."
"அதெல்லாம் ஒரு கொறவும் வராது மா.... சரி நான் இனி பொறப்படட்டுமா"
"ஏ உச்சி வெயில்ல எங்கனே போரவ, வயத்துக்கு ரெண்டு தின்னுட்டு , ராவைக்கு தம்பிக்கு தூக்குவாளில சோத்த போட்டு எடுத்துட்டு போ"
வரக்காபியை குடித்து விட்டு சுருண்டு பாயில் படுத்தவள் தான் , எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை...... வெயில் தாழ்ந்ததும் தங்கை எடுத்துக் கொடுத்த சோத்தை தின்று விட்டு ..... தாய் கொடுத்த தூக்குவாளியில் எடுத்த சோத்தையும் எடுத்துக் கொண்டு,
"ஒரு தடவ நீயும் , தங்கச்சியளும் வீட்டுக்கு வந்துடு போயேன்..... அப்பாவையும் வரச் சொல்லுங்க..... அப்பா எங்க இன்னும் காணல "
"திருவாரூருக்கு உரமூட்ட வாங்கியார போயிருக்காக..... ஒரு நாளு காலம்பர கெளம்பி வாரோம்.....நீ கெளம்பு மா "
"சரி" என்று விட்டு பாதி தூரம் கடந்தவளின் மனதில் சிந்தனை அலைகள்...... 'ரோசத்தில புள்ளையையும் தூக்கிட்டு வந்துட்டேன்....இனி எப்பிடி ரோசங்கெட்டு போறது' என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்...
பாலம் கடந்து நடக்கையில் மருது சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருந்தான்.
இவள் அருகில் வந்து சைக்கிளை நிப்பாட்டிவிட்டு இறங்கினான். இவள் தலை கவிழ்ந்து நின்றாள்.
"இங்கேரு காலம்பர அடிசுடேனு கஷ்டமா போச்சு..... சரின்னுட்டு, இனி குடிக்கபடாது, அங்கன குடிச்சாலும் பொண்டாட்டிய அடிக்கப்படாது , எதையும் விக்கபடாதுன்னு சத்யம் பண்ணிகிட்டேன்.....இன்னிக்கு நாத்து பறிச்ச கூலிய எடுத்துப் போயி ரேசன் கார்ட திருப்பி அரிசியும் வான்கியாந்து வீட்டுல போட்டாச்சு.....உன்னையும், எம்மவனையும் எப்பிடி பிரிஞ்சு இருக்குரதாம்....அதான் சைகிளுல வெரசா மிதிச்சு வந்துட்டு இருந்தேன்....உன்ன அடிச்ச கைய அடுப்புல எரிச்ருப்பேன்... ஆனா இத வெச்சு தான நடவு வாழ்கை ஓடுது...... " என்று குழந்தையை வாங்கி முத்தமிட்டு கண்ணீருடன் அணைத்துக் கொண்டான்.
பின்னர் சைக்கிளை எடுத்து அவளையும் , குழந்தையையும் பின்னால் உட்காரவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்....
"அங்க அத்த , மாமா, உன் தங்கச்சிய எல்லாம் நல்லருக்காகளா...???"
"ம்ம்"
"அடுத்த வாரம் நானும் வரேன்....மூணு பேரும் போயி பாத்துட்டு ஒரு நாளு தங்கிட்டு வருவோம் ...சரியா " என்று விட்டு வேகமாக மிதித்தான் சைக்கிளை மருது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக