வெள்ளி, 19 ஜூலை, 2019

ஆடித்தள்ளுபடி (ஆடிக்கழிவு) உருவான வ‌ரலாறு!


ஆடித்தள்ளுபடி (ஆடிக்கழிவு) உருவான வ‌ரலாறு!

ஆடி மாதம் வந்தாலே அனைவரும் ஆனந்தமாக பஜாரில் அணிவகுக்கின்றனர். ஆடி தள்ளுபடிதான் அவர்க ளை அங்கு தள்ளி வருகிறது. இந்த ஆடித் தள்ளுபடி அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் வியாபார ரகசியமாகவும், நுகர்வோரின் அவசியமாகவும் ஆகிப்போனது. ஆச்சார, அனுஷ்டானங்களில் தென் மாவட்ட மக்கள் தமிழகத்தில் முன்னணி யில் இருப்பர். ஆடி மாதம் வந்தாலே அவர் களுக்கு ஆகாது. நல்ல காரியங்கள் அம் மாதத்தில் நடக்காது. இதனால் வியாபாரம், தொழில்கள் அனைத்துமே மந்தமாகும். வைகாசியில் மங்கல விழாக்களும், ஆனியில் ஆன்மீக விழாக்களும் முடிந்த பின்பு அலைக்கழிக்கும் ஆடி வரும். இதில் கடை வீதி யே காற்றாடும்.


இந்த வியாபார வாட்டத்தை போக்க வணிகர்கள் கண்ட வழியே ஆடிக்கழிவு. இதன்மூலம் தேங்கிய சரக்குகளை தள்ளிவிட முடிகிறது. விற்று மிச்சமான பொருட்களை விலை குறைக்க முடிகிறது. அடுத்து வரும் தீபாவளி ‘மெகா‘ கொள்முதலுக்கு தேவையான முதலையும் தேற்றிக்கொள்ள முடிகிறது. மக்களும் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களை சிக்கனமான விலையில், சலுகை முறையில் ஆடித்தள்ளுபடியில் வாங்கி சேகரிக்க முடிகிறது.

ஆடித்தள்ளுபடியை அறிமுகப்படுத்தியதே நெல்லை சீமைதான். நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு துணிக்கடை முதன்முதலில் ஆடியில் தள்ளுபடி விலையில் ஜவுளி விற்பனையை துவக்கியது. அங்கு கூட்டம் அலைமோதவே, எல்லா பெரிய கடைக்காரர்களும் ஆடித்தள்ளுபடி கடலில் குதித்தனர். தொடர்ந்து, ஆடித்தள்ளுபடி தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவே மாறிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக